Published:Updated:

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட `கொல்கத்தா துர்கா பூஜை திருவிழா' - சிறப்பு அம்சங்கள் என்ன?

கொல்கத்தா துர்கா பூஜை

யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் பாரம்பர்ய கலாசார பட்டியலில் இந்த விழாவைச் சேர்க்கவேண்டும் என 2019-ம் ஆண்டு மத்திய அரசு, யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்தது.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட `கொல்கத்தா துர்கா பூஜை திருவிழா' - சிறப்பு அம்சங்கள் என்ன?

யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் பாரம்பர்ய கலாசார பட்டியலில் இந்த விழாவைச் சேர்க்கவேண்டும் என 2019-ம் ஆண்டு மத்திய அரசு, யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்தது.

Published:Updated:
கொல்கத்தா துர்கா பூஜை

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழா கொல்கத்தாவின் துர்கா பூஜை விழா. மேற்கு வங்கத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பிரமாண்ட துர்கா சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த விழாவில் சிலை கலைஞர்கள் தொடங்கி, நகரில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருக்கும். இந்த விழாவில் துர்காதேவி பத்து கைகளை விரித்து,  மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சி, தீமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமுதாயக்குழுக்கள் துர்காபூஜையை வெகு சிறப்பாக ஆடல், பாடல்களுடன் கொண்டாடுவார்கள்.

கொல்கத்தா துர்கா பூஜை
கொல்கத்தா துர்கா பூஜை

கொல்கத்தா நகரம் முழுவதுமே துர்கா பூஜைக்கான விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆண்டு முழுவதும் இதற்காகவே காத்திருந்தது போல ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள் என விழா களைகட்டும். 

யுனெஸ்கோவின் மனிதகுலத்தின் பாரம்பர்ய கலாசார பட்டியலில், இந்த விழாவைச் சேர்க்கவேண்டும் என 2019-ம் ஆண்டு மத்திய அரசு, யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை கடந்தாண்டு ஏற்றுக்கொண்ட யுனெஸ்கோ தற்போது, மனித குல பாரம்பர்ய கலாசார பட்டியலில் துர்கா பூஜையை சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்றான UNESCO என்று சொல்லப்படும் ``ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு”, 1945-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.  உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்கப்படுத்துவது இதன் பணியாகும். உலகம் முழுதும் உள்ள கலைகள் மற்றும் கலாசாரங்கள் உள்ளிட்டவைகளை, தங்களின் கலாசார பாரம்பரிய பட்டியலில்ஆண்டுதோறும் இணைத்து வருகிறது.

தற்போது, மனித குலத்தின் கலாசார பாரம்பர்ய பட்டியலில் துர்கா பூஜையை யுனெஸ்கோ சேர்த்துள்ளது. இதன் மூலம் துர்கா பூஜைக்கு சர்வதேச அளவிலான புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக யுனெஸ்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``கொல்கத்தாவின் துர்கா பூஜா, யுனெஸ்கோவின் பாரம்பர்ய பட்டியலில் இணைந்துள்ளது. வாழ்த்துகள் இந்தியா!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேற்குவங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``துர்கா பூஜா எங்களின் பெருமித அடையாளம். வரலாற்று சிறப்பம்சம். இந்த விழாவை யுனெஸ்கோ தனது பாரம்பர்ய நிகழ்வுகள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது. இது மேற்கு வங்க வரலாற்றில் முக்கியமான நாள். வங்காளிகளுக்கு வாழ்த்துகள். துர்கா பூஜையை மனிதகுலத்தின் பாரம்பர்ய கலாசார அடையாளமாகத் தேர்வுசெய்த யுனெஸ்கோவுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா துர்கா பூஜை
கொல்கத்தா துர்கா பூஜை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ``இது வங்கத்துக்கும், உலகம் முழுவதும் உள்ள வங்காளிகளுக்கும் பெருமைமிகு தருணம். துர்கா பூஜா என்பது ஒரு விழாவையும் தாண்டிய உணர்வுகளின் பிரதிபலிப்பு. அந்த உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும். இப்போது அது யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ இந்த விழாவை தனது கலாசார பாரம்பர்ய பட்டியலில் சேர்த்துள்ளது, நாம் அனைவரும் மகிழ்சியடைவோம்" எனக் கூறியுள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ``நம் பெருமைமிகு கலாசாரத்தையும், பாரம்பர்யத்தையும், தேசிய ஒற்றுமையையும், துர்கா பூஜை வெளிப்படுத்துகிறது. கொல்கத்தா துர்கா பூஜையை, நாம் அனைவரும் ஒரு முறையாவது கண்டுகளிக்க வேண்டும். யுனெஸ்கோ பாரம்பர்ய நிகழ்ச்சி பட்டியலில் துர்கா பூஜை சேர்க்கப்பட்டுள்ளது 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு கிடைத்த பெருமை, மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா துர்கா பூஜை
கொல்கத்தா துர்கா பூஜை

யுனெஸ்கோ பட்டியலில் இதுவரை இடம் பெற்ற இந்தியாவின் பாரம்பர்ய கலாசார அம்சங்கள்:

கும்பமேளா, யோகா, பஞ்சாப்பில் ஜாண்டியாலா குருவின் தாதிராஸ் மக்கள் தயாரிக்கும் பாரம்பர்ய செப்பு பாத்திரங்கள், மணிப்பூரில் மேற்கொள்ளப்படும் சங்கீர்த்தனம், டிரம் இசைத்தல் மற்றும் ஆடல்கள், லடாக்கில் பவுத்த மத புனித நூல்களை வாசித்தல், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசாவில் பண்டிகைகளின்போது ஆடும் சாவ் நடனம், ராஜஸ்தானின் கல்பேலியா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனம், கேரளாவின் முடியெட்டு எனப்படும் பாரம்பர்ய நடன நாடகம், ராம லீலை, வேத மந்திரம் ஒலித்தல் உட்பட 14 அம்சங்கள் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பர்ய பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்தியாவின் பாரம்பர்ய கலாசார பட்டியலில் ``குஜராத்தின் கர்பா நடனம்” சேர்க்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு தற்போது பரிந்துரை செய்துள்ளது.

தொன்மையான கலாசார பாரம்பர்யமிக்க தமிழத்தில் நிறைய முக்கிய அம்சங்கள் உள்ளன, அவை இதுவரை இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. தமிழ்நாட்டின் கரகாட்டம், ஜல்லிகட்டு இரண்டையும் அப்படியே பரிந்துரை செய்தால் நல்லது.

மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்துமா?