அமெரிக்காவை தளமாக கொண்ட ஜூம் நிறுவனம் தனது ஊழியர்களில், 1,300 நபர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் போது, அலுவலக சந்திப்புகள், கான்ஃபரன்ஸ் அழைப்புகள் என அனைத்தும் ஜூமில் தான் நடைபெற்றது. பலரும் தங்களது மொபைலில் ஜூம் ஆப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர்.

தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், கான்ஃபரன்ஸ் சேவைகளுக்கான தேவையும் குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை 63 சதவிகிதம் சரிந்தது. இதனால் தனது ஊழியர்களில் இருந்து 1,300 நபரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக, நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் யுவான் தெரிவித்துள்ளார்.
பணிநீக்க நடவடிக்கைகள் குறித்து எரிக் யுவான் கூறுகையில், ``நிறுவனத்தில் பணிபுரியும் 1300 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்த எண்ணிக்கை மொத்த பணியாளர்களில் 15 சதவிகிதம் ஆகும்.
அதோடு வரும் நிதியாண்டில் 98 சதவிகிதம் பேருக்கு ஊதிய குறைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. என்னுடைய போனஸையும் கைவிடுகிறேன்.
பணிநீக்கம் செய்யப்படுபவர்கள், `கடின உழைப்பாளி, திறமையான சக ஊழியர்கள்’. நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் பணிநீக்கம் குறித்து உங்களுக்கு அடுத்த 30 நிமிடத்தில் மின்னஞ்சல் வரும். அமெரிக்கர் அல்லாத ஊழியர்களுக்கு உள்ளூர் தேவைகளைப் பின்பற்றித் தெரிவிக்கப்படும்.

அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 16 வாரச் சம்பளம், உடல்நல காப்பீடு, 2023-ம் நிதியாண்டுக்கான வருடாந்திர போனஸ் போன்றவை வழங்கப்படும். அமெரிக்காவிற்கு வெளியே உள்ள ஊழியர்களுக்கும் இதே போல் ஆதரவு இருக்கும். முழுநேர ஜூமிக்கள் புறப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு அமேசான், ட்விட்டர், ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்த வரிசையில் தற்போது ஜூம் இணைந்துள்ளது.