Published:Updated:

`உலகின் உயரமான நிதியுதவிப் பெட்டி!’ - உணவு தேவைக்காக விற்கப்பட்ட புர்ஜ் கலீஃபா விளக்குகள்

புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வண்ண விளக்குகள் ஒவ்வொன்றும் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ்... கடந்த சில மாதங்களாக உலக மக்கள் உச்சரிக்கும் ஒரு பெயராகிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாகக் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் உலக நாடுகளின் பெருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் அசைத்து பார்த்திருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு தற்போது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

புர்ஜ் கலீஃபா
புர்ஜ் கலீஃபா

துபாய் என்றாலே அனைவருக்கும் ஒரு படம் நினைவில் வரும் என்றால் அது உலகிலே உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா மட்டும்தான். விண்ணைத் தொடும் உயரம் மட்டுமல்லாது வெளிப்புறத்தில் இருக்கும் அதன் விளக்குகள் பல விஷேச நேரங்களில் விதவிதமாக ஒளிர்ந்து பார்க்கும் மக்களை பரவசம் அடையச் செய்யும். புர்ஜ் கட்டடம் உலகளவில் சுற்றுலாப் பயணிகளை துபாய் பக்கம் இழுப்பதாக இருந்தது. ஆண்டுதோறும் லட்சக்கணகான மக்கள் வந்து செல்கிறார்கள். இதன் மூலம் துபாய் மிகப் பெரிய வருவாயை ஈட்டி வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளின் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. துபாயும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சுற்றுலாத் துறையைப் பெரிய அளவில் நம்பி இருக்கும் துபாய்க்கு இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டது. மேலும், அமீரக நாட்டிலே கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வேலையில்லாமல் சிரமப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இதனால் சாதாரண தொழிலாளர்கள் உணவுக்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டது.

புர்ஜ்  கலீஃபா
புர்ஜ் கலீஃபா

புலம்பெயர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் கூட்டம் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், `The Mohammed Bin Rashid Al Maktoum Global Initiatives’ என்னும் நிறுவனம் மூலம் உலகின் மிக உயரமாக நிதியுதவிப் பெட்டியாக புர்ஜ் கட்டடம் அறிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதாவது புர்ஜ் கலீஃபா கட்டடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் வண்ண விளக்குகள் ஒவ்வொன்றும் விற்பனைக்கு என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான உணவுக்கான நிதியைத் திரட்ட முடிவு செய்து அதைச் செய்து காட்டியிருக்கிறார்கள். ஒரு விளக்கின் விலை 10 திர்ஹாம்ஸ்தான். அதாவது சுமார் 2.70 அமெரிக்க டாலர். இது ஒருவருக்கு ஒருநேர உணவுக்குத் தேவையான பணமாகக் கணக்கிடப்பட்டு இந்த நிதி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

வெளிப்புறத்தில் இருக்கும் விளக்குகள் விற்பனைக்கு என்றதும் இனி புர்ஜ் கட்டடம் ஒளிவீசாதா என்று கேட்க வேண்டாம். காரணம் அங்கு இருக்கும் விளக்குகள் எதுவும் கழற்றப்பட மாட்டாது. மாறாக, ஒவ்வொரு விளக்குக்கும் பணம் செலுத்தியவர்களின் பெயரில் தொடர்ந்து ஒளிர இருக்கிறது புர்ஜ் கட்டடம்.

`தேவையான நேரத்தில் உதவுவதே நட்பு!’ -துபாய் சென்றடைந்த 88 இந்திய செவிலியர்கள் #Covid19

இந்த நிதியுதவிப் பெட்டி திட்டத்தைச் செயல்படுத்திய நிறுவனம், தற்போது வரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான உணவுக்குத் தேவையான பணம் வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ரமலான் மாதத்தில் குறைந்த வருமானத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 10 மில்லியன் மக்களுக்கு உணவுக்கான நிதி திரட்டும் திட்டம் வகுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் புர்ஜ் கலீஃபா திட்டத்தின் மூலம் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உணவுக்குத் தேவையான நிதி திரட்டப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு