Election bannerElection banner
Published:Updated:

`நான் 3 நாள்களாக அழுது விட்டேன்.. இது உங்கள் முறை! - காதலனுக்கு`வெங்காய’ அதிர்ச்சி கொடுத்த காதலி

வெங்காய மூட்டைகள்
வெங்காய மூட்டைகள்

``அவரது காதலன் அழுதானா இல்லையா என எனக்குத் தெரியவில்லை; ஆனால், கொட்டப்பட்ட வெங்காயங்கள் அழுகி வருவதால் வீசும் துர்நாற்றத்தால் நான் அழுதுகொண்டிருக்கிறேன்”

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று பெரும்பான்மையான நாட்டு மக்களைக் கலங்கவைத்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செயல், சீனா மட்டுமல்லாது தற்போது உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் செய்தியாகி உள்ளது.

ஜாவோ என்ற குடும்பப் பெயரால் அறியப்படும் அந்த இளம்பெண், ஒரு வருடத்திற்கு முன்னாள் கிழக்கு சீனாவின் ஷாண்டோங்கில் உள்ள ஜிபோ பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை ஒரு வருடக் காலமாகக் காதலித்து வந்துள்ளார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட, காதலை முறித்துக்கொண்டுள்ளனர். அதன்பின், நெடுந்துயரில் அந்தப் பெண் இருந்து வந்துள்ளார். சுமார் மூன்று நாள்களாக தனது காதல் வாழ்வை நினைத்து அழுது கண்ணீர் வடித்துள்ளார். இந்நிலையில், தன்னை ஏமாற்றிய தனது முன்னாள் காதலனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தான் அழுததைப் போலவே அவரும் அழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது வீட்டு முகவரிக்கு 1000 கிலோ சிவப்பு வெங்காயத்தை டோர் டெலிவரி செய்யுமாறு காய்கறி அங்காடி ஒன்றுக்கு ஆர்டர் செய்துள்ளார்.

வெங்காய மூட்டைகளைப் பார்க்கும் காதலர்
வெங்காய மூட்டைகளைப் பார்க்கும் காதலர்

இதனிடையே, ஆர்டர் செய்யப்பட்ட 1,000 கிலோ சிவப்பு வெங்காயத்தை மூட்டைகளாகக் கட்டிய அங்காடி ஊழியர்கள், அவற்றை ஒரு ட்ரக் மூலம் அந்த நபர் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள யாரையும் தொடர்புகொள்ள வேண்டாம் என அங்காடி ஊழியர்களிடம் ஜாவோ அறிவுறுத்தியதோடு, அவரின் வீட்டு வாசலில் அனைத்து வெங்காயங்களையும் கொட்டிவிட்டு வரச்சொல்லியுள்ளார். மேலும், முன்னாள் காதலனுக்கு அனுப்பப்பட்ட வெங்காய மூட்டைகளின் ஒன்றின் மேல் மட்டும், ``நான் மூன்று நாள்களாக அழுது விட்டேன்; இது உங்கள் முறை” என்ற வசனத்தையும் அத்தோடு இணைத்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இளம்பெண் ஜாவோவுக்கும் தனது முன்னாள் காதலனுக்கும் இடையே ஏற்பட்ட காதல் கசப்பால் நடந்தேறியுள்ள இந்த சுவாரஸ்ய சம்பவத்தின் ஒரு பகுதியாக, அந்த நபரின் வீட்டு வாசலில் கொட்டப்பட்ட வெங்காயங்களை, அவர் தலையில் கைகளை வைத்தவாறு பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் சீன சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது, உலக அளவில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்து இந்தக் காரியத்தைச் செய்ததாக, சீன உள்ளூர் ஊடகத்திடம் பேசிய ஜாவோ, ``காதல் முறிவுக்குப் பிறகு வீட்டில் மூன்று நாள்கள் நான் அழுதுகொண்டே இருந்தேன். ஆனால், அவர் அது பற்றிய கவலை இல்லாமல் சுற்றித் திரிவதாக எனது நண்பர்கள் மூலம் பெற்ற தகவல்களினால் ஆத்திரமடைந்தேன். எனவே, நான் அழுததைப் போலவே அவரும் அழ வேண்டும் என்பதற்காக ஆயிரம் கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்தேன். நான் அழுததைப் போலவே அவரும் அழுவார் என்ற நம்பிக்கையிலும், கண்ணீரின் சுவையை அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு காரியத்தைச் செய்து முடித்தேன்’’ என்று கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து சீன உள்ளூர் ஊடகத்திடம் பேசிய ஜாவோவின் காதலன், அவரிடம் உள்ள அதிகப்படியான குழந்தைத் தனத்தால் அவரைப் பிரிந்து சென்றதாக கூறியுள்ளார். காதல் கசப்பால் நடந்த பிரிதலில், நான் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை என அனைவரிடம் கூறி வருகிறார். வெறுமனே, அழாததற்காக நான் கெட்டவனாகி விட முடியுமா எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெங்காய மூட்டைகள்
வெங்காய மூட்டைகள்

இருவரின் காதல் விநோதங்கள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் குடியிருப்பு வாசி ஒருவர், ``அவரது காதலன் அழுதானா இல்லையா என எனக்குத் தெரியவில்லை; ஆனால், கொட்டப்பட்ட வெங்காயங்கள் அழுகி வருவதால் வீசும் துர்நாற்றத்தால் நான் அழுதுகொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு