இங்கிலாந்தை சேர்ந்த டெட்டி ஹாப்ஸ் என்ற சிறுவன், தனது அதிக நுண்ணறிவு (IQ - Intelligence Quotient) காரணமாக, மிக இளம் வயதிலேயே 'மென்சா' அமைப்பில் இணைந்துள்ள பெருமையை பெற்றுள்ளார்.
உலக அளவில் சில நபர்களுக்கு மட்டுமே நுண்ணறிவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இத்தகைய நுண்ணறிவு அதிகமாக இருக்கும் நபர்களை ஒருங்கிணைக்கக்கூடிய அமைப்புகளில் மிகப் பெரியது, மற்றும் மூத்த அமைப்புதான் `மென்சா (Mensa)'. இந்த அமைப்பின் இங்கிலாந்தின் மிக இளம் வயது உறுப்பினர் என்ற சாதனையை சமீபத்தில் அந்த அமைப்பில் இணைந்து டெட்டி ஹாப்ஸ் (Teddy Hobbs) என்னும் நான்கு வயது சிறுவன் நிகழ்த்தி உள்ளார்.

இந்த சிறுவனுக்கு ஏழு மொழிகளில் வாசிக்கவும் மற்றும் எண்ணிக்கைகளும் தெரியும். மேலும், இந்த சிறுவன் பற்றிய பல வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னுடைய இரண்டு வயதிலேயே வெறும் தொலைக்காட்சி பார்த்ததை வைத்தே நன்றாக வாசிக்கக் கற்றதோடு, மடிக்கணினியை இயக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறான்.
இது பற்றி சிறுவனின் அம்மா,``டெட்டிக்கு வெறும் 26 மாதங்கள் ஆன போது அவனுக்கு நன்றாக வாசிக்க வரும். சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தே எழுத்துகளின் ஒலியையும் வடிவத்தையும் கற்றுக்கொண்டான். கடினமான மேண்டரின் மொழியில் அவனுக்கு நூறு வரை எண்ணத் தெரியும். மேலும் அவனுக்கு ஃப்ரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளிலும் நூறு வரை எண்ணிக்கை தெரியும். அவனுக்கு புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கோவிட் பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தோம். அவன் தானாகவே வாசிக்க பழகினான்" எனக் கூறியுள்ளார்.

சிறுவன் டெட்டி ஹாப்ஸின் ஆற்றலைக் கண்டு வியந்த பெற்றோர், அவனுக்கு மூன்று வயது ஏழு மாதங்கள் இருந்தபோது அவனை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஒருமணி நேரத்திற்கும் மேலான பரிசோதனைக்குப் பின்னர் அவனுடைய வயதுக்கு மிக அதிகபட்சமாக 139 IQ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகே ஹாப்ஸ், ’மென்சா’ அமைப்பில் இணைக்கப்பட்டிருக்கிறான்.
சிறுவனுக்கு நான்கு வயதுதான் என்றபோதும், எட்டு வயது குழந்தைக்கு சமமாக வார்த்தைகளை வாசிக்கும் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் இருக்கிறது. நான்கு வயதிலேயே ’மென்சா’ அமைப்பில் இணைந்ததன் வாயிலாக இதில் சேர்ந்த இங்கிலாந்தின் மிக இளம் வயது நபர் என்ற பெருமை டெட்டி ஹாப்ஸுக்கு கிடைத்துள்ளது.