‘‘கொளுத்தும் வெயிலுக்கு இதமா, ஜில்லுனு சில ரெசிப்பிகள் செய்யலாமா? லீவுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு செய்து கொடுத்து அசத்தலாம்” என்கிறார், குட்டி சமையல் ராணி ரித்திகா.
பர்ப்பிள் ஜூஸ்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தேவையானவை: பீட்ரூட் - 1, உப்பு, மிளகுத் தூள், சாட் மசாலா - தேவையான அளவு.
செய்முறை:
• பீட்ரூட்டைக் கழுவி, தோல் சீவி, துருவி வெச்சுக்குங்க.
• பீட்ரூட் துருவலுடன், ஃப்ரிட்ஜில் வெச்சு எடுத்த குளிர்ந்த தண்ணீரை ஊற்றி, மிக்ஸியில் போட்டு நல்லா அரைச்சு, வடிகட்டுங்க.
• வடிகட்டிய ஜூஸில், உங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி உப்பு, மிளகுத் தூள், சாட் மசாலா தூள் போட்டு நல்லா கலந்துடுங்க.
• அழகிய பர்ப்பிள் கலரில், ஜிலீர்னு பீட்ரூட் ஜூஸைப் பார்க்கிறப்பவே குடிக்கத் தோணும்.
• தாகம் தீர்க்கும்; வைட்டமின் சத்துக்களை அள்ளித் தரும் ஜூஸ் இது.
குறிப்பு: இதே மாதிரி வெள்ளரிக்காய், நெல்லிக்காயிலும் ஜூஸ் செய்யலாம்.
மாடல்: எஸ்.ரோஷினி
ஃப்ரூட் சாலட் வித் கஸ்டர்டு!

தேவையானவை: ஆப்பிள், மாதுளம்பழம் - தலா ஒன்று, பச்சை திராட்சை, கறுப்புத் திராட்சை, கஸ்டர்டு பவுடர் - தலா 3 டீஸ்பூன், பால் - 2 டம்ளர், சர்க்கரை - 5 டீஸ்பூன்.
செய்முறை:
• வாய் அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வெச்சு சூடுபண்ணுங்க.
• இன்னொரு கிண்ணத்தில், கஸ்டர்டு பவுடரைப் போட்டு, கொஞ்சம் பால் சேர்த்து, கரைச்சுக்குங்க. சர்க்கரை கரைஞ்சு, பால் கொதித்ததும், கரைச்சுவெச்ச கஸ்டர்டு பவுடர் கரைசலை ஊற்றி, நல்லா கிளறுங்க.
• தோசை மாவு பதத்தில் வந்ததும் இறக்கி, ஃப்ரீஸரில் வெச்சுடுங்க.
• ஆப்பிளைத் தோல் சீவி, சின்னச்சின்னத் துண்டுகளாக நறுக்குங்க. மாதுளை முத்துக்களை உதிர்த்து எடுத்துக்குங்க. ஆப்பிள் துண்டுகள், மாதுளை முத்துக்களோடு பச்சைத் திராட்சை, கறுப்புத் திராட்சையையும் சேர்த்து, ஃப்ரிட்ஜில் வெச்சுடுங்க.
• தேவையானபோது, பழக் கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்து, கொஞ்சம் கஸ்டர்டைக் கலந்து, சில்லுனு பரிமாறுங்க. அசத்தலா இருக்கும்.
ஃபிர்னி!
தேவையானவை: பால் - 3 டம்ளர், சர்க்கரை - 7 டீஸ்பூன், பச்சரிசி மாவு - 3 டீஸ்பூன், பால் பவுடர் - 10 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை, பாதாம் - அலங்கரிக்க.

செய்முறை:
பச்சரிசி மாவு, பால் பவுடர்... ரெண்டையும் தனித்தனியா ரெண்டு கிண்ணங்களில் எடுத்து, கொஞ்சமா தண்ணிவிட்டு, தோசை மாவு பதத்தில் கரைச்சுக்குங்க.
வாய் அகலமான ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் போட்டு அடுப்பில் வெச்சு, லேசா கொதி வந்ததும், கரைச்சு வெச்சிருக்கிற பச்சரிசி மாவை முதலில் ஊத்தணும்.
ரெண்டு நிமிஷம் கழிச்சு, கரைச்சு வெச்சிருக்கிற பால் பவுடரை ஊத்தணும்.

அடிப்பிடிக்காமல் நல்லா கிளறி, கெட்டியானதும் இறக்கிடணும். இதைச் செய்றதுக்கு அஞ்சு நிமிஷம்கூட ஆகாது.
ஆறினதும், ஃப்ரிட்ஜில் வெச்சு, பாதாம்பருப்புடன் குளுகுளுவெனப் பரிமாறுங்க.
கேரட் கீர்!
தேவையானவை:
கேரட் - 2, சர்க்கரை - 10 டீஸ்பூன், முந்திரி - 10,
ஏலக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன், காய்ச்சிய பால் - 4 டம்ளர்.

செய்முறை:
கேரட்டைக் கழுவி, தோலை லேசாகச் சீவி நீக்கிவிட்டு, சின்னச்சின்னத் துண்டுகளாக நறுக்கி, குக்கரில் போடுங்க.
அதோடு, முந்திரிப்பருப்பு மற்றும் ஒரு டம்ளர் பால் சேர்த்து, குக்கரை மூடி, அடுப்பில் வெச்சுடுங்க. ஐந்து முறை விசில் சத்தம் வர்ற வரைக்கும் வேகவிடுங்க.
நல்லா வெந்ததும் எடுத்து, ஆறவிடுங்க.
வேகவைத்த கேரட், முந்திரியோடு சர்க்கரையைச் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைச்சு எடுத்துக்குங்க. (கவனம்: கத்தியால் நறுக்குவதும், மிக்ஸியில் அரைப்பதும் பெரியவங்கதான் செய்யணும்).

அரைச்சு எடுத்த கேரட் விழுதோடு, மீதம் இருக்கும் பாலைச் சேருங்க. ஏலக்காய்த் தூளையும் கலந்து, ஃப்ரிட்ஜில் வெச்சுடுங்க.
கண்ணுக்கும் வயிற்றுக்கும் குளிர்ச்சியான ஆரஞ்சு நிற கேரட் கீர் ரெடி. வீட்டுக்கு விளையாட வரும் நண்பர்களுக்குக் கொடுத்து, விருந்தோம்பலைக் கொண்டாடுங்க.
மாடல்: ஏ.நொவீனா பூந்தென்றல்
மித்ரா
எம்.உசேன், பா.அருண்