Published:Updated:

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

Published:Updated:

‘‘கிரிக்கெட், கபடி என எல்லாம்  விளையாடி சலிச்சுப்போச்சு. கார்ட்டூன் சேனல் பார்த்துப் பார்த்து அலுத்துப்போச்சு. இந்த லீவில் இன்னும் என்ன செய்யலாம் என யோசிச்சு, இப்படி இறங்கிட்டோம். ஏலேலோ ஐலசா... வலையை விரி ஐலசா.... மீன்களைப் பிடி ஐலசா” என்று உற்சாகக் குரல் கொடுத்தார்கள் அந்தக் குட்டீஸ்.

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டையில் இருக்கும் பண்ணைக்குட்டையில்தான் இந்த கலாட்டா.

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீன் பிடிக்கும் வலையோடு தயாரான  அந்தப் பண்ணைக்குட்டையின் சொந்தக்காரரான பெரியசாமி, ‘‘மீன்களை வளர்க்கிறதுக்காக உருவாக்கிய குட்டை இது. ஆழம் கிடையாது. பயப்படாம இறங்கி வாங்க” என்று தயங்கி நின்ற மற்ற சுட்டிகளோடு நீரில் இறங்கி, வலையை விரித்து வீசினார்.

தண்ணீரில் இறங்கிய சுட்டிகள், “ஹா... ஹா... மீன்கள் காலைக் கடிக்குது’’ என்று குஷியோடு துள்ளிக் குதித்தார்கள்.

‘‘அண்ணே... எத்தனை வருஷமா மீன் வளர்க்கிறீங்க?’’ எனக் கேட்டான் தர்ஷன்.

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

‘‘இந்த நிலம் ரொம்பத் தாழ்வான பகுதியில்  இருக்கிறதால, அதிகமா தண்ணீர் ஊறிக்கிட்டே இருக்கும். நெல் பயிரிட்டா, அறுவடை செய்ற நேரத்துல, மயில்கள் வந்து சேதாரம் பண்ணிட்டுப் போயிடும். அதனால, எந்தப் பயிரையும், பயிரிடாம சும்மா வெச்சிருந்தேன். இந்த மாதிரி நிலத்துல, அரசாங்கம் இலவசமா பண்ணைக்குட்டை அமைச்சுக் கொடுக்கிறதைத்  தெரிஞ்சிக்கிட்டு, விண்ணப்பம் போட்டேன். அரசாங்கமே குட்டையை வெட்டிக்கொடுத்துச்சு. மேட்டூர் அணையில இருந்து, 1,000 மீன் குஞ்சுகளை, ஒரு மீன் குஞ்சு 25 பைசா வீதம்  வாங்கிவந்து குட்டையில விட்டேன். ஒரு வருஷமா இந்தப் பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்து விற்பனை செய்துட்டு இருக்கேன்” என்றார் பெரியசாமி.

‘‘என்னென்ன வகை மீன்கள் இந்தக் குட்டையில்  இருக்கு?”  எனக் கேட்டான் கோகுல்.

“ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புள்ளுக் கெண்டை என நான்கு வகை மீன்கள் இருக்கு. ரோகு மீன், ரொம்ப நீளமாகவும் வெள்ளையாகவும் இருக்கும். மிர்கால் மீன், நீளத்தோடு குண்டாகவும், வாய் பெருசாவும் இருக்கும். புள்ளுக் கெண்டை, கோல்டு கலரில் இருக்கும். சாதாக் கெண்டை, குண்டாகவும் நீளம் குறைவாகவும் இருக்கும். இந்தக் குஞ்சுகளை விட்ட எட்டாவது மாசத்துல இருந்து மீன்களைப் பிடிச்சு விற்பனை செய்துட்டு வர்றேன்’’ என்றார் பெரியசாமி.

‘‘மீன்களுக்கு தீவனம் எப்படிக் கொடுப்பீங்க?” எனக்  கேட்டாள் தாரணி.

