`ஒன்பது பெண்களைத் திருமணம் செய்து, வாழ்ந்து வருபவர்’ என்று மக்களின் கவனத்தைப் பெற்றவர்தான், பிரேசிலைச் சேர்ந்த ஆர்தர் ஓ. உர்சோ. இவர் தற்போது தன் ஒன்பது மனைவிகளில் 4 பேரை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன் மேலும் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிரேசில் நாட்டில் வசித்து வரும் ஆர்தர் ஓ. உர்சோ (Arthur O. Urso), மாடலாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒருவரை மட்டும் திருமணம் செய்துகொண்டு வாழ்வதில் உடன்பாடு இல்லையாம். காதல் என்பதே கொண்டாடித் தீர்க்கத்தானே, அதை ஏன் ஒருவர் மீது மட்டும் செய்ய வேண்டும் என்று கூறி, பலதார மணம் செய்து கொள்ள விருப்பப்பட்டுள்ளார்.
அதன்படி, கத்தோலிக்க திருச்சபை ஒன்றில் 2021-ம் ஆண்டில், தன் முதல் மனைவி லுவானா காசாகியுடன், மற்ற 8 பேரையும் திருமணம் செய்துகொண்டார். 9 பேரையும் திருமணம் செய்து கொண்டவர், டைம் டேபிள் போட்டு ஒவ்வொருவருடன் நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
ஒரு கட்டத்தில், அனைத்து மனைவியரையும் சமாளிக்க முடியாமல் திணறிய இவரை, ஆரம்பகட்டத்திலேயே ஒரு மனைவி பிரிந்துவிட்டார். மனைவிகள் மத்தியில் விவாதங்கள் அதிகரித்துள்ளன.
உள்ளூர்வாசிகளும் இவருடன் இணக்கமாக நடந்து கொள்ளவில்லை. இவர் அதிக மனைவிகளோடு வாழ்வது பிடிக்காமல் துன்புறுத்தத் தொடங்கினர் எனக் கூறியுள்ளார். இருந்தாலும் இவற்றைப் பேசி சமாளித்துக்கொண்டாலும் பொது மக்களின் அழுத்தம் கையாள முடியாத அளவுக்கு இருந்துள்ளதே பிரிவுக்கு வழிவகுக்கும் காரணமாக இவருக்கு அமைந்தது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து ஆர்தர் கூறுகையில், ``எதிர்காலத்தில் புதிய மனைவிகள் எனக்குக் கிடைக்கலாம். ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியாது. மீண்டும் திருமணம் செய்து கொள்வேன், ஏனெனில் எனக்குப் பெண்கள் வேண்டும்.
என் பெரிய வீட்டில், பெரிய கட்டில் உண்டு, அந்தப் படுக்கை நிரம்பி இருக்க வேண்டும். ஒருதார திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக என்னுடைய பலதார திருமண பயணத்தைத் தொடங்கினேன்’’ என்று இவர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலைப் பொறுத்தவரை, பலதார மணம் செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பானது. எனவே, இவரின் திருமணங்களும், விவாகரத்தும் சட்டப்படி நடைபெறவில்லை.