தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் பல விலங்குகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டவை. காட்டில் வாழ்ந்த பல விலங்குகளை மனிதன் வீட்டில் வளர்க்கப் பழக்கப்படுத்தினான். சில உயிரினங்கள் குணாதிசயங்களை மாற்றி, மனிதர்களோடு வளர ஆரம்பித்தது.

அப்படித்தான் நரியிலிருந்து நாய் பழக்கப்படுத்தப்பட்டது. ஆனால், பூனைகள் வீட்டின் எஜமானர்களைப் போல நடந்து கொள்பவை. அவற்றை எப்போது மனிதர்கள் பழக்கப் படுத்தினார்கள் என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பல ஆச்சர்ய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த ஆய்வின் முடிவுகள் `Heredity’ என்ற நாளிதழில் வெளியானது. அதில் நாகரிகம் முதலில் தோன்றிய காலத்தில், மனிதர்கள் விவசாயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினர். ஆனால், பயிர்களுக்குப் பாதகம் விளைவிக்கும் வகையில், பூச்சிகளும் எலிகளும் அச்சுறுத்தின. அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரப் பூனைகள் பயன்படுத்தப்பட்டன. அதாவது மனிதர்களோடு பழக்கமாகிய முதல் விலங்கு பூனைகள்தான் என்று ஆய்வு சொல்கிறது.

காட்டுப்பூனைகள் பிடிக்கப்பட்டு தானியக் கிடங்குகளில் விடப்பட்டது. அவை அங்குள்ள எலிகளை வேட்டையாடி பயிர்களைக் காக்கும். மத்திய கிழக்கு பிறை வடிவ பகுதியில் தான் முதன்முதலில் இவை பழக்கப்படுத்தப்பட்டன. தற்போது நவீன நாளில் இப்பகுதியில் இராக், சிரியா, லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் போன்றவை பழக்கப்படுத்தியுள்ளன.
இந்த ஆய்வின் துணை ஆசிரியர் லெஸ்லி எ லயோனஸ் கூறுகையில், ``12,000 ஆண்டுகளுக்கு முன்பு பூனைகள் முதன்முதலாகப் பழக்கப்படுத்தப்பட்டன. அதன்பிறகு பூனைகளை வளர்ப்பவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பயணிக்கையில், தங்களுடன் பூனைகளையும் அழைத்துச் சென்றனர்.
பூனைகளின் மரபணுக்கள் அதன் குட்டிகளுக்குத் தலைமுறைக்குத் தலைமுறை கடத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகம் முழுவதிலும் பூனைகளின் மரபணுக்கள் மாறுபட்டன. இதனால் ஒரு பகுதியில் உள்ள பூனைகள் மற்றொரு பகுதியில் உள்ள பூனையோடு மாறுபட்டிருக்கும்.

பூனையை நாங்கள் பாதி பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு என்றே அழைப்போம். ஒருவேளை நீங்கள் பூனைகளை இப்போது காட்டில் விட்டாலும், அவற்றால் காட்டில் வேட்டையாடி, உயிர்பிழைத்து இனப்பெருக்கம் செய்ய முடியும்.
வீட்டில் பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் மற்ற விலங்குகளைப் போல, நாம் பூனைகளின் குணங்களை உண்மையில் மாற்றவில்லை. இதனால் பூனைகள் சிறந்தவை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.