Election bannerElection banner
Published:Updated:

வெல்கம் ‘டார்க் டூரிஸம்’... நட்சத்திர விடுதியாகும் நாஜிக்களின் பதுங்குக் கட்டடம்..!

நட்சத்திர விடுதியின் மாதிரி
நட்சத்திர விடுதியின் மாதிரி

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பதுங்குக் கட்டடம் தற்போது நட்சத்திர விடுதியாக மாற இருக்கிறது. ஹாம்பர்க் நகரில் உள்ள 136 அறைகள் கொண்ட அந்தப் பதுங்குக் கட்டடம் ’செயிண்ட் பாலி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சீரமைப்புப் பணிகளை என்.எச் குழுமம் செய்து வருகிறது.

ஹிட்லரின் நாஜிக் கட்சி ஜெர்மனியில் 1933 முதல் 1945 வரை ஆட்சி செய்த காலத்தில், யூதர்களுக்கு எதிராக அளவற்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. அந்த காலகட்டத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வதை முகாம், கைதிகளால் ஓராண்டுக் காலத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எதிரிப் படைகளைத் தாக்குவதற்கான இராணுவத் தளமாகவும், எதிரிகளின் தாக்குதலிலிருந்து இருந்து தப்பித்துப் பதுங்குவதற்கான இடமாகவும் இந்த கட்டடம் நாஜி படை வீரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செயிண்ட் பாலி பதுங்கு கட்டிடம்
செயிண்ட் பாலி பதுங்கு கட்டிடம்
Newyork Times

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்ற பிறகு ஹாம்பர்க் நகரம் பிரிட்டன் கைவசம் வந்தது. யூதர்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டபவர்கள் மீது நியூரம்பர்க் விசாரணை நடத்தப்பட்டு பலரும் தண்டிக்கப்பட்டனர். அப்போது நாஜிக் கொடுமைகளின் அடையாளமாக விளங்குபவற்றையும் அழித்தாக வேண்டும் என்கிற பேச்சு அடிபட்டது. யூத கைதிகளின் உழைப்பில் உருவான இந்த கட்டடத்தையும் இடித்துவிடலாம் என்கிற பேச்சும் அடிபட்டது.

ஆனால், அதற்கு அதிக பொருட் செலவாகும் என்பது போன்ற காரணிகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. தற்போது கலை நிகழ்ச்சிகளுக்கான இடமாக விளங்கிவரும் செயிண்ட் பாலி கட்டிடத்தைத்தான் கூரை தோட்டத்துடன் கூடிய நட்சத்திர விடுதியாக மாற்றலாம் என முடிவெடுத்திருக்கின்றனர். அதற்கான மாதிரி வரைபடமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 2021-ம் ஆண்டிற்குள் இதை முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

டார்க் டூரிஸம் ஜாக்கிரதை!

சுற்றுலா செல்வதில் பல வகையான அனுபவங்கள் உண்டு. அதில் டார்க் டூரிஸம் என்பதும் ஒருவகை. போர், வன்முறை, இனப்படுகொலை போன்ற வரலாற்றில் எதிர்மறையான காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்குச் செல்வது ’டார்க் டூரிஸம்’ எனப்படும். இந்தியாவில் உதாரணமாக ஜாலியான் வாலாபாக் போன்ற இடங்களுக்குச் செல்வது டார்க் டூரிஸம் ஆகும். அந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூறுவதற்காக இத்தகைய பயணங்கள் மேற்கொள்ளப்படும்.

செயிண்ட் பாலி பதுங்கு கட்டிடம்
செயிண்ட் பாலி பதுங்கு கட்டிடம்
Newyork Times

செயிண்ட் பாலி கட்டிடம் கட்டிடக்கலையில் மிகச் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. எத்தகைய வரலாற்று முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் நாஜிக்களின் யூத இனப்படுகொலையில் நினைவுகளும் அதில் சேர்ந்தே இருக்கின்றன என்கிற ஒரு கருத்தும் எழுந்தது. அத்தகைய டார்க் டூரிஸத்துக்கான தளமாக இந்த புதிய நட்சத்திர விடுதி மாறிவிடக்கூடும் எனச் சர்ச்சை எழுந்தது. அதற்குப் பதிலளித்த என்.எச். குழுமம், “இந்த இடத்தின் வரலாற்றை நாங்கள் அறிவோம், எனவே மிகவும் கவனத்துடன் செயல்படுவோம். இங்கு இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நினைவிடமும் சேர்த்தே அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

நாஜி தீம் பார்க்:

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அண்டை நாடான போலாந்தை ஜெர்மனி ஆக்கிரமித்திருந்தது. அந்தப் போர் சமயத்தில் போலாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஹிட்லர் வுல்ஃப் லேர் என்கிற கட்டடத்தில் பதுங்கியிருந்தார். வுல்ஃப் லேர் கட்டடமும் புனரமைக்கப்படலாம் என்கிற பேச்சு சில மாதங்களுக்கு முன்பு அடிபட்டது. இந்தக் கட்டடத்தில் ஹிட்லர் தங்கியிருந்த சமயத்தில்தான் அவர் மீதான ஒரு கொலை முயற்சியும் அரங்கேறியது. இந்த கட்டடத்திற்கு முசோலினி போன்றவர்களும் வருகை புரிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் 1944-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செயல்பாடற்றுப் போனது.

போலாந்து நாட்டில் உள்ள கட்டடம்
போலாந்து நாட்டில் உள்ள கட்டடம்
The Sun

வனப்பகுதியில் இந்த கட்டடம் அமைந்திருப்பதால் சாகச விரும்புகளின் விருப்பத் தேர்வாக வுல்ஃப் லேர் விளங்கி வந்தது. வரலாற்றில் இடம்பெற்ற சின்னங்களை புணரமைத்து மறு உருவாக்கம் செய்கிறபோது அந்த இடத்தின் வரலாற்றை திருத்திவிடாத வண்ணம் அது அமைய வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். திருத்தி எழுத்தப்பட முடியாத அளவிற்கு சிலரின் வரலாறு கடினமான கறைகளைக் கொண்டது. அந்த பட்டியலில் ஹிட்லருக்கும் நாஜிக்களுக்கும் என்றுமே முதலிடம் தான்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு