ஏதோ ஒரு ஞாபகத்தில், ஒருவருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை மற்றொருவருக்கு மாற்றி அனுப்பி இருப்போம். `அய்யய்யோ தெரியாம அனுப்பிட்டேன்’ எனக் கூறி மெசேஜை டெலீட் செய்திருப்போம். இதுபோன்று டீச்சர் குரூப், ரிலேடிவ்ஸ் குரூப் என மெசேஜை மாற்றி அனுப்பி வசமாகச் சிக்கிய சம்பவங்களும் பலருக்கு நடந்திருக்கும்.

ஆனால் ஒரு மருத்துவமனை நிர்வாகம், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கு பதிலாக, `நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்' என்று நோயாளிகளுக்கு தவறுதலாக மெசேஜ் அனுப்பி உள்ளது.
இங்கிலாந்தின் டான்காஸ்டர் பகுதியில் உள்ள அஸ்கெர்ன் மருத்துவ நிலையத்தில் இருந்து, டிசம்பர் 23-ம் தேதி பெரும்பாலான நோயாளிகளுக்கு இத்தகைய ஒரு மெசேஜ் சென்றுள்ளது.
அதில் ``நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். மிகவும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நன்மைகள் வழங்க உதவும், DS -1500 படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதைப் பார்த்த பல நோயாளிகள் அதிர்ந்து போயுள்ளனர். அடுத்த ஒரு மணிநேரத்திலேயே மற்றொரு மெசேஜ் வருகிறது. ``தயவு கூர்ந்து மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். முன்பு வந்த மெசேஜ் தவறுதலாக அனுப்பப்பட்டது.

நீங்கள் படிக்க வேண்டிய மெசேஜ்: உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள். அவசர உதவிக்கு NHS 111 எண்ணை அழைக்கவும் அல்லது no-reply.text@nhs.net - க்கு மெயில் செய்யவும்’’ என்று குறிப்பிட்டு இருந்தது.
மருத்துவமனை நிர்வாகம் மெசேஜை மாற்றி அனுப்பி நோயாளிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.