Election bannerElection banner
Published:Updated:

"சாதனைக்காக மட்டும் யோகா செய்யாதீங்க!”

- சர்வதேச யோகா சகோதரிகள்

“சிங்கப்பூருக்குப் போறோம்... தங்கத்தோடு வர்றோம்” என உற்சாகத்தோடு சொல்கிறார்கள், சர்வதேச யோகாவில் கலக்கும் இரட்டைச் சகோதரிகள் மித்ராஸ்ரீ மற்றும் மிதுனாஸ்ரீ.

திருப்பூர், பாரதி கிட்ஸ் கேந்த்ராலயா மெட்ரிக் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் இவர்களை,  ‘யோகா ட்வின்ஸ்’ என்றே செல்லமாக அழைக்கிறார்கள்.

“இந்தியாவில் தோன்றி, உலகமே கொண்டாடும் வாழ்க்கை அறிவியல் கலை, யோகாசனம். இதை, ஒவ்வொருவரும் செய்யணும். கரும்பு தின்னக் கூலியும் கொடுக்கிற மாதிரிதான் யோகாசனத்துக்கு போட்டி வெச்சு பரிசும் கொடுக்கிறது” என அழகாகப் பேசுகிறார் மித்ராஸ்ரீ.

"சாதனைக்காக மட்டும் யோகா செய்யாதீங்க!”

மாவட்ட அளவில் 20 தங்கம், மாநில அளவில் 15 தங்கம், தேசிய அளவில் 10 தங்கம் என கரும்பான யோகாவுக்கு இவர் பெற்ற கூலி அசரவைக்கிறது.

“எங்க அம்மா, எவ்வளவு வீட்டு வேலைகள்  இருந்தாலும் தினமும் யோகாசனம் செய்யத் தவற மாட்டாங்க. அதை சின்னக் குழந்தையில் இருந்தே பார்த்து, நாங்களும் முறையா செய்ய ஆரம்பிச்சோம். எங்களின் வெற்றியில், அம்மாவின் பங்கு அதிகம்” என்று அம்மாவை அணைத்துக்கொண்டார் மிதுனாஸ்ரீ.

மாவட்ட அளவில் 15 தங்கம், மாநில அளவில் 10 தங்கம், தேசிய அளவில் 7 தங்கம் என தனது சகோதரிக்குப் போட்டியாக தங்கங்களைப் பெற்றுவருகிறார் மிதுனாஸ்ரீ. அந்தமானில் நடந்த 11 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச யோகாசனப் போட்டியில் இருவரும் இணைந்து தங்கம் வென்றிருக்கிறார்கள்.

“நடுவர்கள் குறிப்பிடும் கடினமான ஆசனங்களை, குறிப்பிட்ட நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். 2013-ம் ஆண்டு, டெல்லியில் நடந்த 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசியப் போட்டியிலும் தங்கம் வென்றோம். இதோ, சிங்கப்பூரில் நடக்கப்போகும் சர்வதேசப் போட்டிக்குத் தேர்வாகி இருக்கிறோம்” என்றார் மித்ராஸ்ரீ.

இந்தச் சகோதரிகளுக்கு 250 ஆசனங்கள் அத்துபடி.

"சாதனைக்காக மட்டும் யோகா செய்யாதீங்க!”

‘‘இது என்ன பெரிய விஷயம்? சிலர் 3,000 ஆசனங்கள் செய்றாங்களேனு உங்களுக்குத் தோணும்.  கின்னஸ் மற்றும் பல்வேறு ரெக்கார்டுகளுக்காக அந்த மாதிரி செய்வாங்க. அது தப்பான விஷயம். அப்படிச் செய்றது உடம்புக்கு தீங்கைத்தான் ஏற்படுத்தும்” என்று அதிரவைக்கிறார் மிதுனாஸ்ரீ.

‘‘ஆமாம் அங்கிள், ஒரு வார சாப்பாட்டை ஒரே வேளையில் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அதுபோலதான் இதுவும். யோகா என்றால், இணக்கமாக இணைதல் என்று பொருள். அதாவது, உடம்பை இணக்கமாக வைத்துக்கொள்வது. அதை, குறிப்பிட்ட நேரத்தில் முறையாகவும் அளவாகவும் செய்யணும். ஐந்து நொடிகளுக்கு ஓர் ஆசனம் செய்யலாம். அதை மீறி, சாதனை என்ற பெயரில் செய்யும்போது, உடம்பின் ரத்த ஓட்டத்தில் சீரற்ற தன்மை ஏற்படும். அடிக்கடி இந்த மாதிரி சாதனைகள் செய்வதால்... மூட்டுவலி, நம்புக் கோளாறுகள், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் உருவாகும்” என்று விளக்கினார் மிதுனாஸ்ரீ.

‘‘தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள், மற்ற உலக ரெக்கார்டுகளில்தான் ஆயிரக்கணக்கான ஆசனங்களைச் செய்வார்கள். அதைப் பார்த்து, பலரும் அவங்க குழந்தைகளை அப்படி சாதனையாளராக உருவாக்க ஆசைப்படுறாங்க. தயவுசெய்து அப்படி செய்யாதீங்க” என்ற சகோதரிகளின் குரலில் அக்கறை மின்னியது.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

படிப்பைக் கொடுத்த யோகா!

‘‘நல்லாப் படிச்சு டாக்டர் ஆகணும். அப்பா, அம்மாவை சந்தோஷமா வெச்சுக்கிறதோடு, முடியாதவங்களுக்கு உதவி செய்யணும். இதுதான் என்னுடைய எண்ணம். ஆனால், எவ்வளவு படிச்சாலும் மறந்துடும். படிக்கும்போதே, கவனம் சிதறும். ‘என்னடா இது, நமக்கு படிப்பு ஏறாதா? நம்ம கனவு அவ்வளவுதானா?’னு நினைச்சு கஷ்டப்பட்ட நேரத்தில், தேர்ந்தெடுத்ததுதான் யோகா” என்று புன்னகைக்கிறார் வசந்தராஜன்.

ராமநாதபுரம், செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் வசந்தராஜன், சர்வதேச யோகாசனப் போட்டிகளில் பரிசுபெற்று கவனம் ஈர்க்கிறார்.

"சாதனைக்காக மட்டும் யோகா செய்யாதீங்க!”

‘‘என் அப்பாவும் யோகா மாஸ்டர்தான். ஆனாலும், ‘என்கிட்டே நீ மனம் ஒன்றிக் கத்துக்க மாட்டே’னு சொல்லி, பத்மநாபன் என்கிற மாஸ்டரிடம் அனுப்பினார். தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு, என்னிடம் நிறைய மாற்றங்கள். பாடப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சால், மேஜிக் மாதிரி எல்லா பாடங்களும் மூளையில் பதிஞ்சு, எக்ஸாமில் கலக்க ஆரம்பிச்சேன்” என்கிறார் வசந்தராஜன் உற்சாகமாக.

மன ஒருங்கிணைப்புக்காக ஆரம்பித்த யோகாவில் ஆர்வம் அதிகமாகி, போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். 2011-பழனியில் நடந்த 15-17 வயது பிரிவில், மாநில அளவில் முதல் வெற்றி பெற்றார்.

"சாதனைக்காக மட்டும் யோகா செய்யாதீங்க!”

‘‘மாநிலப் போட்டிகள், தேசியப் போட்டிகளில் தங்கம், வெள்ளி என 25-க்கு மேற்பட்ட பதக்கங்கள் வாங்கிட்டேன். 200 ஆசனங்கள் வரை செய்வேன். இதைப் பார்த்து எங்க ஸ்கூலில் யோகாவுக்காக ஒரு வகுப்பை ஒதுக்கியிருக்காங்க. அதில், சில யோகாவை மற்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்காங்க. இது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. டாக்டர் ஆகும் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற தன்னம்பிக்கையும் வந்திருக்கு. நான், டாக்டர் ஆனதும் என்கிட்டே வர்றவங்களுக்கு பிரிஸ்கிரிப்ஷன்ல மருந்தை எழுதும்போது, யோகாவையும் எழுதிக்கொடுப்பேன், இலவசமாக் கற்றுக்கொடுப்பேன். அவங்க ஆரோக்கியமாகி, மறுபடியும் என் ஹாஸ்பிடலுக்கு வராமல் இருந்தாலும், இந்த டாக்டருக்கு சந்தோஷம்தான்” என்று சிரிக்கிறார் வசந்தராஜன்.

ர.அரவிந்த்

உ.பாண்டி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு