Published:Updated:

`அம்மா அப்பா... பொய் சொன்னது போதும்..!’ - இதயங்களை வென்ற 9 வயதுச் சிறுமியின் கடிதம்

9 வயதான இச்சிறுமிக்கு ஒரு பல் விழுந்த மறுநாள் காலையில் தன் தலையணைக்குக் கீழே ஒரு பவுண்டு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.

Kid's Letter to Mom and Dad
Kid's Letter to Mom and Dad

பல நேரங்களில் குழந்தைதானே என அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குக் கட்டுக்கதைகளை பதில்களால் அளிப்போம். ஆனால், சமயத்தில் அவர்கள் கேட்கும் எதிர்க்கேள்விகளை எதிகொள்ள முடியாமல் திணறுவோம். இங்கிலாந்திலும் பெற்றொர் சொன்ன கதை பொய் என்று 9 வயதுச் சிறுமி ஒருவர் தன் தாய் தந்தைக்கு எழுதிய கடிதம் செம வைரல் ஆகியுள்ளது.

Representational Image
Representational Image

மேற்கத்திய நாடுகளில் பல் விழும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு, அந்த பயத்தைப் போக்க, பல் தேவதை "(Tooth Fairy) என்று ஒரு தேவதை இருப்பதாகவும், அந்தத் தேவதை ஒவ்வொரு பல் விழும்போதும் அதற்குக் கைமாறாக இரவு வந்து ஒரு பவுண்டை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டுப் பறந்து விடுவாள் என்று பல காலமாகக் குழந்தைகளுக்குக் கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அதை உண்மையென நம்பி பல குழந்தைகள் வளருகின்றன. ஆனால், இச்சிறுமி அப்படி அல்ல.

9 வயதான இச்சிறுமிக்கு ஒரு பல் விழுந்த மறுநாள் காலையில் தன் தலையணைக்குக் கீழே ஒரு பவுண்டு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இவர் மற்ற குழந்தைகளைப்போல் பரவசம் அடையாமல் புத்திசாலித்தனமாகத் தன் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அந்தக் கடிதத்தை முதலில் பல் தேவதைக்கு அனுப்புவதாக எழுதிவிட்டு பின்பு அடித்துவிட்டு கீழ்வருமாறு எழுதுகிறார்.

``அன்பான அம்மா அப்பாவுக்கு,

எனக்குத் தெரியும் இது உங்கள் வேலைதான் என்று. பொய் சொல்வதை நிறுத்துங்கள்.

ஒரு சின்ன அறிவுரை, ஒரு பவுண்டுக்குப் பதிலாக 100 பவுண்டு வைத்திருக்கலாம். இனிய இரவு வணக்கம்.

இப்படிக்கு,

பொய்யர்களைக் கண்டுபிடிக்கும் மிகச் சிறந்த துப்பறிவாளி!

உங்களுக்குப் பிடித்தமான குழந்தை” என்று எழுதியுள்ளார்.

அதற்குக் கீழுள்ள பின் குறிப்பில் "எங்கள் பல்லை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?" என்ற கேள்வியுடன் கடிதத்தை முடித்துள்ளார். இந்தக் கடிதத்தை அவரின் தந்தை இணையத்தில் பதிவிட, வேற லெவல் ஹிட். அச்சிறுமியின் மொழி ஆளுமையும் துப்பறியும் தன்மையும் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது. சிலர் அதிக பணம் வைக்க வேண்டுமென்று கேட்ட அச்சிறுமியின் குறும்புத்தனத்தை ரசித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

அவளுக்கு இதுவரை கூறப்பட்ட மற்ற கட்டுக்கதைகளும் பொய் என்று அறிந்தால் அவள் எப்படி ரியாக்ட் பண்ணுவாள் என்று சிலர் வியக்கின்றனர். ``பெற்றோரின் பொய்யைச் சாமர்த்தியமாக வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாது பயம் இல்லாமல் கேள்வியும் கேட்டுள்ளார். எப்போது எங்களிடம் இணையப் போகிறீர்கள்?” என ஒரு பத்திரிகை ஆசிரியர் நகைச்சுவைகாகக் கேட்டிருக்கிறார்.

ஆக, `ஸ்மார்ட்போன் காலத்தில் பிறக்கும் ஸ்மார்ட் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கதைகளைத்தான் சொல்ல வேண்டும் போல...’ என்கிறார்கள் அச்சிறுமியின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்தவர்கள்.