இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயதுப் பெண் ஜெஸ் டேவிஸ்; இவர், சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில், இரண்டாமாண்டு வரலாறு மற்றும் அரசியல் பாடம் படிக்கும் மாணவி. இவருக்கு கர்ப்பத்துக்கான எந்த அறிகுறியோ, வயிறு வீங்கியோ காணப்படாத நிலையில் இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு முறைதவறிய மாதவிலக்கு வருவது வழக்கம் என்பதால், மாதவிடாய் தள்ளிப்போனதில் சந்தேகமும் வரவில்லையாம். திடீரென வயிற்று வலி அதிகரிக்கவும் அதையும் மாதவிடாய் வலி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அடுத்தநாள் தன் பிறந்தநாளையொட்டி, அன்று இரவு தன் வீட்டில் பார்ட்டி நடக்கவிருந்த நிலையில், குளித்தால் சரியாகிவிடும் என நினைத்துள்ளார். ஆனால், வலி இன்னும் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
கழிவறைக்குச் செல்லும் உணர்வு உந்தவே, அங்கு சென்றுள்ளார். தனக்கு குழந்தை பிறக்கும் என சற்றும் எதிர்பார்க்காத அவருக்கு, கிழியும் உணர்வு உண்டாகி குழந்தை பிறந்துள்ளது. அழுகை குரல் கேட்டு பிரமிப்பில் ஆழ்ந்தவருக்கு, நடப்பது கனவா நனவா என்றே தெரியவில்லை. ஆனால், அவருக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்துள்ளது.

தனக்கு நடந்த மிகவும் விசித்திரமான இந்தச் செயலால், என்ன செய்வதென்று தெரியாமல், தன் நண்பனைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர், ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை Princess Anne மருத்துவமனையில் சேர்த்தனர். உடனடியாகக் குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டது.
35 வார கர்ப்ப காலத்துக்கு பின்பு குழந்தை பிறந்துள்ளது தெரிய வந்தது. 3 கிலோ உள்ள குழந்தையும் தாயும் தற்போது ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.