பொதுச்சுவர்களை சிறுநீர் கழித்து அசுத்தம் செய்வோருக்கு கடிவாளம் போடும் வகையில், அவர்கள் மீதே திருப்பியடிக்கும் வகையில் நூதன பெயின்ட், லண்டன் நகரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
என்னதான் சுத்தம், சுகாதாரம் என்று நாம் பேசினாலும், ஆத்திர அவசரம் என்றால், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதற்கு பலரும் தயங்குவதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களாக இருந்தாலும் சரி, கிராமப்புறங்களாக இருந்தாலும் சரி பொதுவெளியில் இருக்கும் சுவர்களைக் கழிப்பிடமாக பயன்படுத்தும் பழக்கம் மட்டும் இன்னமும் சிலரிடம் மாறாமல் இருக்கிறது. சுவர்களின் மீது சிறுநீர் கழிக்கக்கூடாது என்று எழுதி வைத்தாலும், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் சுவர்களை அசிங்கப்படுத்தும் செயலை தொடர்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பொது இடங்களில் பெண்கள் இருக்கிறார்கள் என்று இவர்கள் கவலைப்படுவது கிடையாது. பலரும் புழங்கும் இடத்தை சுகாதாரக்கேடாக்கினால் நோய் பரவும் என்ற சிந்தனையும் இருப்பதில்லை. இந்தப் பிரச்னை ஏதோ நம்மூரில்தான் இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். நன்கு வளர்ந்த மேலைநாடுகளிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனும் இதற்கு விதிவிலக்கல்ல. அங்குள்ள சோஹோ பகுதியில் பலரும் அரசு சுவர்கள், பொது இடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பல இடங்களிலும் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில் இதை தடுக்கும் வகையில், சிலரின் இந்த பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்டுபிடிப்பே `ஆன்ட்டி பீ பெயின்ட் (Anti Pee Paint)'. இந்த பெயின்டின் சிறப்பம்சம் என்னவென்றால், சிறுநீர் கழிக்கப்படும்போது அதனை அவர் மீதே மீண்டும் திருப்பி அடிக்கும் வகையிலான ஒருவகை திரவம் இதில் கலக்கப்பட்டிருக்கும். இந்த பெயின்ட் சுவரின் மேற்பரப்பை பாதுகாத்து, அதற்கு மேலே ஓர் அடுக்கை உருவாக்கும் வகையில் திரவம் கலக்கப்பட்டுள்ளது. அதாவது சுவர்களில் பல அடுக்குகளாக இந்த பெயின்ட் பூசப்படும். இதனால் சுவரில் படும் சிறுநீர் உட்பட எந்த திரவமாக இருந்தாலும், எதிர் திசையிலேயே திருப்பி அடிக்கப்படும்.

இந்த பெயின்ட் முயற்சியை பரிசோதிக்க, தற்போது லண்டனில் அதிகளவில் சிறுநீர் கழிப்பு புகார்கள் வந்த 10 பகுதிகளில் சோதனை அடிப்படையில் ’ஆன்ட்டி பீ பெயின்ட்’ அடிக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியில் பலன் கிடைத்துள்ள நிலையில், லண்டனின் சோஹோ பகுதியில் பல கட்டடங்களுக்கு இவ்வகை பெயின்ட் பூசத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், அதிகமாக சிறுநீர் கழிக்கும் பொது இடங்களில் இந்த பெயின்டை பூசுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக லண்டன் மாநகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.