கடந்த திங்கள் கிழமை அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. ஆனாலும், அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. இந்த நிலநடுக்கத்தில் 8,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், இன்னும் மீட்புப்பணி நிறைவடையவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சிரியாவில் கடுமையான குளிர் நிலவிவருகிறது. இது மீட்புப் படையினருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. மீட்புப்பணியின்போது நிகழ்ந்த சில அசாதாரண சூழலை மீட்புப்படையினர் பகிர்ந்துவருகின்றனர். கலீல் அல்-சுவாதி எனும் மீட்புப்பணியாளர், "ஒரு கட்டடத்தின் இடிபாடுகளில் நாங்கள் தோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு குரல் கேட்டது. நாங்கள் வேகமாக அந்தப் பகுதியின் இடிபாடுகளை அகற்றிப் பார்த்தபோது, தொப்புள் கொடிக்கூட அறுபடாத ஒரு குழந்தையைக் கண்டோம். உடனே நாங்கள் தொப்புள் கொடியை வெட்டி அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால், அந்தக் குழந்தையின் தாயைக் காப்பாற்ற முடியவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி முஹமது சஃபா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. அதில் இடிபாடுகளுக்கு மத்தியில் 7 வயது சிறுமியும், அவளின் சகோதரனும் சிக்கியிருந்தார்கள். அதில் தன் சகோதரனை தலையில் கைவைத்து அவனைப் பாதுகாத்துவந்திருக்கிறார் அந்தச் சிறுமி. அவர்கள் இருவரும் தைரியமாக இருந்தனர். பேரழிவிலும் அந்தச் சிறுமி வலிமையுடனும், உறுதியுடனும் இருந்ததற்காக ஹீரோவாகப் பாராட்டப்பட்டுவருகிறார்.
மற்றொரு நபர், "என்னால் இடிபாடுகளிலிருந்து என் சகோதரனை, என் மருமகனை மீட்டெடுக்க முடியவில்லை. இங்கே சுற்றிப் பாருங்கள். இங்கு எந்த அரசு அதிகாரியும் இல்லை. குழந்தைகள் குளிரில் உறைந்து போகின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.