துருக்கி, சிரியா இடையேயுள்ள காசியான்டெப் நகரில், இன்று அதிகாலை 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நூற்று நாற்பதுக்கும் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து சேதமாகின.

இதுவரையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். மேலும், சிக்குண்ட மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பே டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த நிலநடுக்கம் குறித்து கணித்து, துல்லியமாக ட்வீட் செய்தது தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்து, அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.
ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் (frank hoogerbeets) என்பவர் ஒரு டச்சு ஆராய்ச்சியாளர். இவர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாள்களுக்கு முன்பே கணித்திருந்தார். இது குறித்து பிப்ரவரி-3 அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வரைபடத்துடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அவர் கூறியது போலவே இன்று காலை துருக்கி-சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. பிப்ரவரி-3 அன்று பதிவிடப்பட்டு, சரியானது என நிரூபிக்கப்பட்ட அந்த ட்வீட், பெரிய பூகம்பத்தைக் கணிப்பதில் ஆராய்ச்சியாளரின் துல்லியம் குறித்து அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது.