Election bannerElection banner
Published:Updated:

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

‘ஐ யம் பேக்’ என்று கோடைக்காலம் வந்தாச்சு. மார்ச் மாதத்திலேயே மண்டைக்குள் புகுந்து, தொண்டைத் தண்ணீரை உறிஞ்சுறாரு சூரியன் அண்ணாச்சி. தெருவுக்குத் தெரு “இளநீர்.... இளநீரே...” குரல். தொலைக்காட்சி விளம்பரத்திலோ, குளிர்பானங்களைக் குடிக்கக் கூப்பிடுறாங்க நம்ம ஃபேவரைட் ஹீரோ, ஹீரோயின்ஸ்.

இந்த நேரத்தில், உங்க வீட்டு டைனிங் டேபிளில் என்ன இருக்கு? என்ன இருக்க வேண்டும்? என்ன இருக்கக் கூடாது? அதைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? என்ற கேள்விகளோடு, சென்னை, வேளச்சேரியில் உள்ள ஏ.கணேசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்தோம்.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

பெரிய தர்பூசணியைத் தூக்கிவந்தார் தென்றல். “இந்த விஷயத்தில் எங்க குடும்பம் பழைமைவாதிகள். அதாவது, கோடைக்கேற்ற பழங்களை மட்டுமே சாப்பிடும் ‘பழம்’வாதிகள். கூல்டிரிங்ஸ் குடிக்க மாட்டோம். கோடைப் பழங்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது தர்பூசணி. சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி, ஒரு கிண்ணத்தில் போட்டு, கொஞ்சமா பெப்பர் தூவிச் சாப்பிட்டால், ஆஹா... ஓஹோ” என்று கண்களை மூடி சொக்கினார்.

“ஐயா... தர்மப் பிரபு... எங்களுக்கும் ஒரு துண்டு கொடுங்க” என்று நண்பர்கள் சூழ்ந்துகொள்ள, கதம் கதம்!

‘‘ஹலோ இருங்கப்பா நாம பண்டமாற்றம் செய்துக்கலாம்” என்றபடி, குண்டு எறிதல் சாம்பியன் போல கைகளில் இரண்டு கிர்ணிப் பழங்களோடு வந்தார் நிஷா.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

‘‘எங்க வீட்டுல அடிக்கடி கிர்ணிப் பழம் வாங்கிட்டு வருவாங்க. அதை இரண்டாக வெட்டி, விதைகளை நீக்கி, ஸ்பூனால் சதையை எடுத்து, சர்க்கரையைக் கலப்பேன். அப்பா, அம்மா, தம்பிக்குக் கொடுத்துட்டு, மிச்சத்தைக் குடிப்பேன்” என்றார் குறும்பாக.

‘‘எனக்கு எப்பவும் பிடிச்சது திராட்சை. இதில்,  வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து என நிறைய இருக்கு. எவ்வளவு உயரத்தில் வேணும்னாலும் திராட்சையை வைங்க. ‘சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்’னு பின்வாங்க மாட்டேன். எப்படியாவது தாவி, மேலே ஏறி எடுத்துடுவேன்” என்றார், திராட்சைப் பிரியை மனிஷா.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

‘‘ஃபைவ் பிளஸ் சிக்ஸ் இஸ் மை எனர்ஜி” என்றபடி, ஆரஞ்சுப் பழங்களைத் தூக்கிப் போட்டு பிடித்தவாறு வந்தார் பிரசன்னகுமார்.

‘‘ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம். கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்தும் கலந்திருக்கு. கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைக்கிறவங்க தினமும் இதைச் சாப்பிடலாம். புற்றுநோயை எதிர்த்துப் போராடும் லெமோனாய்டு இந்தப் பழத்தில் அதிகம் இருக்கு. ஆனா ஒண்ணு, ஜூஸ் குடிக்கும்போது, அதிகம் சர்க்கரை போட்டுக்கக் கூடாது. பற்கள் சீக்கிரமே சொத்தை ஆகிடுமாம்” என்றார்.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

‘‘எந்தப் பழமா இருந்தாலும் இது பொருந்தும் பிரசன்னா. இயற்கையாக உருவாகும் பழத்தில், உடம்புக்குத் தேவையான சத்துகள் சமமாக இருக்கும். அதில், நாம் ஏதாவது சேர்க்கும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்குது. ஜூஸாகக் குடிப்பதைவிட, பழமாகவே சாப்பிடுறதுதான் நல்லது” என்றார் சுஹைல்.

‘‘சரியா சொன்னே. சோடா வகைகள், பழங்களில் செய்யப்பட்ட ஜூஸ் என ஏராளமான குளிர்பானங்கள் கிடைக்குது. ஆனால், பாட்டிலிலும் டின்னிலும் இவற்றை அடைக்கும்போது, கெட்டுப்போகாமல் இருக்க, பென்ஸாயிக் என்ற அமிலத்தைப் பயன்படுத்துறாங்க. இது ஆஸ்துமா, பருக்களை உண்டாக்குது. மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும் கூல்டிரிங்ஸ் எல்லாமே ரசாயனங்கள்தான். எலுமிச்சை பானம், கறுப்பு நிறமாக மாறாமல் இருக்க, சல்ஃபர் டை ஆக்ஸைடு சேர்க்கிறாங்க. இது, ஒரு நச்சு முறிவு மருந்து. நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தும்” என்றாள் சிவசக்தி.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

‘‘இன்னொரு விஷயமும் சொல்லணும். சம்மர் ஆரம்பிச்சதுமே, பலரும் ஃப்ரிட்ஜ் ஃபுல்லா தண்ணீர் பாட்டிலை நிரப்பிடுறாங்க. வெயிலுக்கு இதமா இருக்குனு அதைத்தான் குடிக்கிறாங்க. சாப்பிடுறப்பவும், ‘ஐஸ் வாட்டர் எங்கே?’னு பரபரக்கிறாங்க. இது ரொம்ப ஆபத்துனு டாக்டர்கள் சொல்றாங்க. உணவோடு, குளிர்ந்த நீரை குடிப்பதால், சாப்பிடும் உணவில் இருக்கும் எண்ணெய்த் துகள்களைக் கெட்டியாக்கிடுமாம். இதனால், ஜீரணக் கோளாறு, கொழுப்பு அதிகம் சேர்வதுனு பிரச்னை உண்டாகும். இப்படியே தொடர்ந்து செய்யும்போது, உயர் ரத்த அழுத்தம், சருமப் பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, ஒற்றைத் தலைவலி, பற்சிதைவு, மாரடைப்பு போன்றவை உண்டாகவும் வாய்ப்பு இருக்காம்” என்றார் மானஷா.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

‘‘இயற்கை, பழங்கள் வடிவில் நல்லதைக் கொடுத்திருக்கும்போது, ஈஸியா கிடைக்கிறதாலும் ஸ்டைலுக்காவும் கூல்டிரிங்ஸ் குடிச்சு, உடம்பைக் கெடுக்கக் கூடாது. மத்தவங்க கேலியாப் பார்த்தா லும் பரவாயில்லை. இந்த விஷயத்தில் நாம் பழங்களைச் சாப்பிடும் பழைமைவாதிகளாகவே இருப்போம்” என்றார்கள் தெளிவான, உறுதியான குரலில்.

• தர்பூசணியின் பூர்விகம், ஆப்பிரிக்கா. இப்போது, உலக அளவில் தர்பூசணியை அதிகம் பயிரிடும் நாடு, சீனா.

• தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது. 100 கிராம் தர்பூசணியில், 569 மில்லிகிராம் ‘வைட்டமின் ஏ’ சத்து கிடைக்கிறது. நுரையீரல் மற்றும் தொண்டைப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில், ‘வைட்டமின் ஏ’-யின் பங்கு அதிகம்.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

• தர்பூசணியில் இருக்கும் சர்க்கரை, எந்தத் தீங்கும் செய்யாது. நீரிழவு நோய் உள்ளவர்களும் தாராளமாகச் சாப்பிடலாம். இதில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்தத்தில் இருக்கும் யூரியாவை வெளியேற்றும். கிட்னியில் கல் சேருவதைத் தடுக்கும்.

• தர்பூசணியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமி, சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. பீட்டா கரோட்டின், லுட்டின் போன்ற நோய் எதிர்ப்பு பொருட்கள்... தொண்டை, இரைப்பை, மார்பு, நுரையீரல், குடல் போன்ற பாகங்களைத் தாக்கும் புற்றுநோய்களில் இருந்து உடலைக் காக்கும்.

• கிர்ணிப்பழத்துக்கு, `முலாம்பழம்’ என்றும் பெயர். இதில் உள்ள புரதச் சத்து, தலைமுடிக்கு உறுதியைக் கொடுக்கும். சருமம் சீக்கிரம் வறண்டுபோவதைத் தடுத்துப் பாதுகாக்கும்.

• திராட்சை உண்பதால்... உடல் வறட்சி நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், நரம்புகள் வலுப்பெறும்.

வெயிலோடு விளையாடு கனியோடு உணவாடு!

• அழகு விஷயத்திலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உதவுவது, கிர்ணிப் பழம். முகப்பொலிவு, கண் கருவளையம் நீக்கல், தேவையற்ற முடிகளை நீக்கல் எனப் பல அழகுச் சாதனங்களில் கலக்குவது கிர்ணிப்பழம்தான்.

• பயணத்தில் ஏற்படும் உஷ்ணம், உடல் அசதியை திராட்சைப் பழம் நீக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி நீங்கும்.

• திராட்சை, உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்புகளை நீக்கும். தோல் வியாதியை கட்டுப்படுத்தும்.

கே.யுவராஜன்

ச.சந்திரமௌலி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு