திருமணத்திற்கு கேக் வெட்டுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், திருமண ஆடையையே கேக்காக வடிவமைத்தை கேள்விப் பட்டுள்ளீர்களா? சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கேக் வடிவமைப்பாளர் நடாஷா கோலின் கிம் ஃபா லீ ஃபோகாஸ் என்ற பெண், கேக்கில் ஆடையை வடிவமைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இது, சுமார் 131.15 கிலோ எடையில் மிகப்பெரிய கேக் ஆடையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேக் ஆடையின் சுற்றளவு 4.15 மீட்டர், அதன் உயரம் 1.57 மீட்டர் மற்றும் 1.319 மீட்டர் விட்டம் கொண்டது. இதன் பாவாடையானது அலுமினிய சட்டத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் கேக்கை வைத்திருக்கும் சிறிய பலகையும், அதில் எளிதாக நடக்க உதவும் சக்கரங்களும் இடம் பெற்றுள்ளன. கேக் ஆடையின் மேல்பகுதி, சர்க்கரைப் பசையால் அமைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் உலக திருமணக் கண்காட்சியின்போது இந்த கேக் ஆடையை நடாஷா வடிவமைத்து காட்சிப்படுத்தியுள்ளார். இதனை உலக சாதனையாக கின்னஸ் அங்கீகரித்துள்ளது. இந்த கேக் ஆடையை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர். அவர்களுக்கு கேக் ஆடையின் சில பகுதிகள், சுவைப்பதற்காக வழங்கப்பட்டன.
கேக் ஆடையை வடிவமைத்தது குறித்து தெரிவித்த நடாஷா, ’சில வருடங்களுக்கு முன்பு, நான் கேக் வடிவமைப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எனது சிறிய கடையில், ஸ்டுடியோவின் பின்புறம் திருமண கேக்கை அலங்கரிப்பதில் மும்மரமாக இருந்தபோது, எனக்கு இந்த யோசனை தோன்றியது. அதையடுத்து, ஒரு முழுமையான திருமண ஆடையும் கேக்கால் செய்ய வேண்டுமென்று முழு வீச்சாக ஈடுபட்டேன். சில நாள்களுக்குப் முன், எனது இளைய மகள் எல்லி எனது முதல் முயற்சியின் மாடலாக இருந்தார். இந்தப் பணியானது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. பலநாள் தீவிர முயற்சிக்குப் பின்னர் தற்போது இது நிறைவேறியுள்ளது" என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.