Published:Updated:

கனவு ஆசிரியர்!

உலகப் பாடம் நடத்தும் உற்சாக ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

உலகப் பாடம் நடத்தும் உற்சாக ஆசிரியர்!

Published:Updated:

“பள்ளி என்ற கட்டடமும் வகுப்பு என்ற அறையும் கல்வி கற்பதற்கான ஓர் அடையாளம்தான். பாடப் புத்தகங்களில் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்தையும் என் மாணவர்கள் நேரில் பார்க்க வேண்டும்.அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனது பள்ளி மாணவர்கள், வகுப்பறையில் இருந்த நேரத்தைவிட வெளியே இருந்த நேரமே அதிகம்” என்கிறார் சொக்கலிங்கம்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நினைவு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், சொக்கலிங்கம். இவர், இங்கே பணிக்குச் சேர்ந்த இரண்டே ஆண்டுகளில், பள்ளியில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறார்.

கனவு ஆசிரியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘இதுக்கு முன்னாடி, ஸ்கூல்னா, காலையில் கிளம்பிவருவோம். தமிழ், இங்கிலீஷ், கணக்குனு டீச்சர்ஸ் சொல்லிக் கொடுக்கிறதைப் படிப்போம். சாயந்திரம் வீட்டுக்குப் போய்டுவோம். புது ஹெட்மாஸ்டர் வந்ததில் இருந்து எல்லாமே மாறிப்போச்சு. ஜூன் மாசம் பேச்சுப் போட்டி, ஜூலை மாசம் ஓவியப் போட்டி, தனி நடிப்பு, மிமிக்ரி போட்டினு ஒவ்வொரு மாசமும் ஒரு போட்டியை நடத்தினார்” என உற்சாகமாகச் சொல்கிறார் காளியப்பன் என்கிற மாணவன்.

கனவு ஆசிரியர்!

“தேவகோட்டையைத் தாண்டாத எங்களை, காரைக்குடி, சிவகங்கை எனப் பல ஊர்களுக்கு கூட்டிட்டுப்போயிருக்கார். அதுவும் எப்படி? தனியா ஒரு பஸ்ஸையே ஏற்பாடு செய்துடுவார். ஒரு பெரிய கல்லூரிக்குக் கூட்டிட்டுப்போவார். அங்கே இருக்கிற பெரிய லேப்பில், நாங்களும் டெஸ்ட் செய்துபார்ப்போம். இன்னொரு நாள், சிவகங்கையில் இருக்கிற பெரிய நூலகத்துக்குக் கூட்டிட்டுப்போவார். அன்னிக்கு முழுக்க அங்கே இருப்போம். நிறைய ஸ்டோரி புக்ஸ் படிப்போம். புக் ஃபேர் நடக்கும்போது, அங்கே கூட்டிட்டுப்போய் எல்லோருக்கும் புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பார்” என அடுக்குகிறார் சோலையம்மாள்.  

இடைமறித்த முத்தழகி, ‘‘உங்களுக்குத் தெரியுமா அங்கிள்?  எங்க ஸ்கூலுக்கு பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க. ஒரு தடவை, இறையன்பு ஐ.ஏ.எஸ், வரப்போறதா சொன்னார் ஹெட் மாஸ்டர். வீட்ல சொன்னப்ப நம்பல. ‘அவர் சென்னையில் இருக்கார். இங்கே வந்து 100 பேர் இருக்கிற சின்ன ஸ்கூலில் பேசுவாரா?’னு கேட்டாங்க. ஆனா, இங்கே வந்த இறையன்பு சார், எங்களிடம் ஒரு மணி நேரம் பேசினார். நாங்க கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னார். அதே மாதிரி, திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர், லெனின் தமிழ் கோவன் வந்திருந்தார். அறிவியல் செய்முறைகளை எளிமையா செய்துகாட்டினார். ஒரு நாள் வானொலி பண்பலை நிலையத்தில் இருந்து வந்திருந்தாங்க. எங்களைப் பேசச் சொல்லி, பாடச் சொல்லி ரெக்கார்டு பண்ணிட்டுப் போனாங்க. அது ஒலிபரப்பானப்ப ஊரே கேட்டுச்சு. இதையெல்லாம் மறக்கவே முடியாது” என்கிறார் மகிழ்ச்சி பொங்க.

கனவு ஆசிரியர்!

