Election bannerElection banner
Published:Updated:

எங்கள் பள்ளியில் நடந்தது!

எங்கள் பள்ளியில் நடந்தது!

லகப் புவி தினம், உலக வன தினம், உலக நீர் தினம் என இந்த மூன்று தினங்களைக் கொண்டாடுவதன் நோக்கம், நம்மை வாழவைக்கும் இயற்கைக்கு நன்றி செலுத்துவதுதான். இதை மையமாகவைத்து, கண்காட்சியை நடத்தி இருக்கிறார்கள், தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.

எங்கள் பள்ளியில் நடந்தது!

‘பூமியைப் பாதுகாப்போம்’ என்னும் தலைப்பில், பூமியைச் சுற்றி வேப்பிலைகளை வைத்திருந்த பவித்ரா, ‘‘வேப்பிலை சிறந்த மருத்துவ குணம்கொண்டது. வீட்டுக்கு அருகில் ஒரு வேப்பமரம் இருந்தால், எந்த நோயும் அண்டாதுனு சொல்வாங்க. தொழிற்சாலை மாசு, வாகனங்களின் மாசு, கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றால் வரும் நோய்களால், பூமி தவிக்கின்றது. அதில் இருந்து நம்ம பூமி மீளணும் என்கிற அர்த்தத்தில்தான் வேப்பிலைகளை வெச்சிருக்கேன்” என்று சொன்னது க்யூட்.

மழைநீர் சேகரிப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது என ஒவ்வொரு விஷயத்திலும் இயற்கை மீதான தங்கள் அக்கறையை அழகாகப் பதிவுசெய்திருந்தார்கள்.

- பா.சிதம்பர பிரியா

படங்கள்: ரா.ராம்குமார்

‘‘வாழைப்பழத்தைச் சுத்தியல் ஆக்கி அடிக்க  முடியுமா? பூக்களை அப்பளமாகப் பொரிக்க முடியுமா? கிரிக்கெட் பந்தை கண்ணாடியாக மாற்ற முடியுமா?’’ என்று கேட்டார், திருச்சி அண்ணா கோளரங்கத் திட்ட இயக்குநர் லெனின் தமிழ்க்கோவன்.
இதைக் கேட்டு திகைத்தார்கள், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.

‘அறிவியல் சோதனைகளை விளையாட்டாக அறிவோம்’ என்ற தலைப்பில், அந்தப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்தான் இந்தக் கேள்வி.

எங்கள் பள்ளியில் நடந்தது!

‘‘நீர்த்த நைட்ரஜன் இருந்தால், இது சாத்தியமே. நீர்த்த நைட்ரஜனின் தட்பவெப்பநிலை, மைனஸ் 196 டிகிரி சென்டிகிரேடு. அனைத்துப் பொருட்களிலும் இருக்கும் நீருடன், நீர்த்த நைட்ரஜன் வினைபுரிந்து, நீராவியாக மாறும். இதனால், அந்தப் பொருட்களில் நீர் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்கு திடப்பொருளாக மாறிவிடும்’’ என்ற லெனின் தமிழ்க்கோவன், அதைச் செய்தும் காட்டினார்.

வாழைப்பழத்தைக் கல் போல மாற்றி, ஒரு மரக்கட்டையில் ஆணியைவைத்து அடித்துக்  காட்டினார். பூக்களை அப்பளமாகப் பொரித்தார். கிரிக்கெட் பந்தை கண்ணாடியாக்கி, சல்லி சல்லியாக நொறுக்கினார்.

இதுபோல பல்வேறு அறிவியல் சோதனைகளை நடத்திக்காட்டி பிரமிக்கவைத்த லெனின் தமிழ்க்கோவன், “இது எதுவுமே மந்திரம் இல்லை. அறிவியலின் அடிப்படையைப் புரிந்துகொண்டால், அற்புதமான சாதனைகளைப் படைக்கலாம்” என்றார்.

- ம.மாரிமுத்து

படங்கள்: சே.சின்னத்துரை

சென்னை, மீனம்பாக்கம் சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி வளாகம் முழுக்க உற்சாகமாக வலம்வந்தார்கள் மாணவ, மாணவிகள். ‘அறிவியல் கண்காட்சி’ மற்றும் ‘கைவினைப் பொருட்கள் கண்காட்சி’ என்ற அறிவிப்பு உள்ளே சுண்டி இழுத்தது. ‘பூமி நம் கையில்’, ‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’, ‘துரித உணவின் தீமைகள்’ எனப் பல்வேறு பெயர்களில் தங்கள் அறிவியல் செய்முறைகளைப் பார்வையாளர்களுக்கு விளக்கினார்கள் மாணவ, மாணவிகள். ‘கலையும்  கைவண்ணமும்’ என்ற பெயரில் ஐஸ்குச்சிகள், தெர்மக்கோல், பஞ்சு, வண்ணக் காகிதங்களில் செய்திருந்த பொருட்கள், அழகு.

எங்கள் பள்ளியில் நடந்தது!

‘‘இந்த உலகில் வீணானது என்று எதுவும் இல்லை. படைப்புத் திறமையும் பொறுமையும் இருந்தால், சாதாரணக் கல்லையும் வைரத்துக்கு இணையாக மாற்றலாம் என்பதைச் சொல்லத்தான் இந்தக் கண்காட்சியை நடத்தி்னோம்’’ என்றனர் மகிழ்ச்சியோடு.

- அ.பார்த்திபன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு