தன் விருப்பமின்றி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய நபருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் வெற்றியும் பெற்று 4,50,000 டாலர்களை ( இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்) நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர். அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்தவர் கெவின் பெரிலிங். இவர் தனியார் நிறுவனமொன்றில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் பணியாற்றிய அலுவலகத்தின் ஊழியர்கள் ஆச்சர்யமூட்டும் வகையில் பெர்லிங்கின் பிறந்தநாளைக் கொண்டாட எண்ணினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவருக்குத் தெரியாமல் ஒரு பிறந்தநாள் விழாவையும் ஏற்பாடு செய்தனர். அந்தத் திடீர் விழாவால் பெர்லிங் அதிர்ச்சி அடைந்ததோடு அவருக்கு `பேனிக் அட்டாக்' (Panic attack) ஏற்பட்டது.
ஒருவர் அதிகமாக அச்சமுற்றாலோ, ஆவேசப்பட்டாலோ தன்னிலை இழந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டே மயங்கி விழுவதையும், பேச்சு மூச்சின்றிக் கிடப்பது அல்லது படபடப்பாக இருப்பதையும் கவனித்திருக்கலாம். இதற்கு உளவியலில் `ஆங்சைட்டி அட்டாக் (Anxiety attack)' அல்லது `பேனிக் அட்டாக் (Panic attack)' என்று பெயர். பெர்லிங் சிறுவயதிலிருந்தே உளவியல் ரீதியிலான பாதிப்புகளை உடையவர். அவருக்கு அதிர்ச்சியான விஷயங்களைப் பார்க்கும்போது பேனிக் அட்டாக் ஏற்பட வாய்ப்புள்ளதாம்.
தன்னுடைய உடல்நிலை கருதி தனக்கு எந்தவிதமான பிறந்தநாள் கொண்டாட்டங்களும் வேண்டாம் என பெர்லிங் தன்னுடைய மேனேஜரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. அதையும் மீறி அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் பெர்லிங்குக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெர்லிங் அந்த இடத்தை விட்டு வெளியேறி தன் காருக்குச் சென்று தன்னைத்தானே ஆசுவாசப்படுத்தி உள்ளார். அதன்பிறகு தடைப்பட்ட கொண்டாட்டங்களுக்கு தன் சக ஊழியர்களிடம் அவர் மன்னிப்பும் கோரி உள்ளார்.

மறுநாள் நடைபெற்ற ஒரு மீட்டிங்கில் பெர்லிங்கின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உடன் பணியாற்றியவர்களின் மகிழ்ச்சியைக் கெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கேலி பேசப்பட்டார். இதனால் மற்றொரு முறை அவருக்கு பேனிக் அட்டாக் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்லுமாறு அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்கள் நடந்து இரண்டு நாள்களுக்கு பிறகு, வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக அவருக்குச் செய்தி வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் ஆத்திரமடைந்த பெர்லிங் நீதிமன்றத்தில் தான் பணியாற்றிய நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பெர்லிங்கை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக 3,00,000 டாலர்களும், வேலையைவிட்டு அனுப்பியதற்காக 1,50,000 டாலர்களும் என மொத்தம் 4,50,000 டாலர்கள் அந்நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜூலி பிரேசில், ``பெர்லிங்கை வேலையைவிட்டு அனுப்பியதில் நிர்வாகம் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டதால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது" எனக் கூறி உள்ளார்.