ஜப்பானில், விழித்திறன் மாற்றுத்திறனாளியான தன் மனைவிக்காக, தோட்டத்தில் அழகிய, மணம் வீசும் பூச்செடிகளை நட்டு தன் அன்பை வெளிப்படுத்தி வரும் கணவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தன் மனைவியால் பூக்களைப் பார்க்க முடியவில்லை என்றாலும், அவற்றில் இருந்து வரும் மணம் அவருக்கு சந்தோஷத்தைத் தரும் என்பதற்காகவே இந்தத் தோட்டத்தை உருவாக்கியதாகக் கூறியிருக்கிறார் அந்த அன்புக் கணவர்.
குரோகி மற்றும் அவரின் மனைவி, ஜப்பானின் ஷின்டோமி என்ற கிராமப்புறத்தில் பால் பண்ணையாளர்களாக, இரண்டு அழகான குழந்தைகளை வளர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால், குரோகியின் மனைவிக்கு, நீரிழிவு நோயால் ஏற்பட்ட சிக்கல்களால் திடீரென பார்வை இழப்பு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த குரோகியின் மனைவி, குடும்ப வாழ்க்கையில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனிடையே, குரோகி தன் மனைவியை இந்த மனக்கவலையில் இருந்து மீட்டெடுக்க விரும்பினார். எனவே, அவரை உற்சாகப்படுத்தும் நோக்கில், ஒரு மலர்ச்செடியைத் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். தன் மனைவிக்கு பார்வை தெரியவில்லை என்றாலும் மலரில் இருந்து வரும் மணம், அவர் மனதை உற்சாகப்படுத்தும் என அவர் நம்பினார்.
ஒருநாள், குரோகி தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவர் நட்ட இளஞ்சிவப்பு ஷிபாசகுரா பூக்களைப் பார்க்க, நிறைய பேர் நின்றதைக் கவனித்தார். அப்போதுதான் அவரின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. நிறைய பூச்செடிகளுடன் பெரிய தோட்டத்தை உருவாக்கினால், அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்வார்கள், அவர்கள் தன் மனைவியை உற்சாகப்படுத்த உதவுவார்கள் என்று நினைத்தார்.
அதனால் தொடர்ந்து இரண்டு வருடங்கள் தன்னால் முடிந்த அளவு பூக்களை நட்டு, தோட்டத்தை ஆரோக்கியமாகப் பராமரித்து வந்தார். காலப்போக்கில், ஷின்டோமியில் உள்ள குரோகி பண்ணை ஜப்பானின் மிக அழகான தோட்டங்களில் ஒன்றாக மாறியது. இரண்டு வருட கடின உழைப்பு, ஆயிரக்கணக்கான மலர்கள், உண்மையான காதல் ஆகிய அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைப் பார்க்கத் தூண்டி வருகிறது.

இதுபற்றி குரோகி கூறுகையில், ``என் மனைவியால் பூக்களைப் பார்க்கத்தான் முடியவில்லை என்றாலும் அவரால் பூக்களின் வாசனை மற்றும் தோட்டம் இப்போது எப்படி இருக்கிறது என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியும். பார்வையை இழந்ததால் மனச்சோர்வடைந்து தன்னையே தனிமைப்படுத்திக் கொண்ட என் மனைவி இப்போது பூக்களோடு ஒரு பூவாகச் சேர்ந்து சிரித்து மகிழ்கிறார்'' என்று கூறினார்.
தற்போது இந்தத் தோட்டம், பிரபலமான ஒரு ஸ்பாட் ஆகிவிட்டது. காதலுக்கு அடையாளமாக உள்ள குரோகியின் பண்ணை குரோகி தம்பதிக்கு மட்டுமல்ல, பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.