பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!
பிரீமியம் ஸ்டோரி
News
புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

கிங் விஸ்வா

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

சிபிக் கடலின் அடியிலிருக்கும் ‘பிகினி பாட்டம்’ என்ற கற்பனை நகர்தான், இந்தக் கதை நடக்கும் இடம். இங்கே இருக்கும் அனைத்து கடல்வாழ் உயிரினங்களுமே மனிதர்களைப்போல குணாதிசயங்களைக் கொண்டவையாகப் படைக்கப்பட்டுள்ளன. இவை பயணம் செய்ய, கார், படகு ஆகிய இரண்டையும் கலந்த ஒரு புது மாதிரியான வாகனம் இருக்கிறது.  நம் உலகத்தில் இருப்பது போலவே, அனைத்தும் பிகினி பாட்டம் நகரிலும் இருக்கும். உணவகங்கள், திரையரங்குகள், வங்கி என அனைத்துமே கடல்வாழ் உயிரினங்களால் அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.   

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

ஸ்பாஞ்ச் பாப் ஸ்கொயர் பேன்ட்ஸ்:

சமையலறையில் நாம் பயன்படுத்தும் மெத்தென்று இருக்கும் அந்தச் சதுர வடிவப் பஞ்சு உயிர்பெற்று, வெள்ளைச் சட்டை, சிவப்பு டை மற்றும் காக்கி நிறக் கால்சட்டை அணிந்து வந்தால் எப்படி இருக்கும்? அவர்தான் அன்னாசிப்பழத்தால் ஆனதொரு வீட்டில் குடியிருக்கும் நம் நாயகன் பாப். தன்னம்பிக்கை, கள்ளங்கபடமற்ற மகிழ்ச்சி, செய்யும் ஒவ்வொரு செயலிலும் மிகுந்த ஆர்வம், மனம் தளராமை, சுறுசுறுப்பு இவைதாம் பாப்-பின் கேரக்டர். இவர் அந்த நகரத்தின் நம்பர் ஒன் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் சமையற்கலைஞராகப் பணிபுரிகிறார்.

இவர் கராத்தே கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பிகினி பாட்டம் நகரில் படகு போன்ற ஒரு வாகனத்தைத்தான் அனைவரும் பயன்படுத்துவார்கள். ஆனால், நம் ஹீரோவுக்குப் படகு ஓட்டத் தெரியாது. ஆகவே, இவர் படகு ஓட்டக் கற்றுக்கொடுக்கும் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து கற்றுக்கொள்கிறார். இவரது படகு ஓட்டத் தெரியாத இந்தக் குணமே, கதைத் தொடரில் பல நகைச்சுவைக் காட்சிகளுக்கு வழிவகுக்கிறது. இதுதவிர, மீன் பிடிப்பது, கடலில் வரும் நீர்க்குமிழிகளை உடைப்பது போன்ற எளிமையான பொழுதுபோக்குகளைக் கொண்ட பாப், ஒரு பயந்த சுபாவம்கொண்ட நாயகன். ஆனால், இவரது விட்டுக்கொடுக்காத குணமே இவரை உலக அளவில் ரசிக்க வைக்கும் ஒரு கார்ட்டூன் கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறது.

பாப்-பின் நண்பர்:

பேட்ரிக் ஸ்டார் (நட்சத்திர மீன்):


ஒரு பாறைக்கு அடியில் வசிக்கும் பேட்ரிக்தான், பாப்-பின் நெருங்கிய நண்பன். பாப்-பைவிட மந்தபுத்தி கொண்ட பேட்ரிக், கதைத்தொடரில் பல சாகசங்களை மேற்கொள்ள முழுக் காரணமாக இருப்பவர். ஜாலியான இவருடைய செய்கைகளால், அடிக்கடி வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார். பாப்-பைத் தூண்டிவிடும் பேட்ரிக்கும் பாப்-பும் ஓர் அட்டகாசமான நகைச்சுவை ஜோடியாகத் திகழ்கிறார்கள்.

ஸ்க்விட்வர்ட்:

பாப் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசிக்கும் இந்தக் கடல்வாழ் உயிரினம், நிகழ்கால மனிதர்களைக் கிண்டல் செய்ய உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் ஆகும். எந்த விதமான திறமையும் இல்லாமல், ஆனால், அனைத்துத் திறமைகளும் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு வாழும் இந்த ஸ்க்விட்வர்ட், அடிக்கடி தன்னை ஒரு மாபெரும் ஓவியராகக் கற்பனை செய்துகொண்டு, தன்னையே பல கோணங்களில் வரைந்து, தன்னுடைய வீட்டில் அலங்காரம் செய்து வைக்கும். எந்த வேலையையும் செய்யாமல், பாப்-பைக் கிண்டல்செய்து, அவர் செய்யும் அனைத்து வேலைகளையும் தொடர்ந்து குற்றம் கண்டுபிடித்து விமர்சனம் செய்யும். பாப் பணிபுரியும் உணவகத்தையோ, அங்கு சாப்பிட வருபவர்களையோ பிடிக்காமல், தொடர்ந்து வெறுக்கும்.

யூஜீன்:

கடல் நண்டான யூஜீன்தான், நம் நாயகன் பாப் பணிபுரியும் உணவகமான ‘கிரஸ்டி கிராப்’பின் சொந்தக்காரர். பணத்தின் மீது மிகுந்த ஆசைகொண்ட யூஜின், ஒரு கப்பல் நங்கூரத்தில் வசிக்கிறார். இவருக்கும், இதே நகரத்தில் இருக்கும் ‘சம் பக்கெட்’ என்ற போட்டி உணவகத்தின் உரிமையாளரான பிளாங்க்டன் என்பவருக்கும் இடையே நடக்கும் போட்டிகள் மிகவும் பிரபலம்.

புதிய உணவகத்தின் ரகசிய ரெசிப்பி:

ஒருநாள், பாப்-பும் பேட்ரிக்கும் நகரத்தைச் சுற்றி வரும்போது, அங்கே புதிதாக ஒரு ஹோட்டல் திறந்திருப்பதைக் கண்டு, உள்ளே செல்கிறார்கள். நங்கூரத்தாலான மெனு கார்டு, பழைய மரத்தால் ஆன டேபிள் என்று வித்தியாசமாக இருக்கும் அந்த ஹோட்டலில், இருவரும் சாண்ட்விச் ஆர்டர் செய்கிறார்கள். அட்டகாசமான சுவையில் இருக்கும் அந்த சாண்ட்விச், இருவரையும் மயக்கிவிடுகிறது.  அதே சமயம், இந்த ஹோட்டல் தொடர்ந்து இயங்கினால், தமது ஹோட்டலில் வியாபாரம் நடக்காது என்ற உண்மையும் அவர்களுக்கு உறைக்கிறது.

ஆகவே, அந்தப் புதிய ஹோட்டலின்  சாண்ட்விச் ரெசிப்பியை எப்படியாவது தெரிந்துகொள்ள வேண்டும் என முயல்கிறார்கள் நம் ஹீரோக்கள். ஆனால், வடிவேலு மாறுவேஷத்தில் போவதுபோல, இவர்களின் அனைத்து முயற்சிகளும் தடைப்படுகின்றன.

• அந்த சாண்ட்விச் சுவையின் மர்மம் என்ன?

• அந்த ரெசிப்பியை நண்பர்களால் கைப்பற்ற முடிந்ததா?

• பிளாங்க்டனின் அதிரடித் திட்டம் என்ன?

என்பனவற்றை ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நிக்லோடியன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் தொடராக 1999 முதல் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடரை ஒவ்வொரு மாதமும் ஐந்து கோடி பேர் பார்த்து ரசிக்கிறார்கள். அதே சமயம், இதில் 40 சதவிகிதம் பேர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதிலிருந்தே இந்தத் தொடரின் வெற்றியை நாம் அறியலாம். அதைப்போலவே, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா, பிரிட்டனின் பிரதமர் கோர்டன் பிரௌன் போன்றவர்கள், “இந்தத் தொடரைக் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்வதால் உறவுகள் மேம்படுவதோடு, இயற்கைச் சூழலைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்” என்று ஆதரவளித்துவருகின்றனர்.

சமகாலச் சமுதாயத்துக்குத் தேவையான பல நல்ல குணங்களை, விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஸ்பாஞ்ச் பாப், இந்த இன்டர்நெட் உலகில் ஒரு முக்கியமான கார்ட்டூன் தொடராக விளங்குவதில் ஆச்சர்யமே இல்லை.

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

ஸ்டீஃபன் ஹில்லன்பர்க் (கதாசிரியர்):

ஸ்டீஃபன் சிறு வயதிலேயே கடல்மீதும் கடல்வாழ் உயிரினங்கள் மீதும் அதீத ஆர்வம் காட்டினார். அதே நேரம், ஓவியம் வரைவதிலும் திறமைகொண்டவராக இருந்தார்.

ஃபிரெஞ்சு கடல்வாழ் ஆராய்ச்சியாளரான ஜாக் ஈவ் கஸ்டோவின் பல ஆவணப் படங்களைப் பார்த்து வளர்ந்தார் ஸ்டீஃபன். அதனாலேயே கல்லூரியில் மரைன் பயாலஜி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி இவர் வரைந்து உருவாக்கிய காமிக்ஸ், மாணவர்களுக்குப் பாடம் எடுக்க உதவியது. அதன் பின்னர் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, ஓவியக் கல்லூரியில் படித்து, முழுநேர ஓவியராக, கார்ட்டூனிஸ்ட் ஆக மாறினார்.

ஓர் ஆவணப் படத் திரையிடலில், தொலைக்காட்சி கார்ட்டூன் தொடர் தயாரிப்பாளரான ஜோ முர்ரேவைச் சந்தித்தார். ஸ்டீஃபனைப் பற்றித் தெரிந்துகொண்ட ஜோ, அவரது கார்ட்டூன் தொடருக்கு இயக்குநராக இவரையே தேர்ந்தெடுத்தார். அதன்பின்னர், கடல் உயிரியலைச் சார்ந்து ஸ்டீஃபன் உருவாக்கிய ‘பாப்’ என்ற கதாபாத்திரம் பெற்ற வரவேற்பு, அவரை முழுநேரப் படைப்பாளியாகவே மாற்றிவிட்டது.

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

டேவிட் டெக்ரான்ட் (ஓவியர்):

சிறு வயதிலிருந்தே காமிக்ஸ், கார்ட்டூன்மீது ஆர்வத்துடன் வளர்ந்த டேவிட், அவர் ஆசைப்பட்டபடியே ஒரு காமிக்ஸ் ஓவியராகிவிட்டார். கார்ட்டூன் கேரக்டர்களின் பொம்மைகளைச் சேகரிப்பதிலும் குழந்தைகளுக்கென்று தனியாகக் காமிக்ஸ் கதைகளை உருவாக்குவதிலும் நேரத்தைச் செலவிடுகிறார். இவருடைய ஓவியங்களைப் பார்த்தால் கோபத்தில் இருப்பவர்களும் சிரித்துவிடுவார்கள்.

புத்தக உலகம் - ஸ்பாஞ்ச் பாய்!

கதை: அச்சத்தை உண்டாக்கிய சாண்ட்விச்

கதாசிரியர்: ஸ்டீஃபன் ஹில்லன்பர்க்

ஓவியர்: டேவிட் டெக்ரான்ட்

மொழி: ஆங்கிலம்

வயது:
4 வயது முதல் அனைவருக்குமான காமிக்ஸ் தொடர்

வெளியீடு: ஜூன் 8, 2017.

பதிப்பாளர்:
யுனைடெட் பிளங்க்டன்

புத்தக அளவு:
16.8 x 25.9 செ.மீ

பக்கங்கள்:
36 முழு வண்ணப் பக்கங்கள்

விலை: $3.99

கதை: புதிய உணவகத்தின் ரெசிப்பியைத் திருட நினைக்கும் பாப் & கோ மற்றும் பிளாங்க்டனின் காமெடிகள்

கதை வரிசை: 67-வது காமிக்ஸ் இதழ்.

சிறப்புகள்: உலகில் இருக்கும் அனைத்து சிறுவர் இலக்கிய, காமிக்ஸ், கார்ட்டூன் விருதுகளையும் பெற்ற ஒரே தொடர்.

சிறப்பு அம்சம்: இதுவரை இரண்டு அனிமேஷன் கார்ட்டூன் படங்கள் வந்துள்ளன.