Election bannerElection banner
Published:Updated:

சுரங்கம் தோண்டி காதலியை வேவுபார்த்த முன்னாள் காதலன்!

சுரங்கம் தோண்டி காதலியை வேவுபார்த்த முன்னாள் காதலன்!
சுரங்கம் தோண்டி காதலியை வேவுபார்த்த முன்னாள் காதலன்!

சுரங்கம் தோண்டி காதலியை வேவுபார்த்த முன்னாள் காதலன்!

'தான் வெட்டிய குழியில் தானே விழுவார்' என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருப்போம் . அதற்குச் சான்றாவதுபோல ஒரு சம்பவம் மெக்சிகோ நாட்டில் நடந்துள்ளது. தன் முன்னாள் காதலியை வேவுபார்ப்பதற்காக வித்தியாசமான திட்டத்தைத் தீட்டிய காதலர், அதன் பிடியில் தானே சிக்கி இன்று சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். வடக்கு மெக்ஸிகோ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், 14 ஆண்டுகளாகத் தன் காதலியுடன் வாழ்ந்துவந்தார்.  திருமணம் செய்யாமல் 'லிவ்விங் டு கெதர்' அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வாழ்பவர்கள் கணவன்-மனைவியாக அங்கீகரிக்கப்படுவார்கள். 

Picture Credit : CNN

14 ஆண்டுகளுக்குப் பிறகு, 'காதலர் தன்மேல் அதிக பொறாமைப்படுகிறார்' என்ற காரணத்தைக் கூறி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அந்தப் பெண். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலியிடம் இருந்து பிரிந்து வாழ வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். தனித்தனியாக வாழத் தொடங்கினார்கள். ஆனாலும், முன்னாள் காதலியின் அன்றாட செயல்பாடுகளை வேவுபார்க்க விரும்பினார், அந்த 50 வயது முன்னாள் காதலர். இதற்காக ஒரு திட்டம் தீட்டினார். அந்தப் பெண் வசிக்கும் வீட்டின் அருகே, ஒரு சுரங்கப்பாதையைத் தானே  தோண்டினார். பல நாள்களைச் செலவழித்து சுரங்கப்பாதையை அமைத்தும்விட்டார். அதன்பிறகு, அந்த சுரங்கத்தில் இருந்து தன் முன்னாள் காதலியின் நடவடிக்கைகளை வேவு பார்க்கத் தொடங்கியிருக்கிறார்.

Picture Credit : CNN

பல நாள்கள் கழித்து அந்தப் பெண், அருகில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில், 'என் வீட்டுக்கு அடியில் யாரோ சுரண்டுவதுபோல சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. முதலில், அது பூனையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நாளுக்கு நாள் சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.  என் வீட்டைச் சுற்றி ஆராய்ந்தபோது, அது என் முன்னாள் காதலரின் கைவரிசை என்று தெரிந்தது. அவர்மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதாக அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.

புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று சுரங்கப்பாதையை ஆராய்ந்தனர் போலீஸார். அப்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாவற்றையும் இழந்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் அந்த நபர். அவரை மீட்ட போலீஸார், தேவையான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது, வீட்டு வன்முறைச் சட்டத்தின் கீழ் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார், அந்த முன்னாள் காதலர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு