Published:Updated:

ஆம்னி பேருந்து கடத்தப்பட்ட விவகாரம்: ஜாமீனில் வெளியே வந்தார் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா!

ஜாமீனில் வெளியே வந்த சூர்யா சிவா

தனியார் ஆம்னி பேருந்து கடத்தப்பட்ட வழக்கியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த சூர்யா சிவாவுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

ஆம்னி பேருந்து கடத்தப்பட்ட விவகாரம்: ஜாமீனில் வெளியே வந்தார் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா!

தனியார் ஆம்னி பேருந்து கடத்தப்பட்ட வழக்கியில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த சூர்யா சிவாவுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியிருக்கிறது.

Published:Updated:
ஜாமீனில் வெளியே வந்த சூர்யா சிவா

தி.மு.க எம்.பி-யும், கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. ‘தி.மு.க-வில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்த இவருக்கு ‘பா.ஜ.க., ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர்’ பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 11-ம் தேதி விக்கிரவாண்டி அருகே சென்றுகொண்டிருந்த சூர்யா சிவாவினுடைய கார் மீது, ஆம்னி பேருந்து ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காருக்கு ஆகும் செலவைக் கொடுத்துவிடுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் கேட்டுக்கொள்ள, சூர்யா சிவா அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

அதன் பிறகு காருக்கு ஆன 5 லட்ச ரூபாய் பணத்தைக் கேட்டு, சூர்யா சிவா பலமுறை ஆம்னி பஸ் உரிமையாளரை அணுக, எந்த ரெஸ்பான்ஸும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதையடுத்து ஜூன் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனத்தின் பேருந்து ஒன்றை, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சூர்யா சிவா எடுத்துவந்து தன்னுடைய இடத்தில் நிறுத்தியிருக்கிறார்.

சிறைக்கு வெளியே சூர்யா சிவாவுக்கு வரவேற்பளித்த பா.ஜ.க-வினர்
சிறைக்கு வெளியே சூர்யா சிவாவுக்கு வரவேற்பளித்த பா.ஜ.க-வினர்

அதையடுத்து, ‘எங்களுடைய பேருந்தைக் கடத்திவைத்துக்கொண்டு, சூர்யா சிவா பணம் கேட்டு மிரட்டுகிறார்’ என சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளர் முருகானந்தம் என்பவர், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி, ஜூன் 23-ம் தேதி சூர்யா சிவா மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 17 நாள்கள் சிறையிலிருந்த சூர்யா சிவா, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், `தினம்தோறும் சம்பந்தப்பட்ட திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த சூர்யா சிவா நேற்றிரவு ஜாமீனில் வெளியே வந்தார்.

சிறையிலிருந்து வெளியே வந்த சூர்யா சிவாவுக்கு பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையோ ‘பொய்யான வழக்குகள் போடுவதை வாடிக்கையாகக்கொண்ட இந்த விளம்பர அரசுக்கு மீண்டும் ஒரு முறை உயர் நீதிமன்றம் குட்டுவைத்திருக்கிறது’ என சூர்யா சிவா ஜாமீனில் வெளியே வந்திருப்பது குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!