Published:Updated:

”டெஸ்லாதான் உலகின் சிறந்த மேதை!” - ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்ன டெஸ்லா யார் ? #HBDTesla

”டெஸ்லாதான் உலகின் சிறந்த மேதை!” - ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்ன டெஸ்லா யார் ? #HBDTesla
”டெஸ்லாதான் உலகின் சிறந்த மேதை!” - ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்ன டெஸ்லா யார் ? #HBDTesla

ஜூலை 10, 1856 ஆம் வருடம். நள்ளிரவு! Smiljan என்ற அந்த கிராமத்தில் இடி, மின்னல், பெரும் புயலென வானம் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருக்கிறார் Đuka என்ற அந்த பெண்மணி. குழந்தை முழுவதும் வெளியே வருவதற்கு முன்பே, பிரசவம் பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவச்சி. இந்த மாதிரி அபசகுணத்திலா குழந்தை பிறக்கவேண்டும்? இது இருளின் குழந்தையாக தான் இருக்கப்போகிறது என்று வருத்தப்படுகிறாள். ஆனால் மேலே வெட்டும் மின்னலை ஓரக்கண்ணால் பார்த்தவாறு, Đuka புன்முறுவலோடு சொல்கிறார், “இல்லை, இது ஒளியின் குழந்தை!” என்று. அந்த குழந்தை தான் நிகோலா டெஸ்லா!

அந்த குழந்தைக்கு இன்று 162ஆவது பிறந்த தினம்! இயல்பாகவே, ஒருவர் இறந்தபின்பு, நாம் அவரின் 162வது பிறந்தநாளையெல்லாம் நினைவுக்கூர்ந்து கொண்டாடுகிறோமா என்றால் சந்தேகம் தான். ஆனால் டெஸ்லா ஒன்றும் இயல்பான மனிதர் இல்லையே! ‘Futurist’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால், “நிகோலா டெஸ்லா தெரியாதா?” என்று அந்த அகராதியே நம்மை ஏளனம் பேசும்! நாம் இன்று வாழும் இந்த நவீன சமுதாயாத்தை கட்டமைக்க அவரின் கண்டுபிடிப்புகளில் பல உதவி இருக்கிறது. விரல்விட்டு எண்ண முடியாத அளவிற்கு கொட்டிக்கிடக்கும் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை சுலபமாக நாம் வலைத்தளங்களில் பார்த்துவிட முடியும். ஆனால் அவர் பாதியில் விட்டுவிட்ட அல்லது இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்று ஒதுக்கிவைத்த இந்த விஷயங்கள் பற்றித் தெரியுமா?

எண்ணங்களை பிரதியெடுக்கும் கேமரா (Thought Camera)

“இது ஏன் சாத்தியமில்லை?” இது தான் டெஸ்லா அன்றாட கேட்கும் கேள்வி! அதன் விளைவாக உதித்த ஒரு யோசனை தான் இந்த Thought Camera. ஒரு முறை டெஸ்லா இவ்வாறு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கிறார். “நாம் ஒரு எண்ண ஓட்டத்தில் இருக்கும்போது, அது காட்சியாக நம் கண்முன்னே கற்பனையில் விற்கிறது. நிச்சயம் அது நம் விழித்திரையில் பிரதிபலிக்காமல் இருக்காது. அப்படி பிரதிபலிப்பதை சரியான கருவிகள் கொண்டு நாம் பிரதியெடுத்து திரையில் காண்பிக்கமுடியும் என்று நான் பலமாக நம்புகிறேன்!” என்றார். இது ஒருவேளை நடந்திருந்தால், இந்நேரம் அனைவரின் மனங்களையும் நாம் படித்துக் கொண்டிருப்போம்!

வயர்லெஸ் எனர்ஜி (Wireless Energy)

இப்போது இது பரவலாக பேசப்பட்டு வந்தாலும் கிட்டத்தட்ட 116 ஆண்டுகளுக்கு முன்பே டெஸ்லா இது சாத்தியம் என முயற்சிகள் எடுத்தார். 1901ஆம் வருடம், பிரபல நிதியாளாரான ஜே.பி.மார்கன் டெஸ்லாவிற்கு $150,000 கொடுத்து 185 அடி உயரத்தில் ஒரு டவர் ஒன்றை நிறுவாமாறு கேட்டுக்கொள்கிறார். இதன் மூலம் நியூயார்க் நகரத்தில் இருந்துக்கொண்டே தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும் கப்பல்களுக்கு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்ப முடியும். Wardenclyffe Tower என்றழைக்கப்பட்ட அந்த டவரின் வேலை பாதி முடிந்தத் தருவாயில், டெஸ்லாவிற்கு தோன்றுகிறது அந்த யோசனை! வெறும் காற்றை மட்டும் கொண்டே மின்சாரத்தைக் கடத்தினால் என்ன? இந்த டவரை அடித்தளமாக வைத்து இந்த திட்டத்தை தொடங்கினால், மொத்த நியூயார்க் நகரத்திற்கும் சுலபமாக மின்சாரம் கொடுத்துவிட முடியுமே? ஆனால் மார்கன் அவர்களுக்கு எங்கே இது சாத்தியமானால் மின்சாரத் துறையில் தான் வைத்திருக்கும் பங்குகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிடிவாதமாக கூடுதல் பணம் ஒதுக்க மறுத்துவிட்டார். அந்த திட்டம் கைவிடப்பட்டது.

