Published:Updated:

5 லட்சம் கி.மீ பைக் பயணம், 24 வருட தேடல்; காணாமல் போன மகனைக் கண்டடைந்த பாசத்தந்தை!

Father-Son
Father-Son ( Image by Free-Photos from Pixabay )

சீனாவைச் சேர்ந்த குவோ கேங்டாங் என்கிறவர் ஐந்து லட்சம் கி. மீ தொலைவு மோட்டார் பைக்கிலேயே பயணம் செய்து, 24 வருடங்களாகக் காணாமல் போயிருந்த தன் மகனைக் கண்டடைந்துள்ளார்.

``தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே...” என்கிற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வண்ணம் நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று சமீபத்தில் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த குவோ கேங்டாங் என்கிறவர், ஐந்து லட்சம் கி.மீ தொலைவு மோட்டார் பைக்கிலேயே பயணம் செய்து, 24 வருடங்களாகக் காணாமல் போயிருந்த தன் மகனைக் கண்டடைந்துள்ளார்.

குவோ கேங்டாங், சீனாவில் உள்ள கிழக்கு ஷாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவரது மகனுக்கு அப்போது இரண்டரை வயது. வீட்டு வாசலுக்கு வெளியே அச்சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கும்போது அவன் கடத்தப்பட, நிலைகுலைந்து போயிருக்கிறது அக்குடும்பம்.

Kidnap - Representational Image
Kidnap - Representational Image
Vikatan

கடத்தல்காரர்கள் குழந்தையைக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் குழந்தையை மத்திய சீனாவில் உள்ள ஒரு குடும்பத்திடம் விற்றிருக்கின்றனர். ஆனால் இந்த விபரங்கள் எதுவும் தெரியாமல் குழந்தையின் தந்தை காவல்துறையிடம் புகார் கொடுத்ததோடு பிள்ளையைத் தேடி வருடக்கணக்கில் அலைந்திருக்கிறார்.

தன் குழந்தை கடத்தப்பட்ட சிறிது நாள்களிலேயே கேங்டாங் அதுவரை பார்த்து வந்த தனது வேலையை உதறியிருக்கிறார். ஒரு பெரிய கொடியில், கடத்தப்பட்ட தன் குழந்தையின் புகைப்படத்தைப் பதித்து, அதனைத் தனது மோட்டார் பைக்கின் பின்னால் கட்டி, அந்த பைக்கிலேயே தனது மகனைத் தேடி நாடு முழுக்க அலைந்திருக்கிறார் இந்தப் பாசக்காரத் தந்தை.

கடந்த 24 வருடங்களில் தன் மகனைத் தேடி ஐந்து லட்சம் கி.மீ பயணம் செய்திருக்கும் இவர் பயணத்தின் போது பாலங்களின் அடியில் உறங்குவது, வழிப்பறிக் கொள்ளையர்களின் தொந்தரவுகளைச் சமாளிப்பது என்று பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறார்.

இவ்வளவு ஏன்... மகனைத் தேடும் பயணத்தில் கடும் பணத்தட்டுப்பாடு காரணமாக பிச்சைகூட எடுத்திருக்கிறார் என்பது மனதைக் கனக்கவைப்பதாக இருக்கிறது.

ஒருகட்டத்தில் சீனாவில் உள்ள மத்திய ஹீனான் மாகாணத்தில் வசிக்கும் 26 வயது ஆசிரியர் ஒருவரின் டிஎன்ஏ மூலக்கூறுகள், குவோ கேங்டாங்கின் டிஎன்ஏ மூலக்கூறுகளுடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்த சீன காவல்துறை, பின்னர் இதுகுறித்து கேங்டாங்கிற்கு தகவல் கொடுத்திருக்கிறது.

Father and Son - Representational Image
Father and Son - Representational Image

பெற்ற பிள்ளையை 24 வருடங்களாகப் பார்க்காமல் தவித்த அந்தத் தந்தை தனது பிள்ளையைக் கண்டவுடன் அவனைக் கட்டியணைத்து கண்ணீர்விட்ட காட்சி அன்பின் உச்சம்.

சீனாவில் குழந்தைக் கடத்தல் என்பது பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. அதனால் இந்த 24 வருடங்களில் காணாமல் போன தன் மகனைத் தேடியதோடு மட்டுமல்லாமல், தன்னைப்போல குழந்தையைத் தொலைத்த குடும்பங்களுக்கு உதவுவது, குழந்தைக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று தனது துயரத்துக்கும் இடையிலும் மனிதம் நிறைந்த மனிதராக வலம் வந்திருக்கிறார் கேங்டாங்.

அடுத்த கட்டுரைக்கு