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

‘‘மீன் குஞ்சுகளை விட்ட முதல் மூணு மாசம்,  கடலைப் புண்ணாக்குத் தீவனம் போட்டேன். காரணம், கடலைப் புண்ணாக்கை மீன்கள் விரும்பிச் சாப்பிடும். 100 கிராம் கடலைப் புண்ணாக்கில் 50 கிராம் தவுடு கலந்து, தண்ணீர் ஊற்றிப் பிசைஞ்சு, புட்டுப்போல முந்தின நாள் இரவே செய்துக்கணும். காலையில் தீவனமாகப் போடணும். கூடவே, ஒரு கூடை மாட்டுச் சாணத்தைத் தண்ணீரில் தூவி விடணும். மாட்டின் சாணத்தையும் மீன்கள் விரும்பிச் சாப்பிடும். மூணு மாசத்துக்குப் பிறகு, மக்காச்சோளம் புட்டு செஞ்சு போடணும்” என்றார்.

காய்கறி மார்க்கெட்டில், வீணாகத் தூக்கி வீசப்படும் முட்டைக்கோஸ் இலைகள், காலிஃபிளவர் தண்டு, கீரைகள் ஆகியவையும் உணவாகக் கொடுத்திருக்கிறார் பெரியசாமி.

‘‘அடேங்கப்பா... நாமதான் மீன் டிஷ்ஷை வெரைட்டியா சாப்பிடுறோம்னு நினைச்சா,  மீனுக்கான டிஷ் விஷயமும் வெரைட்டியா இருக்கே’’ என்று ஆச்சர்யப்பட்டான் கோகுல்.

‘‘இப்படி மீன் வளர்ப்பதில் பிரச்னை ஏதாவது இருக்கா அங்கிள்?”  எனக் கேட்டாள் ஹரிணி.

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

“பிரச்னை இல்லாமல் எந்தத் தொழிலும் கிடையாதே. முதல் மூணு மாசம் ரொம்பக் கவனமா இருக்கணும். மீன்கொத்தி, நீர்க் காகம், கொக்கு எல்லாம் வரும். கவனிச்சு விரட்டிவிடணும். மீன்கள் கொஞ்சம் பெருசா வளர்ந்த பிறகு, அதுங்களைப் பாதுகாத்துக்கும். மீன்களுக்கு பாம்புகளும் எதிரிங்கதான்.  குட்டையைச் சுற்றி, வலையால் வேலி அமைச்சு, பாம்புகளைத் தண்ணீரில் இறங்காமப் பார்த்துக்கணும்’’ என்றார் பெரியசாமி.

‘‘இந்த வெயிலால் பிரச்னை இருக்கா?’’ எனக் கேட்டான் தர்ஷன்.

“போன வருஷம், கடுமையான வெயில்ல மீன்கள் இறந்துடுச்சு. காவிரி ஆற்றில் இருந்து ஆகாயத் தாமரைகளைக் கொண்டுவந்து குட்டையில் விட்டேன். அது அதிகம் வளர்ந்து, மீன்களுக்கு நிழலாகவும்  உணவாகவும் பயன்பட்டுச்சு. இப்போ,  மறுபடியும் ஆகாயத் தாமரைகளை கொண்டுவந்துவிடணும்” என்றார்.

ஏலேலோ ஐலசா... மீனைப் பிடி ஐலசா!

‘‘இந்த மீன் வளர்ப்பில் எவ்வளவு வருமானம் வரும்?” எனக் கேட்டான் தரணீஷ்.

‘‘தீவனம், பராமரிப்புச் செலவு எல்லாம் போக, போன வருஷம் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சது. இந்த மாவட்டத்திலேயே பண்ணைக்குட்டை மூலமா மீன்கள் வளர்த்து, பெரிய லாபம் அடைஞ்ச முதல் விவசாயி நான்தான். இதுக்காக, கலெக்டர் நேரில் வந்து பார்த்து பாராட்டினார்’’ என்றார் பெரியசாமி.

வலையில் சிக்கிய மீன்களை, லாகவமாகக் கையில் பிடித்த சுட்டிகள், ஆளுக்கு ஒன்றாக தூக்கிவைத்துக் கொஞ்சினார்கள்.

அப்போது, மீன்களை வாங்குவதற்காக வந்திருந்தவர்கள், ‘‘இவங்க கொஞ்சுற அழகைப் பார்த்தா, மீனை வாங்கிச் சாப்பிட மனசே வரலை. பேசாம எல்லாரும் சைவத்துக்கு மாறிடலாமா?” என்று சிரித்தார்கள்.

கு.ஆனந்தராஜ்

அ.நவின்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism