பாரிஸில் உள்ள ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றிய நபர் ஒருவர், அலுவலக கேளிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் `சும்மா’ இருந்ததால் தன்னை பணிநீக்கம் செய்ததற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது `க்யூபிக் பார்ட்னர்ஸ்’ என்ற ஆலோசனை நிறுவனம். இந்த நிறுவனம், வேலைக்கான வேடிக்கையான அணுகுமுறைகளுக்கு பிரபலமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் கருத்தரங்குகள், வார இறுதி பார்ட்டிகள், சக ஊழியர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வது, புனைப்பெயர்களை வழங்குவது போன்றவை வாடிக்கை. அவற்றில் பங்கேற்குமாறு, அதன் ஊழியர்களை கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அங்கு பணிபுரிந்து வந்தவர்களில் ஒருவர், இந்த மாதிரியான கேளிக்கைகளில் விருப்பமில்லாமல், எதிலும் பெரிதாகக் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் ஒருவித சலிப்புத்தன்மையுடன் இருந்து உள்ளார். இதனால், நிறுவனத்தின் நடத்தையை மீறியதாகவும், சலிப்பானவராக இருப்பதாகவும் கூறி, அவரை அந்நிறுவனம் 2015-ம் ஆண்டு பணிநீக்கம் செய்தது. இந்த முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட ஊழியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்திய நிலையில், அந்த நபருக்கு தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உள்ளதாகக் கூறிய நீதிமன்றம் `Right to be boring' என்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும், அவருக்கு அவர் பணிபுரிந்த நிறுவனம் 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.