Published:Updated:

ஒரே பிரசவத்தில் பத்து குழந்தைகளைப் பெற்றதாகக் கூறிய `வைரல்' பெண்மணி கைது; என்ன காரணம்?

பெண்கள் மத்தியில் பரபரப்புச் செய்தி இதுவாகத்தான் இருந்தது... `ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிதோலே எனும் பெண்மணி!’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்கள் மத்தியில் பரபரப்புச் செய்தி இதுவாகத்தான் இருந்தது... `ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சிதோலே எனும் பெண்மணி!’

ஆனால், இப்போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது சிதோலே என்ற பெண்மணி அண்மையில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறப்பட்ட செய்தி உலகெங்கும் வைரலானது. இந்தப் பிரசவத்தில் ஏழு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என்றும், அனைவரும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என்றும் கூறப்பட்டது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் கருதப்பட்டது.

அதோடு, அந்தப் பெண்ணின் தோழியும் இதுகுறித்து பேட்டி அளித்திருந்தார். தன் தோழி சிதோலேக்கு பிரிட்டோரியா மருத்துவமனையில் 10 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதனால், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

குழந்தை - Representational Image
குழந்தை - Representational Image

சிதாலேயும் தன் பங்குக்கு இந்த கர்ப்ப காலத்தை மிகமிகச் சிரமப்பட்டு கடந்ததாகவும் தூக்கமில்லா பல இரவுகளைச் சந்தித்தாகவும் குறிப்பிட்டார். அவருக்கு ஏற்கெனவே ஆறு வயதுள்ள இரட்டைக் குழந்தைகள் இருப்பதால், அவருடைய கணக்குப்படி இப்போது மொத்தம் பன்னிரண்டு குழந்தைகள்.

இந்நிலையில் இது குறித்து பிரிட்டோரியா மருத்துவமனையில் பத்திரிகையாளர்கள் விசாரித்தனர். அப்போதுதான் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. ``நாங்கள் சிதோலே என்று கூறப்படும் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கவில்லை" என அங்குள்ள மருத்துவர்கள் கூறினர். அதோடு, அந்த மருத்துவமனையில் அப்படியொரு மெகா பிரசவமும் நடக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.

இது குறித்து பல இடங்களில் விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தன. அதன் பிறகு, அந்தப் பெண்மணியைக் காணவில்லை என்ற தகவலும் வெளியானது. தொடர்ந்து விசாரித்த பிறகுதான் உண்மை வெளிப்பட்டது. பத்துக் குழந்தைகள் பிறந்தது என்பது உண்மையே அல்ல. விளம்பரத்துக்காகவும் நன்கொடை பெறுவதற்காகவும் அப்படி சித்திரித்துக் கூறப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது.

உண்மை தெரியவந்த பின்பு கடந்த 17-ம் தேதி அன்று அதிகாலை ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள ராபி ரிட்ஜின் வடக்கு நகரத்தில் உள்ள சிதோலேவின் உறவினர் வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, சிதோலே என்கிற பெண் பத்துக் குழந்தைகள் பெற்றெடுக்கவில்லை என்று தென் ஆப்பிரிக்க தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தப் பெண்மணிக்கு பத்துக் குழந்தைகள் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறியுள்ளது.

சிதோலே
சிதோலே
African News Agency

சிதோலே அவரது விருப்பத்துக்கு எதிராகக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை விடுவிப்பதற்கு நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இப்போது அவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் கைவிலங்குடன் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கவே போதும் போதும் என்றாகிவிடுகிற காலகட்டம் இது. இதில் பத்துக் குழந்தைகளைப் பெற்று வளர்க்க ஆசைப்படுவார்களா, என்ன!

- எஸ்.சங்கீதா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு