Published:Updated:

கனவு ஆசிரியர்!

மனம் கவர்ந்த மாணிக்கம்!

கனவு ஆசிரியர்!

மனம் கவர்ந்த மாணிக்கம்!

Published:Updated:
கனவு ஆசிரியர்!

“வில்லுப்பாட்டுக்கு எல்லோரும் ரெடியா...  கண்ணகியா நடிக்கிற காயத்ரி எங்கே... டீச்சர், பாண்டியன் நெடுஞ்செழியனா நடிக்கிற வெங்கடேஸ்வரனுக்கு தலைப்பாகை கட்டாம இருக்கு. பார்த்து ரெடி பண்ணுங்க” என்றவாறு பம்பரமாகச் சுற்றிவருகிறார் தலைமையாசிரியை ஆர்.எம்.மாணிக்கம்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள, சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் இந்தப் பரபரப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இன்னைக்கு உங்க ஸ்கூலில் ஏதாவது விழா நடக்குதா?” என ஒரு மாணவியிடம் கேட்டோம்.

‘‘மாணிக்கம் அம்மா எங்க ஸ்கூல் தலைமையாசிரியையாக வந்ததில் இருந்து எங்களுக்கு தினமும் விசேஷம்தான்” என உற்சாகமாக சிரிக்கிறார் அந்த மாணவி.

அங்கே வந்த தலைமையாசிரியை மாணிக்கம், ‘‘நான் இந்த ஸ்கூலுக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. இந்தப் பள்ளியில் 60 குழந்தைகள் படிக்கிறாங்க. ஒரு நடுநிலைப் பள்ளிக்கு இந்த எண்ணிக்கை ரொம்பக் குறைவுதான். அரசுப் பள்ளிகள் மேலே பெற்றோர்களுக்கு நம்பிக்கை இல்லை. கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் படிக்கவைக்க நினைக்கிறாங்க. தனியார் பள்ளியைவிட திறமையான ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் இருக்காங்க. மக்களுக்கு எங்க  மேலே நம்பிக்கை வரணும்னா, இங்கே இருக்கிற குழந்தைகளைப் படிப்புல மட்டும் இல்லாம, பல விஷயங்களிலும் திறமையானவர்களாக மாற்றிக் காட்டணும்னு நினைச்சேன். அதுக்காக, ஆசிரியர்களின் உதவியோடு சின்னச்சின்ன விஷயங்களை செய்றேன்” என்கிறார் தன்னடக்கத்துடன்.

கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகம், ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்வது என ஒவ்வொரு வாரமும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் திறமையை வளர்த்து வருகிறார். அன்றைய தினமும், ‘கண்ணகி’ நாடகம் மற்றும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழா தொடங்கியதும், முதலாம் வகுப்பு படிக்கும் ஒரு சுட்டி மாணவி, அழகான ஆங்கிலத்தில் தன் பள்ளியை அறிமுகம் செய்துவைத்தார். அடுத்து, கண்ணகி நாடகம் அரங்கேறியது. அந்தக் கதாபாத்திரங்களை தங்கள் நடிப்பால், கண் முன்னால் கொண்டுவந்து கைதட்டலை அள்ளினார்கள்.

கனவு ஆசிரியர்!

பிறகு ஆரம்பித்தது, பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கருத்தை மையப்படுத்தும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. “தந்தனத்தோம் என்று சொல்லியே... ஆமாம்... பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான... செய்திகளைச் சொல்லப்போறோம்” என நிகழ்ச்சியை துவக்கினர் எட்டாம் வகுப்பு மாணவிகள்.

சமூக வளைத்தளங்களில் வெளியாகும் ஆபாச விஷயங்கள், நம்மைச் சுற்றி உள்ள மோசமான மனிதர்கள், தவறான முறையில் தொட்டால் எதிர்க்கவேண்டிய விதம், உடனடியாகப் பெற்றோரிடம் தெரிவிக்கவேண்டிய அவசியம் ஆகியவற்றைப் பற்றி பாடல் வடிவில் சொன்னார்கள்.

‘‘இப்படி நாடகம், பாடல்கள் மூலம் சமூக விஷயங்களைச் சொல்லும்போது, குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். அவர்களின் தனித்திறமைகளை வளர்க்கவும் முடிகிறது. இதைப் பற்றி கேள்விப்பட்டு, தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்ப்பதற்கு பலரும் முன்வருகிறார்கள். இதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் மாணிக்கம்.

இவரின் பல்வேறு முயற்சியால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், தலைமையாசிரியை செய்த ஒரு விஷயம்தான் ஹைலைட்.

கனவு ஆசிரியர்!

ஐந்தாம் வகுப்பு படிக்கும் பாலாஜி, ‘‘போன வருஷம் கடைசியில், எங்க எல்லோரையும் ஹெச்.எம் அம்மா போட்டோ எடுத்தாங்க. எதுக்குனு புரியாம இருந்தோம். ஜனவரி மாசம் பிறந்ததும், எல்லோரையும் கூப்பிட்டு டெய்லி காலண்டர் கொடுத்தாங்க. அதைப் பார்த்ததும் எங்களுக்கு சந்தோஷம் தாங்கலை.  அந்தக் காலண்டரில் எங்களோட போட்டோ பிரின்ட் ஆகி இருந்துச்சு. வீட்டில் காட்டினதும் அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க” என்கிறார் முகம் மலர.

இதற்காக, 40 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து இருக்கும் மாணிக்கம், ‘‘இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தவே ஒவ்வொருவரின் புகைப்படம் பதித்த காலண்டரையும் பள்ளி ஆண்டு மலரையும் வெளியிட்டேன். இதன் மூலம் இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகம் ஆகணும். எல்லோரும் நல்லா படிச்சு, சிறந்த மாணவர்களாக வரணும். எனக்கு அது போதும்” என்கிறார் நெகிழ்ச்சியான குரலில்.

ம.மாரிமுத்து

எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism