ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் டோனோ பினீரோ (Toño Piñeiro). இவர் தனக்குச் சொத்தாகக் கிடைத்த பூர்வீக வீட்டை இடித்துவிட்டு புதுப்பிக்க முடிவுசெய்திருக்கிறார். அப்போது அவர் வீட்டுச் சுவரை இடித்தபோது ஆறு உலோக டப்பாக்களில் (canisters) பணம் இருப்பதைக் கண்டிருக்கிறார். சுவருக்குள் எப்படி உலோகப் பெட்டி சென்றது என்ற சந்தேகத்துடன் அதைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பணம் இருந்திருக்கிறது.

மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டோனோ பினீரோ அந்தப் பணம் முழுவதையும் எண்ணிப் பார்த்திருக்கிறார். அதை எண்ணிப் பார்த்ததில் 47,000 பவுண்டு அதாவது, இந்திய மதிப்பில் (சுமார் ரூ. 46.5 லட்சம் பணம் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு விரைந்திருக்கிறார். ஆனால், அங்கு அவருக்கு ஒரு துரதிஷ்டவிதமான சம்பவம் நடந்திருக்கிறது. வங்கி அதிகாரிகள் அந்தப் பணம் செல்லாது எனத் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், அந்தப் பணத்தை 2002-ம் ஆண்டு ஸ்பெயின் வங்கி பழைய நோட்டுகள் எனக்கூறி நிறுத்திவிட்டதாக அதிகாரிகள் அவரிடம் கூறியிருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், தனக்குக் கிடைத்த பணம் பயனளிக்காமல் போனதை நினைத்து வருந்திய டோனோ பினீரோ, பணத்தைப் புதுப்பிக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என யோசித்திருக்கிறார். அப்போது புதுப்பிக்க முடிந்த சில பணத் தாள்கள் இருந்ததையும் கவனித்திருக்கிறார்.

அதன்மூலம் மீண்டும் வங்கியை அணுகி 30,000 பவுண்டு (ரூ. 30 லட்சம்) திரும்பப் பெற்றார். இது தொடர்பாக அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், "பணம் ஈரமாவதைத் தவிர்க்க உலோக டப்பாக்களில் பணத்தைவைத்து சுவரை எழுப்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எப்படியோ அதிகபட்ச பணத்தை மீட்டதில் மகிழ்ச்சியே. மீதமுள்ள தொகையை நினைவுக்காக வைத்திருக்க முடிவுசெய்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.