அதுமட்டுமா? சுட்டி விகடன் பார்த்துட்டு, அதில் இடம்பெற்ற, நடனம் மூலம் திருக்குறள் சொல்லித்தரும் திருக்குறள் தாத்தா சுந்தரமகாலிங்கம், பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர் தாமஸ் ஆண்டனி... இவங்களையெல்லாம் பள்ளிக்கு வரவைத்து நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் சொக்கலிங்கம்.

நரிக்குறவர் மற்றும் குறிசொல்லும் (ஜோதிடம்) சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களை அதிக அளவில் பள்ளியில் சேர்த்த பெருமையும் சொக்கலிங்கத்துக்கு உண்டு.

‘‘இவங்களோட பெற்றோர், நாடு ஆறு மாசம், காடு ஆறு மாசம்னு நாடோடியா சுத்துறவங்க. குறிசொல்றதுக்கும் கூலி வேலைக்கும் வெளியூருக்குப் போயிட்டாங்    கன்னா மூணு மாசம், நாலு மாசம் அங்கேயே தங்கிடுவாங்க. வீட்ல இருக்கிற வயசான தாத்தா, பாட்டிகள்தான் இவங்களுக்குத் துணை. அவங்களும் பசங்களைப் படிக்க அனுப்பணும்னு கண்டிப்பாக இருக்க மாட்டாங்க. அதனால், பாதி பசங்க பள்ளிக்கு வராம விளையாடிக்கிட்டு இருப்பாங்க. வீதி நாடகம் போட்டு, படிப்போட அவசியத்தை பெரியவங்களுக்குப் புரியவெச்சு, பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவெச்சோம். வந்த பசங்களைப் பிடிச்சுவைக்கணுமே... படிப்புனா ஆர்வமான விஷயம்தான்னு புரியவைக்கணுமே... அதற்கான முயற்சிதான் இதெல்லாம்” எனச் சிரிக்கிறார் சொக்கலிங்கம்.

“எங்க ஊர்ல போஸ்ட் ஆபீஸ் எங்கே இருக்குனே தெரியாமல் இருந்தேன். திடீர்னு ஒரு நாள் எங்க எல்லோரையும் அங்கே கூட்டிப்போனார் ஹெட் மாஸ்டர். ஒருநாள் பேங்குக்குக் கூட்டிட்டுப்போனார்.  எப்படி படிவம் வாங்கணும், பணம் போடுறது எப்பிடி, எடுக்கிறது எப்பிடினு எல்லாம் சொல்லித்தந்தார். அன்னிக்கு நிறையப் பேர் சேமிப்புக் கணக்கு ஆரம்பிச்சோம். நான் இப்போ, வீட்ல செலவுக்குக் கொடுக்கிற பணத்தை, போட்டியில் ஜெயிச்சு வர்ற பணத்தை எல்லாம் பேங்ல போடுறேன். எங்கிட்டே ஏ.டி.எம் கார்டுகூட இருக்கு’’ எனத் துடிப்புடன் பேசினார் வாசுகி.

கனவு ஆசிரியர்!

“ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு போட்டி நடத்துவார். இதுல ஜெயிக்கிறவங்களுக்குப்  பரிசுகள் தருவார். இந்தப் பரிசுகளைக் கொடுப்பதற்காக ஹெட் மாஸ்டர் நிறைய செலவு செய்வார். முதல் வாரத்துல ஜெயிச்சவங்க, அடுத்த வாரத்துல பங்கேற்கக் கூடாது. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கணும்னு சொல்வார். இவர், ஹெட் மாஸ்டரா வந்ததில் இருந்து, நாங்க ரொம்ப ரொம்ப ஜாலியா படிக்கிறோம்’’ என்கிறார் ஒரு மாணவர்.

‘‘என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் சக ஆசிரியர்களின் பங்களிப்பு இருக்கிறது. சுட்டி விகடனின் எஃப்.ஏ பக்கங்களில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். பள்ளியின்  செயலர் சோமசுந்தரம் ஐயாவும், கல்வி முகவர் மீனாட்சி ஆச்சியும் தரும் ஊக்கமும் இன்னும் சிறப்பாகப் பங்காற்ற முடியும் என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கு. ஒரு தீம் பார்க்குக்குச் செல்வது போல, உற்சாகமாகப் பள்ளிக்கு வரும்போதுதான் மாணவர்களுக்குப் படிப்பின் மீது ஆர்வம் உண்டாகும். படிக்கும் விஷயங்களும் மனதில் பதியும். அதற்கான என் முயற்சிகள் தொடரும்” எனப் புன்னகைக்கிறார் சொக்கலிங்கம்.

ம.மாரிமுத்து

எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism