Published:Updated:

பலூன் வார்: அமெரிக்கா, கனடாவில் சுட்டுத் தள்ளப்பட்ட 4 மர்மப்பொருள்கள்... இந்தியாவிலும் சீன பலூனா?!

சீன உளவு பலூன்
News
சீன உளவு பலூன்

அமெரிக்காவில் பறந்ததைப்போலவே, இந்தியாவின் அந்தமான் தீவிலும் பறந்ததா சீனா உளவு பலூன்?!

Published:Updated:

பலூன் வார்: அமெரிக்கா, கனடாவில் சுட்டுத் தள்ளப்பட்ட 4 மர்மப்பொருள்கள்... இந்தியாவிலும் சீன பலூனா?!

அமெரிக்காவில் பறந்ததைப்போலவே, இந்தியாவின் அந்தமான் தீவிலும் பறந்ததா சீனா உளவு பலூன்?!

சீன உளவு பலூன்
News
சீன உளவு பலூன்

வண்ண வண்ண பலூன்களைக் கண்டால் குழந்தைகள் பரவசமாவதைப் பார்த்திருப்போம். ஆனால், ஒற்றை வெள்ளை பலூன் ஒரு நாட்டையே பரபரப்பாக்கியிருப்பதைப் பார்த்திருக்கிறோமா... ஆம், அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன பலூன் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்த சீன பலூன் இந்தியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட வேறு சில நாடுகளையும் வேவு பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்க வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த சீன பலூனை சுட்டுவீழ்த்தி, தக்க பதிலடி கொடுத்த அமெரிக்காவுக்கு, `தகுந்த பதிலடி கொடுப்போம்' எனச் சவால்விட்டிருக்கிறது சீனா. ஏற்கெனவே, இந்த இரு நாடுகளுக்குமிடையே பனிப்போர் நிலவிவரும் நிலையில், தற்போது பலூன் வார் தொடங்கியிருக்கிறது!

அச்சத்தை உண்டாக்கிய வெள்ளை பலூன்!

அமெரிக்காவின் மன்டானா பகுதியில் அணு ஆயுத ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சிறப்பு விமானப்படைத் தளம் அமைந்திருக்கிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள மூன்று அணு ஆயுத ஏவுதளங்களில் மன்டானாவும் ஒன்று. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி அன்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்போது, வெள்ளை நிறத்தில் மர்மப்பொருள் ஒன்று அவர்கள் கண்ணில்பட்டது. மன்டானா ஏவுதளத்தின் மேற்பகுதியில் பறந்துகொண்டிருந்த அந்த மர்மப்பொருள் ஒரு ராட்சத பலூன் என்பதைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், உடனடியாக அமெரிக்க பாதுகாப்புத்துறைக்குத் தகவல் அளித்தனர்.

அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன்
அமெரிக்க ராணுவத் தலைமையகம் பென்டகன்

அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன், `நமக்குத் தெரியாமல் நம் எல்லைக்குள் பலூனா?' என்று அதிர்ச்சியுடன் ஆய்வுசெய்யத் தொடங்கியது. தொடர் கண்காணிப்புகள் மூலம் இந்த பலூன் சீனாவுடையது என்று கண்டறியப்பட்டது. முதலில் வாய் திறக்காத சீனா பின்னர், ``இது எங்களுடைய பலூன்தான். பெயரிடப்படாத இந்த பலூன் முழுக்க முழுக்க வானிலை ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. இதை நாங்கள் இயக்கவில்லை. தானாகவே இயங்கிக்கொள்ளும் தன்மைகொண்ட இந்த பலூனில் ஏற்பட்ட பழுது காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டது'' என்று வருத்தம் தெரிவித்தது.

பயணத்தை ரத்துசெய்த அமைச்சர்!

சீனாவின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அமெரிக்கா, ``நாட்டின் ரகசிய ஆயுத சோதனைகள் நடைபெறும் விமானப்படைத் தளத்துக்கு மேல் பறக்கவிடப்பட்டிருக்கும் இந்த பலூன் எங்களை உளவு பார்க்கவே சீனாவால் அனுப்பப்பட்டிருக்கிறது'' என்றது. மேலும், ``கனடா நாட்டு வழியாக வந்த இந்த உளவு பலூன் அலாஸ்கா மாகாணம் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கிறது'' என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து கனடாவும் தன்னுடைய வான் பரப்பைக் கண்காணிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், பிப்ரவரி 5,6-ம் தேதிகளில் சீனாவுக்குச் செல்லவிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனின் பயணம் ரத்துசெய்யப்பட்டது. 2018-ம் ஆண்டுக்குப் பிறகு, உயர்மட்டப் பொறுப்பிலிருக்கும் எந்தவோர் அமெரிக்க அதிகாரியும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. பிளிங்கனின் பயணம் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்ட நிலையில், பதற்றத்தை உண்டாக்கிய உளவு பலூனால் அந்தப் பயணம் ரத்தாகியிருக்கிறது.

சீன உளவு பலூன்
சீன உளவு பலூன்

சுட்டு வீழ்த்திய அமெரிக்கா... கொந்தளித்த சீனா!

