Election bannerElection banner
Published:Updated:

ஸ்டூடியோவில் கண்ணீர் விட்ட ஷிஷிர்... முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரால் நெகிழ்ந்த வங்கதேசம்!

தாஷ்னுவ அனன் ஷிஷிர்
தாஷ்னுவ அனன் ஷிஷிர் ( AP image )

பங்களாதேஷ் நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் ஷிஷிர்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்படும் திருநங்கை சமூகத்திலிருந்து பங்களாதேஷின் முதல் செய்தி வாசிப்பாளராக உருவாகியுள்ளார் தாஷ்னுவ அனன் ஷிஷிர். செயல்பாட்டாளரான இவர், திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்தார். கடந்த 8-ம் தேதி மகளிர் தினத்தன்று, பங்களாதேஷ் நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார் ஷிஷிர். முதல் செய்தி வாசிப்பை முடித்தபிறகு அவருக்குக் கண்ணீர் வழிந்தது. உடன் வேலை செய்பவர்கள் அவரை அணைத்துக்கொண்டு தேற்றிய காட்சிகள், அவர் கடந்துவந்த வலிகளை காண்போரையும் உணரச்செய்து கலங்கச் செய்தன.

பங்களாதேஷில் 15 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். அவர்கள் பரவலான ஒடுக்குமுறை மற்றும் வன்முறையை தினமும் எதிர்கொள்கிறார்கள். பெரும்பாலும் யாசகம் கேட்பது, பாலியல் தொழில் செய்வது என வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தாஷ்னுவ அனன் ஷிஷிர்
தாஷ்னுவ அனன் ஷிஷிர்
AP image

தானும் பல ஆண்டுகளாக பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வந்ததாகக் கூறுகிறார் ஷிஷிர்.

``பாலியல் கொடுமைகள் மனதுக்கு மிகுந்த வலியை தரக்கூடியவை. வாழ்க்கையில் பல கஷ்டங்களை பார்த்த நான், நான்கு முறை தற்கொலைக்கு முயன்றேன். என் அப்பா என்னுடன் பேசுவதை பல ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்” என்று கூறும் 29 வயது ஷிஷிர், ``சமூக அழுத்தத்தால், நான் ஆண்போல நடந்துகொள்ள வேண்டும் என்று என் அப்பா என்னை கண்டித்தார். என்னால் அங்கு இருக்க முடியவில்லை. என்னால் குடும்ப அடக்குமுறையை சமாளிக்க முடியாதபோது, சுதந்திரமாக வாழ நினைத்த நான் வீட்டை விட்டு வெளியேறினேன்" என்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறி தலைநகர் டாக்காவிலும், பின்னர் மத்திய நகரமான நாராயங்கஞ்சிலும் தனியாக வசித்து வந்துள்ளார் ஷிஷிர். பின் ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டவர், படித்துக்கொண்டே நாடகங்களில் நடித்துள்ளார். தான் மட்டும் அல்லாது தன் சமூகமும் வளர வேண்டும் என்ற நோக்கில் தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தார் ஷிஷிர்.

ஜனவரி மாதம், டாக்காவில் உள்ள ஜேம்ஸ் பி கிராண்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தில் சமூக நலத் துறையில் முதுகலை பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றார்.

জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে বৈশাখীর অচলায়তন ভাঙ্গার গল্প

Posted by Boishakhi News on Tuesday, March 9, 2021

LGBTQ சமூகம் தெற்காசிய நாடுகளில் பரவலான பாகுபாட்டையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிறது. கடந்த 2013-ம் ஆண்டுதான் பங்களாதேஷில் திருநங்கையர் மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டுதான் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. காலப்போக்கில் திருநங்கைகளுக்கான உரிமைகள் கிடைத்து வருவது வரவேற்கத்தக்கது.

இந்நிலையில், ஷிஷிர் மகளிர் தினத்தன்று செய்தி வாசித்ததை, பழமைவாதம் முற்றியிருக்கும் பிற்போக்கு நாட்டில் ஒரு வரலாற்று நிகழ்வாக பலரும் கொண்டாடுகின்றனர். சில பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் அபாயம் இருந்தபோதிலும், ஷிஷிருக்கு அவர் விரும்பும் சமூக மாற்றத்தை முன்னிட்டு வாய்ப்பு அளிப்பதில் போயிஷாகி டிவி உறுதியாக உள்ளதாக, அதன் செய்தித் தொடர்பாளர் ஜுல்பிகர் அலி மானிக் தெரிவித்திருக்கிறார். ஷிஷிர், ``பல சேனல்களுக்கு ஆடிஷனுக்குச் சென்றாலும், `போயிஷாகி' மட்டுமே எனக்கு வாய்ப்பு அளித்தது'' என்கிறார்.

தாஷ்னுவ அனன் ஷிஷிர்
தாஷ்னுவ அனன் ஷிஷிர்
AP image
`பிள்ளைகளை என் வகுப்புக்கு விரும்பி அனுப்புறாங்க!’ - பரதத்தில் சாதிக்கும் திருநங்கை #SheInspires

முதன்முறையாக நேரலையில் தோன்றியபோது, ஷிஷிர் மிகவும் பயந்துள்ளார். ``நான் நிகழ்த்திய மேடை நாடகங்களைப் பற்றி சிந்திக்கவும், அங்கு நான் கற்றுக்கொண்ட நுட்பங்களைப் பின்பற்றவும் முயன்றேன். ஆனால் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தேன். திருநங்கையர் துயரமான வாழ்வை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. அவர்கள் சமூகத்தை எதிர்த்து தங்கள் திறமைக்கான உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்'' என ஷிஷிர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு