நாம் எல்லோரும் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லவா? ஆனால் ஒரு நாடு மட்டும் இன்னமும் பல நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயம் அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் வடகொரிய மக்களுக்கு இது தான் நிதர்சனம். நாம் சமீபத்தில் கூட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-ன் வினோத உத்தரவைக் கடந்து வந்தோம். அதாவது `தனது தாத்தாவின் மறைவு தினத்தை முன்னிட்டு வடகொரிய மக்கள் அனைவரும் சிரிக்கத் தடை' என அறிவிக்கப்பட்டு இருந்தது. வடகொரியாவில் இதுபோல பல விநோத, அதிர்ச்சியான, ஆச்சரியமான பல சட்டங்கள் அமலில் உள்ளது. ஆனால், வட கொரியாவைத் தாண்டி வெளி உலகிற்குத் தெரிந்தது ஒரு சில சட்டங்கள் தான். இம்மாதிரியான வடகொரியாவில் வேறு என்னென்ன விநோத சட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் இருக்கிறதெனத் தேடினோம்.

இந்த ஆண்டு 2022 அல்ல... ஜூச் 111 தான்!
நாம் எல்லாரும் கிரிகோரியன் காலண்டர்படி 2022 ஆம் ஆண்டுக்குள் கால் வைத்திருக்கிறோம். ஆனால் வடகொரியாவின் நிறுவனர் கிம் இல்-சுங் பிறந்த நாளான ஏப்ரல் 15, 1912-ல் இருந்து தான் வடகொரியாவின் காலண்டர் தொடங்குகிறது. அதன்படி பார்த்தல் வடகொரியா மக்களுக்கு இந்த ஆண்டு ஜூச் 111.
ஒரே வேட்பாளர்! அவருக்கே ஓட்டு!
நாம் அனைவரும் வடகொரியா ஒரு சர்வாதிகார நாடு என நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை, வடகொரிய ஒரு ஜனநாயக நாடு. அங்கே ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடக்குமாம். அந்த தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிப்பார்களாம். ஆனால் இதில் ஒரே ஒரு சின்ன ட்விஸ்ட்! மேயர் தேர்தல் தொடங்கி உள்ளூர் சட்டசபைத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் ஒரு வேட்பாளர் மட்டுமே இருப்பார். மக்கள் நிச்சயம் அவருக்குத் தான் ஓட்டுப் போடவேண்டும். ஒருவேளை யாரவது ஒருவர் தேர்தலில் வாக்களிக்கத் தவறவிட்டால் அவருக்கு நிச்சயம் தண்டனை உண்டாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒரு தவறு! மூன்று தலைமுறைக்குத் தண்டனை!
நம் நாட்டில் இன்னும் பல குற்றங்கள் தீர்ப்பை எட்டவில்லை. ஆனால் வடகொரியாவின் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையானவை. யார் என்ன தவறு செய்தாலும் அவர் உட்பட, அவருடன் சேர்த்து மூன்று தலைமுறைக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும். அதாவது அவர், அவரது பெற்றோர், அவரது தாத்தா பாட்டி மற்றும் அவரது பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனால் பெரும்பாலும் அந்த நாட்டில் குற்றமே நடப்பதில்லையாம்.

மலம் கழிக்கவில்லையா? நிச்சயம் அபராதம்!
கடந்த சில வருடங்களுக்கு முன் தென்கொரியா வடகொரியாவிற்கு உரங்கள் அனுப்புவதை நிறுத்திக் கொண்டது. அதனால் வடகொரியாவில் உரங்கள் கிடைப்பதில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைச் சீர்செய்ய மக்களின் மலங்கள் உரங்களாக மாற்றப்பட்டது. இதில் என்ன பிரச்சினை என்றால், வடகொரியாவில் இருக்கும் அனைத்து குடும்பமும் இத்தனை பவுண்டு மலம் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். அதற்குக் குறைவாக மலம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படுமாம்.
நைட்டில் எதற்கு லைட்டு?
வடகொரியா மிகக் கடுமையான மின்சார தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் மிகப் பழமையானது. இதனால் உலகில் இருக்கும் மற்ற நாடுகள் போல் வடகொரியாவால் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. அதனால் தினமும் இரவு நேரத்தில் வடகொரியாவில் மின்சாரத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம். மேலும் பகலில் சில மணி நேரத்திற்கு மட்டுமே மின்சாரம் இருக்குமாம். இந்த விஷயமும் செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படம் மூலம் தான் வெளியுலகத்திற்குத் தெரியவந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்ன ஹேர்ஸ்டைல்? முடிவு செய்யும் அரசாங்கம்!
எல்லா மனிதர்களுக்குமே அவரவர் முடி மீது ஒரு தனி பிரியம் உண்டு. ஆனால் வடகொரியாவில் மக்கள் தங்களது முடியை எப்படி வெட்டிக் கொள்ள வேண்டும் என்பதைக் கூட அரசாங்கம் தான் முடிவு செய்கிறது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது தானே. வடகொரியா அரசாங்கம், மக்கள் பயன்படுத்த குறிப்பிட்ட வகையான ஹேர்ஸ்டைல்களை மட்டுமே அனுமதித்துள்ளதாம். அதைத் தவிர வேறேதாவது ஹேர்ஸ்டைல் செய்தால் நிச்சயம் தண்டனை தான். மேலும் திருமணமாகாத பெண்கள் நிச்சயம் நீளமாக முடியை வளர்த்துக் கொள்ளக் கூடாதாம்.
என் வழி தனி வழி!
கிம் ஜாங் உன்னிற்கு கூடைப்பந்து மிக பிடித்த விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. அதனால் வடகொரியாவில் மக்கள் கூடைப்பந்து விளையாட ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதில் என்ன தவறு என்று நினைக்கிறீர்களா? உலகமே கூடைப்பந்து விளையாட்டிற்கு ஒரு விதிமுறை வைத்திருந்தால் வடகொரியா மட்டும் அந்த விதிமுறையை மாற்றி அமைத்திருக்கிறதாம். அதன்படி தான் வடகொரியாவில் கூடைப்பந்து போட்டி நடைபெறுமாம். அந்த போட்டிகளை கிம் ஜாங் உன் விரும்பி பார்ப்பாராம்.

இன்டர்நெட்டா... அப்படின்னா?
நம் குழந்தைகள் கூட இப்பொழுது யூடியூப் பார்க்காமல் உணவு உண்பதில்லை. ஆனால் வடகொரியா மக்களுக்கு இணையதளம் என்றால் என்ன என்றுகூடத் தெரியாது. சில அரசாங்க வேலைகளைத் தவிர அங்கே யாருக்கும் இணையதளம் பயன்படுத்த அனுமதி இல்லை. வெளிநாடுகளில் இருந்து போகும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கூட அங்கே 3G சேவை மட்டும் தானாம்.
கடந்த பல வருடங்களாகவே வடகொரியா ஒரு மெகா பிக்பாஸ் வீடாகவே இருந்து வருகிறது. வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று வெளியுலகத்தினர் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அதுபோல் வடகொரியா மக்களுக்கும் வெளியுலகத்தைப் பற்றித் தெரியாது. அரசாங்கம் வெளியிடும் செய்திகளை மட்டும் தான் பார்த்து அந்நாட்டு மக்கள் வெளியுலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். அப்படிதான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டை வைத்துள்ளார். என்ன மக்களே!!! நீங்களும் வடகொரியாவிற்கு ஒரு ட்ரிப் போயிட்டு வர்ரீங்களா!?