மன்டானா ஏவுதளத்துக்கு மேல் சுமார் 60,000 அடி உயரத்தில் பறந்த சீன பலூனை, அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்புக் கருதி முதலில் சுட்டுத் தள்ளத் தயங்கியது அமெரிக்கா. பின்னர் அந்த பலூன், அட்லான்டிக் பெருங்கடல் நோக்கி நகர்ந்ததும், எஃப்-22 ரக போர் விமானத்தைக்கொண்டு பலூனைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா. ``வானிலை ஆராய்ச்சி பலூனைச் சுட்டு வீழ்த்தியது சர்வதேச சட்ட விதிமீறல். இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்'' என்று கொந்தளித்திருக்கிறது சீனா. இந்த பலூன் 200 அடி உயரம்கொண்டது என்றும், அந்த பாகங்களைத் தங்களது கடற்படை கண்டெடுத்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது அமெரிக்கா. கிடைக்கும் பாகங்களைவைத்து ஆராய்ச்சி செய்யப்போவதாகவும் அந்த நாடு அறிவித்தது.

இரண்டாவது பலூனும்... சுட்டுத் தள்ளப்பட்ட மூன்று மர்மப்பொருள்களும்!

இதற்கிடையில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் வான்பரப்பில் மேலுமொரு சீன உளவு பலூன் பறந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி, பரபரப்பைப் பல மடங்காக்கின. கோஸ்டாரிக்கா, வெனிசுலா, கொலம்பியா ஆகிய நாடுகளின் வான்பரப்பில் 55,000 அடி உயரத்தில் சீனாவின் மற்றோர் உளவு பலூன் பறந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், `அந்த பலூனும் எங்களுடையதுதான்' எனச் சீனா ஒப்புக்கொண்டது. இருந்தும், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் சீனாவுக்கு எதிராக வாய் திறக்கவில்லை. குறிப்பாக, வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், சீன பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியதற்குக் கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தது. வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் சீனாவுக்குத் தனது விசுவாசத்தை அந்த நாடு காட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜோ பைடன்
ஜோ பைடன்

இந்த நிலையில், அமெரிக்கா, கனடா வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த மூன்று மர்மப்பொருள்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறது அமெரிக்க விமானப்படை. அமெரிக்காவின் தெற்கு கரோலினா, அலாஸ்கா பகுதிகளுக்கு மேலே பறந்துகொண்டிருந்த மர்மப்பொருள்களை அமெரிக்க விமானப்படை சுட்டுத் தள்ளியது. கனடாவின் யூகோன் மாகாணத்தின் மேற்பரப்பில் 40,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த மற்றொரு மர்மப்பொருளையும் சுட்டு வீழ்த்தியிருக்கிறது அமெரிக்க விமானப்படை. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் இடையே வான்வெளியைக் காப்பது தொடர்பாக நடந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகே அமெரிக்க விமானப்படை இந்த நடவடிக்கையில் இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கனடா வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த மர்மப்பொருள் உருளை வடிவத்தில் இருந்ததாகவும், அது அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனைவிடச் சிறியது என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. `கனடாவில், அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்திய மர்மப்பொருளை மீட்டெடுத்து கனடா ராணுவம் ஆராய்ச்சி செய்யும்' என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருக்கிறார். கடந்த எட்டு நாள்களுக்குள்ளாகச் சீன பலூன் உட்பட வான்வெளியில் பறந்த நான்கு பொருள்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறது அமெரிக்கா. இதில், மர்மப்பொருள்கள் என்று குறிப்பிடப்படுபவையும் பலூன்களாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவையும் சீனாவால் அனுப்பிவைக்கப்பட்டவையா என்று ஆய்வுக்குப் பிறகே சொல்ல முடியும் என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.

இந்தியாவிலும் பறந்ததா உளவு பலூன்?

அமெரிக்காவில் வெளியாகும் `தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ், ``சீன பலூன், இந்தியா, ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளையும் உளவு பார்த்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்'' என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்தமானில் இயங்கும் செய்தி நிறுவனமான `அந்தமான் ஷீக்கா' (Andaman Sheekha) ஜனவரி 6 அன்று, போர்ட் பிளேர் நகருக்கு மேலே வெள்ளை நிற பலூன் ஒன்று பறந்ததாகப் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், அதிகாரபூர்வமாக இது குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

பலூன்
பலூன்

உண்மையில் உளவு பலூனா?

அமெரிக்காவின் மன்டானா பகுதியில் பறந்த பலூன் குறித்து வானியல் ஆராய்ச்சியாளர்கள், ``நிலப்பரப்பிலிருந்து 65,000 அடி உயரத்தில் பறக்கும் போர் விமானங்களைவிட, இரு மடங்கு உயரத்தில் (80,000 முதல் 1,20,000 அடி) ஸ்பை பலூன்கள் பறக்கக்கூடியவை. எனவே, இவை அவ்வளவு எளிதில் கண்ணில் சிக்காது. ரேடாரிலும் சிக்குவது கடினம். ஒரே இடத்தில் மாதக்கணக்கில் நிற்கக்கூடிய திறனும் இந்த ஹீலியம் ரக பலூன்களுக்கு உண்டு. எனவே, ஓரிடத்தைக் குறிவைத்து உளவு பார்ப்பதற்கு இந்த வகை பலூன்கள் நிச்சயம் உதவும். வானிலை ஆராய்ச்சிக்கு பலூன்களை அனுப்புவதெல்லாம் பழைய தொழில்நுட்பம். அந்தத் தொழில்நுட்பத்தை வளர்ந்த நாடான சீனா இன்னும் பின்பற்றுகிறது என்றால் நம்பவா முடியும்... எனவே, இது சீனாவின் உளவு பலூனாகத்தான் இருக்க வேண்டும்'' என்கிறார்கள்.

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூனுக்குள்ளும், மற்ற மூன்று மர்மப்பொருள்களிலும் இருக்கும் பாகங்களை ஆராய்ந்து, ஆதாரங்களுடன் அது பற்றிய விவரங்களை அமெரிக்கா வெளியிட்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளியே வரும்!