மேற்கு ஆப்பிரிக்காவின், கானா நாட்டில் வசிப்பவர் 29 வயதான சுலைமான அப்துல் சமத் (Sulemana Abdul Samed). இவரின் அசுர உயரத்தால் உள்ளூர்வாசிகளிடையே மிகவும் பிரபலம். 7.4 அடி உயரம் கொண்ட இவர், `உலகின் உயரமான மனிதர்' என்ற கின்னஸ் சாதனை படைத்த துருக்கி நாட்டின் சுல்தான் கோசேனைவிட 1 அடியே உயரம் குறைவானவர்.

இவர் `Gigantism’ என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் இவர் வளர்ந்துகொண்டே இருப்பார். சமீபத்தில் கானாவின் உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்ற இவருக்கு, உயரம் அளக்கப்பட்டது. அதில் இவரின் உயரம் 9.6 அடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அடடே, கின்னஸ் சாதனை படைத்த மனிதனைவிட உயரம் கூடிவிட்டதே என்று நினைத்தபோதுதான், இவரின் உயரம் தவறாகக் கணக்கிப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து சமத் கூறுகையில், ``நான் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறேன். யாருக்குத் தெரியும், ஒரு நாள் அந்த உயரத்தையும் அடைவேன். ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு நான் வளர்கிறேன்.

என்னை நீங்கள் நான்கு மாதங்கள் வரை பார்க்காமல், அதன் பிறகு பார்த்தால், நான் வளர்ந்திருப்பதை உணர்வீர்கள். இப்படி தான் அல்லா என்னைத் தேர்வு செய்திருக்கிறார். கடவுள் என்னை இப்படி உருவாக்கியது குறித்து எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
உயரமான மனிதர் இன்னும் வளர்ந்துகொண்டே செல்கிறார் என்ற செய்தி, தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.