செயற்கை கடல் அலைகள் (Artificial Tidal Waves)

அறிவியலைக் கொண்டு போர்களில் பல ஜாலங்கள் நிகழ்த்தி சுலபமாக வெற்றிப் பெற முடியும் என்று உறுதியாக நம்பினார் டெஸ்லா. 1907ஆம் வருடம் நியூயார்க் வேர்ல்ட் என்ற நாளேட்டில் இப்படி ஒரு செய்தி வந்தது. டெஸ்லாவின் இராணுவ கண்டுபிடிப்புகளில் ஒன்றாக வரவிருக்கிறது 'செயற்கை கடல் அலைகள்'. கடலுக்கடியில் வெடிக்கக்கூடிய வெடிப்பொருள்களை பதுக்கிவைத்து விட்டால், எதிரிகள் நம்மை சூழும்போது வெறும் தந்தி மூலம் அந்த வெடிகளை வெடிக்கச் செய்ய முடியும். இதன் மூலம் கடலில் பெரிய அளவில் செயற்கை அலைகளை உருவாக்கி எதிரிகளின் மொத்தக் கடற்படையையும் மூழ்கடிக்க முடியும். இப்படி சொல்லிவிட்டு அந்த செய்தித்தாளே அதற்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கியது. “இதை சாத்தியப்படுத்தினால், நம் கடற்படைக்கே வேலையில்லாமல் போய்விடும். இது உலக அமைதிக்கு எதிரான விஷயமும் கூட!” என்று எச்சரித்தது. அந்த முயற்சி அதோடு கைவிடப்பட்டது.

மின்சாரம் கொண்டு இயங்கும் சூப்பர்சோனிக் ஏர்ஷிப் (Electric-Powered Supersonic Airship)

சிறுவயது முதலே டெஸ்லாவிற்கு பறப்பது என்ற அறிவியல் விந்தையில் நாட்டம் அதிகம். மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்கில் சிறந்து விளங்கிய டெஸ்லா, Reconstrcution என்ற ஒரு பத்திரிக்கையில் தான் இப்போது செய்துக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் குறித்து கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் வெறும் மின்சாரம் மட்டும் கொண்டு இயங்கும் அதிவேக விமானம் சாத்தியமென்றும், அதன்மூலம் மக்கள் போக்குவரத்தையும் நிகழ்த்தமுடியும் என்று கூறினார். நிலத்தில் இருந்து வெறும் 8 மைல்கள் உயரத்தில் பறக்கக் கூடிய இதில், நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகரத்திற்கு வெறும் 3 மணி நேரங்களில் சென்று விட முடியும் என்று ஆச்சர்யப்படுத்தினார். இதன் மூலம் எரிவாயுவின் பயன்பாட்டை குறைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் அந்த முயற்சியும் பின்னாளில் கைவிடப்பட்டது.

அவரது கண்டுபிடிப்புகளை மற்றவர்கள் திருடுவதைக் குறித்து கேட்டபோது, “அவர்கள் என் கண்டுபிடிப்புகளை திருடுவது எனக்கு கவலை அளிக்கவில்லை. சொந்தமாக யோசிக்கும் அளவிற்கு அவர்களுக்கு திறன் இல்லை என்பது தான் எனக்கு கவலை அளிக்கிறது!” என்றார். தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களை கொண்டாடும் நாம் டெஸ்லாவை ஏனோ கொண்டாட மறுக்கிறோம். பலராலும் இன்றுக் கொண்டாடப்படும் தொழிலதிபர் எலான் மஸ்க் தான் அறிமுகப்படுத்திய எலக்ட்ரிக் கார்களுக்கு டெஸ்லாவின் பெயரை வைத்துக் கவுரவப்படுத்த, ஏதோ இன்றுவரை டெஸ்லாவின் பெயரை மட்டுமாவது சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!

இவ்வுலகமே மெச்சும் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்களிடம் ஒரு பத்திரிகையாளர் இப்படி கேட்டார். “இந்த உலகத்திலேயே மிக சிறந்த மேதையாக நீங்கள் இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?” கொஞ்சமும் யோசனையின்றி  ஐன்ஸ்டின், “எனக்கு எப்படி தெரியும்? இது நீங்கள் டெஸ்லாவிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா?" என்றார். அது தான் டெஸ்லா!