Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

Published:Updated:

கே.கணேசன்

காப்பி அடிக்கலாம் வாங்க !

ஹாய் சுட்டீஸ்... சென்ற இதழில் உலகையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சாப்ளின் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம். இந்த முறை அடிமைப்பட்ட கறுப்பர் இனத்தில் பிறந்து, தனித் திறமையால் தனது இனத்துக்கும் தனது நாட்டுக்கும் நீங்காப் புகழைப் பெற்றுத் தந்த ஓட்டப் பந்தய வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வாழ்க்கையில் இருந்து காப்பி அடிக்கலாம் வாங்க..!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், செப்டம்பர் 12, 1913-ல்  விவசாய குடும்பத்தில், ஏழாவது குழந்தையாகப் பிறந்தார் ஜேம்ஸ் க்ளேவ்லேண்ட் ஓவன்ஸ். வறுமையால் குடும்பம் ஓகியோ மாகாணத்துக்குக் குடியேறியது. அங்கு பள்ளியில் ஓவன்ஸ் சேர்க்கப்பட்டார். முதல் நாள் ஆசிரியர்  பெயரைக் கேட்க, ஓவன்ஸ் ஜெ.ஸி., என சுருக்கமாகச் சொன்னார். ஆசிரியர் அதை தவறாகப் புரிந்துகொண்டு, ஜெஸ்ஸி என அழைத்தார். அதிலிருந்து ஓவன்ஸ் பெயர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் ஆனது. புதிய இடத்துக்கு வந்தும் குடும்பத்தின் வறுமை குறையவில்லை. ஜெஸ்ஸி பள்ளி முடிந்ததும்

##~##

வீட்டருகே உள்ளவர்களுக்கு சிறு சிறு வேலைகளையும், சுமை தூக்கும் வேலைகளையும் செய்தார். வேலையை வேகமாக முடிக்க, பல்வேறு இடங்களுக்கு ஓடிச்சென்று முடிப்பார். அப்படி ஓடுவதை விரும்பினார். ''நான் ஓடும்போது காற்றுடன் போட்டி போடுவதாக நினைத்துக் கொள்வேன்'' என்பார்.

இப்படி சிறுவயதில் ஓடியபடியே வேலைகளை முடித்து, அதற்கான பணத்தைப் பெற்று, வீட்டில் கொடுத்துவிடுவார். ஒரு நாள்... பள்ளியின் விளையாட்டு ஆசிரியர், மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தேர்ந்தெடுத்தார். அதில் கலந்துகொண்ட ஜெஸ்ஸியின் ஓட்டத் திறனையும்,  தாண்டும் திறனையும் கவனித்து,  சிறந்த வீரனைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ''நீ யாரிடம் பயிற்சி பெறுகிறாய்?'' எனக் கேட்க, ஜெஸ்ஸி விஷயத்தைச் சொல்லி ஆசிரியரை வியக்கவைத்தார்.

''முறையான பயிற்சி பெற்றால், நீ உலகின் மிகச் சிறந்த ஓட்டப் பந்தய வீரனாக வருவாய்'' என்றார் ஆசிரியர். காலையில் பயிற்சியையும், மாலையில் வேலைகளையும் செய்து வந்தார் ஜெஸ்ஸி.  

அதன் விளைவாக, மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகளில்... பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்றார். ஜெஸ்ஸி போட்டிகளுக்காக பல நகரங்களுக்கும் செல்லவேண்டி இருந்தது. அப்போது, உலகம் முழுவதும் நிற வேற்றுமை இருந்து வந்தது. கறுப்பின மக்களுக்கு பொது உணவகங்களில் நுழைய அனுமதி கிடையாது. வெள்ளையர் தங்கும் விடுதிகளில் தங்க  முடியாது. அப்படி சில விடுதிகளில் தங்க அனுமதித்தாலும்கூட, கறுப்பர்கள் பின்வாயில் வழியைத்தான் பயன்படுத்த வேண்டும்.

இதுபோன்ற நிறவெறிச் சிக்கல்களை ஜெஸ்ஸி பல முறை அனுபவித்தார். தனது ஓட்டத் திறமையால் இதை மாற்ற முடியும் என உறுதியுடன் நம்பினார். அப்போது, சிகாகோவில் நடந்த மாநில அளவிலான போட்டி ஒன்றில் பங்கேற்றார். இதில்... பல்வேறு தடகளப் போட்டிகளில், சுமார் 45 நிமிடங்களுக்குள் மூன்று உலக சாதனைகளை முறியடித்தார். ஒரு உலக சாதனையை சமன் செய்தார்.  ஜெஸ்ஸியின்  இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

இந்த வெற்றிகளுக்குப் பின், எந்த விடுதிகளில் பின் வாயிலைப் பயன்படுத்தச் சொன்னார்களோ... அதே விடுதிகளில் ஜெஸ்ஸிக்கு முன் வாயில் வழியாக சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  

காப்பி அடிக்கலாம் வாங்க !

அடுத்து, 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜெஸ்ஸி கலந்துகொண்டார். அப்போது, ஹிட்லர் ஜெர்மன் அதிபராகப் பதவி ஏற்று இருந்தார். 'ஜெர்மானியர்களே உலகை ஆளப் பிறந்தவர்கள்... மனிதர் களில் உயர்ந்தவர்கள்’ என்பதில் தீவிரமாக இருந்தார் ஹிட்லர்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஜெர்மானியர் பெறும் வெற்றிகளே தாம் சொன்னதை நிரூபிக்கும் என நினைத்தார். ஓட்டப் பந்தயப் போட்டிகள் ஆரம்பித்தன. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பல விளையாட்டு வீரர்கள் ஓடுவதற்குத் தயாராக இருந்தனர். அவர்களில் ஜெஸ்ஸி மட்டுமே கறுப்பினத்தவர். நடுவரிடம் இருந்து ஓடுவதற் கான ஆணை கிடைத்ததும், புயலென வெற்றிக் கோட்டினைத் தொட்டார். அடுத்து நடந்த 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் வென்று, அதுவரை இருந்த உலக சாதனையை முறியடித்தார். அதேபோல், நீளம் தாண்டும் போட்டியிலும் ஜெஸ்ஸி வென்றார்.  

வெள்ளையர்களே வெற்றி பெறுவார்கள் என்று சொன்ன ஹிட்லரே, தன் கையால் ஜெஸ்ஸி ஓவன்ஸுக்கு வெற்றிப் பதக்கங்களை அணிவிக்க நேர்ந்தது. இப்போட்டிகளின்போது... ஜெஸ்ஸிக்கு ஜெர்மனியரான லஸ் லாங்ஸ் நண்பரானார். இவர்களது நட்பு, ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தும் தொடர்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது... அமெரிக்காவும் ஜெர்மனியும் எதிர் எதிராகப் போரிட்ட போதும் இவர்கள் தங்களது நட்பைத் தொடர்ந்தார்கள். போரில் லஸ் லாங்ஸ் இறந்து விட்டார். லாங்ஸ்ஸின் வேண்டுகோளின்படி அவருடைய மகனுடன் தனது நட்பைத் தொடர்ந்தார் ஜெஸ்ஸி. விளையாட்டின் மூலம் நட்புணர்வை வளர்க்கலாம் என்பதற்கு ஜெஸ்ஸி ஓர் உதாரணமாகத் திகழ்ந்தார்.

வறுமையைப் போக்க, சிறு வயதில் இயல்பாகச் செய்த ஒரு சிறிய பழக்கத்தையே தன் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான விஷயமாக மாற்றிக்கொண்டு, உலகை தன் பக்கம் திருப்ப முடியும் என நிரூபித்த ஜெஸ்ஸி ஓவன்ஸின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!