அமெரிக்காவின் ஒரு சமையற்கலை பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த 63 வயதான டேனியல் ப்ரோபி, 2018 ஜூன் 2-ம் தேதி குண்டுகள் துளைத்த நிலையில், இறந்து கிடந்தார். இவர் இறப்பின் பின்னணியை ஆராய்ந்த காவல்துறை அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், டேனியலை கொலை செய்தது அவரின் 71 வயது மனைவி நான்சி கிரம்ப்டன் ப்ரோபி (Nancy Crampton Brophy) என்பவர்தான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ரொமான்டிக் நாவலாசிரியான நான்சி, இதுவரையில் 6 நாவல்களை எழுதி சுயமாக வெளியிட்டுள்ளார். `தவறான கணவன்’, `தவறான காதலன்’ என தன்னுடைய படைப்புகளுக்கு பெயரிட்டுக்கொண்டாலும், 2011-ம் ஆண்டில் இவர் எழுதிய ``உங்கள் கணவரைக் கொல்வது எப்படி” என்ற கட்டுரையே இந்தக் கொலைக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் துப்பாக்கிகள், கத்திகள், விஷம் என எதைப் பயன்படுத்தி கணவனைக் கொல்லலாம் என்று திட்டங்களை விளக்கியிருந்தார் நான்சி. ஆனால் நீதிமன்றமோ, இந்தக் கட்டுரை, கொலைச் சம்பவத்துக்குப் பல வருடங்களுக்கு முன்பே ஒரு செமினாருக்காக எழுதப்பட்டதைக் குறிப்பிட்டு, இதைக் கொலைக்கான காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்தது.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், 12 பேர் அடங்கிய நடுவர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரித்து வந்தது. விசாரணை முடிவில் கொலை நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் நான்சியின் நடமாட்டம் இருந்தது உறுதியானது. டேனியலின் காப்பீட்டுத் தொகை 1.5 மில்லியன் டாலருக்காக, கணவரை சுட்டுக் கொன்றுள்ளார் என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்சிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நான்சி விரும்பினால் 25 வருடங்கள் கழித்து பரோலில் வெளிவரலாம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. ஆனால், நான்சி தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீட்டுக்கு பதிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட டேனியலின் முந்தைய திருமண உறவில் பிறந்த மகன் நாதேனியல் ஸ்டில்வாட்டர், நான்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நான்சியின் பாணியிலேயே அவரை `தவறான மனைவி' என்றும் குறிப்பிட்டுள்ளார்.