Published:Updated:

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

Published:Updated:

‘‘யேம்மா... சீக்கிரம் சாப்பாடு குடும்மா.  8 மணி ஆகிடுச்சு. சார் வந்துடுவாரு” என்று பள்ளிச் சீருடையில் வாசலைப் பார்த்தவாறு பரபரக்கிறாள், மூன்றாம் வகுப்பு படிக்கும் பாண்டிச்செல்வி.

அம்மா கொடுத்த சாப்பாட்டுக் கூடையையும் பள்ளிக்கூடப் பையையும் எடுத்துக்கொண்டு பாண்டிச்செல்வி வாசலுக்கு வர, ‘‘என்ன செல்வி ரெடியா?” என்றபடி டிவிஎஸ் 50 வண்டியில் அவர் வரவும் சரியாக இருந்தது.

ஏற்கெனவே ஒரு சிறுவன், பின்னால் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் அமர்ந்த பாண்டிச்செல்வி, அம்மாவுக்கு உற்சாகமாகக் கையசைத்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு ஆசிரியர்!

சற்று நேரத்தில், அதே வண்டி திரும்பி வந்து, அடுத்த தெருவில் இரண்டு பேரை ஏற்றிக்கொள்ள, ‘‘கருப்புசாமி, என்ன சாப்பிட்டே?” எனக் கேட்கிறார் அவர்.

‘‘கஞ்சிதான் சார்.”

‘‘இன்னைக்கு மத்தியானம் ஸ்கூல்ல, உனக்குப் புடிச்ச தக்காளி சாதம். நல்லாச் சாப்பிடணும்” என்றதுக்கு தலையசைத்தான்.

‘‘சார், இன்னிக்கும் கம்ப்யூட்டர் காட்டுவீங்களா?” என்று ஆவலோடு கேட்கிறான்  அஜித்குமார்.

மீண்டும் அதே வண்டி, இன்னொரு தெருவில் வந்து நிற்கிறது. ‘‘யார் இவர்?’’ என்று  அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டால், நம்மை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்.

‘‘இவரைத் தெரியாதுங்களா? இவருதான் ஸ்கூல் பெரிய வாத்தியாரு (தலைமையாசிரியர்). தினமும் புள்ளைங்களை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போய், சாயந்திரம் கூட்டிட்டு வருவாரு” என்றார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர்தான் சுரேஷ் பாபு. இப்படி, தினமும் 12 குழந்தைகளை  பள்ளிக்கு அழைத்துச்செல்கிறார். அவரை பள்ளியில் சென்று சந்தித்தோம்.

‘‘நான் 28 வருஷமா ஆசிரியரா இருக்கேன். 2008-ல் இந்தப் பள்ளியின் தலைமையாசிரியரா வந்தேன். இந்தப் பசங்களோட பெத்தவங்க, மலைவாழ் ஆதிவாசி மக்கள். யாருக்கும் படிப்பறிவு இல்லை. அக்கம்பக்கம் இருக்கிற ஊர்களுக்குப் போய், தினசரி கூலி வேலை  செய்றவங்க. அதனால், பசங்களை கூடவே கூட்டிட்டுப் போய்டுவாங்க. பசங்க, அங்கே ஒரு ஓரமா விளையாடிட்டு இருப்பாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்ததும், ‘பசங்களை படிக்க அனுப்புங்க’னு சொன்னேன். ‘அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம். விடிஞ்சதும் கிளம்பினாதான் கூலி வேலை கிடைக்கும். நீங்களே போங்கனு சின்னப் பசங்களை தனியாவும் ஸ்கூலுக்கு அனுப்ப முடியாதே’னு சொன்னாங்க. ஏன்னா, இவங்க இருக்கிற செல்லம் காலனியில் இருந்து, ஸ்கூல் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு” என்றார் சுரேஷ் பாபு.

கனவு ஆசிரியர்!

‘படிக்கும் வயதில் இந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை விளையாட்டாகவே கழிகிறதே’ என வருந்தியவருக்கு, சட்டென ஒரு யோசனை தோன்றியது.

‘‘உடனே நான், ‘சரி, உங்க பிள்ளைகளை பத்திரமா கூட்டிட்டுப்போய் திரும்பக் கூட்டிட்டு வர்றது என்னோட பொறுப்பு. ஒரு நாள் தவறாமல் இதைச் செய்றேன். அவங்களைப் படிக்க அனுப்புங்க’னு சொன்னேன். 2009-ல் ஆரம்பிச்சது. ஒவ்வொரு வருஷமும் 10 - 12 சின்னப் பிள்ளைகளை அந்த வருஷம் முழுக்க கூட்டிட்டுப் போகும் பொறுப்பை எடுத்துப்பேன். அடுத்த வருஷம், என் வண்டியில் வந்த பசங்க, அவங்களா வந்துடுவாங்க. அப்புறம், வேற புதுப் பசங்களைக் கூட்டிட்டுப் போவேன்” என்கிறார் சுரேஷ் பாபு.

ஆரம்பத்தில், தலை வாராமல், பொட்டு வைக்காமல் வரும் பிள்ளைகளுக்கு, இவரே முகம் கழுவி, தலைவாரி விடுவார். சுத்தம் பற்றி  பல முறை எடுத்துச் சொன்ன தன் பலனாக, இப்போது பள்ளி முழுவதும் பளிச் மாற்றம்.

‘‘நாங்க சுத்தமா வர்றதோடு, ஸ்கூலையும் சுத்தமா வெச்சுக்கிறோம். வீட்டிலும் சுத்தமா இருக்கணும்னு எங்க அம்மா, அப்பாவுக்கு சொல்லியிருக்கேன். எல்லாத்துக்கும் காரணம், எங்க ஹெட் மாஸ்டர்தான்” என்று முகம் மலரச் சொல்கிறாள், காமாட்சி என்ற மாணவி.
செஸ், கேரம், ரிங் பால்  போன்ற  விளையாட்டுகளிலும்  இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்திருக்கிறார் சுரேஷ் பாபு. கம்ப்யூட்டரை இயக்கி, தமிழில் டைப் செய்வது, படம் வரைவது என அசத்துகிறார்கள் இந்தச் சுட்டிகள்.

“நான், தினமும் சார் வண்டியிலதான் வர்றேன். எனக்கு வீட்டுல இருக்கிறதைவிட ஸ்கூல்ல இருக்கிறதுதான் ரொம்பப் பிடிக்குது. ஏன்னா, எங்க வீட்டுப் பக்கம் அடிக்கடி காட்டுப்பன்றி, ஓநாய் வந்துடும்.  இங்கே அந்தப் பயமே இல்லை. அனைவரோடும் சேர்ந்து படிக்கலாம், விளையாடலாம். எங்க வீடு ரொம்பச் சின்னது. ஒரே புழுக்கமா இருக்கும். இங்கே அப்படி இல்லை. ஏன்னா, இங்கேதான் ஃபேன் இருக்கே” என்று வகுப்பறையின் மேலே சுழலும் மின்விசிறியைக்  காட்டிச் சிரிக்கிறான், மூன்றாம் வகுப்பு அஜித்குமார்.

கனவு ஆசிரியர்!

அவன் தலைமுடியைக் கோதியவாறு சுரேஷ் பாபு, ‘‘இந்த வண்டியில, ஒரு முறைக்கு ரெண்டு பேரைத்தான் கூட்டிட்டுப் போக முடியும். காலையில் ஆறு டிரிப் சாயந்திரம் ஆறு டிரிப் அடிக்கணும். அதனால, தினமும் காலையில் சீக்கிரமே ரெடியாகி, வீட்டைவிட்டுக் கிளம்பிடுவேன். ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு இதுவரைக்கும் உடம்பு சரியில்லைனு ஆனதில்லை. அதனால், ஒரு நாளும் இந்த வேலையில இடைஞ்சல் ஏற்படலை. நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்த வண்டியில கூட்டிட்டுப்போன சில பசங்க, பெரியகுளத்தில் இருக்கிற மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்களை வழியில பார்க்கும்போது, உற்சாகமா கையசைப்பாங்க. அந்த ஒரு சந்தோஷம் போதுமே” என்கிறார் நெகிழ்வாக.

ம.மாரிமுத்து

சே.சின்னத்துரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism