Published:Updated:

குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!

குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!

ன்பு நண்பர்களே... சமீபத்தில், மகிழ்ச்சியான ஒரு செய்தியைக் கேள்விப்பட்டீர்களா?

ஆம்... ‘தமிழக பள்ளிக் கல்வித் துறை, வரும் கல்வி ஆண்டிலிருந்து நீதி போதனை வகுப்புகளை மீண்டும் அறிமுகம் செய்கிறது!’ இது, வகுப்பறைப் பாடங்களால் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த உங்களுக்கு, புதிய ஜன்னல்களைத் திறந்திருக்கிறது.

நம் அப்பா, அம்மா படிக்கும்போது பள்ளிகளில் இருந்த அற்புதமான வகுப்பு, நீதி போதனை. காலப்போக்கில் நிறுத்தப்பட்ட அந்த வகுப்பை, மீண்டும் பள்ளிகளில் கொண்டுவருகிறார்கள்.

குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!

மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வியல்ல. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிறர் துயரத்தில் கை கொடுத்து உதவுதல், கண் எதிரில் ஓர் அநியாயம் நடக்கும்போது தட்டிக்கேட்பது, நேர்மைக்குத் துணை நிற்பது. என எல்லாமே முதல் மதிப்பெண் பெறுவதைவிட உயர்ந்தவை. அதற்கு, இந்த நீதி போதனை வகுப்பு துணை நிற்கும்.

இன்றைய சூழலில், பல விஷயங்கள் சரியாக இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். பார்வைக்குக் கிடைக்கும் செய்தித்தாள் முதல் சினிமா வரை, தொலைக்காட்சி முதல் கைபேசியின் விளையாட்டுகள் வரை எல்லாமே வன்முறைமயமாக மாறிக் கொண்டிருக்கின்றன. சமூகம் மாதிரியே பள்ளிகளிலும் அவலங்கள் அதிகமாகிவிட்டன. வகுப்பறை அவலங்கள், சமூகக் குற்றங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. ‘பாதகம் செய்வோரைக் கண்டால், நாம் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா’ என்றும், ‘மோதி மிதித்துவிடு பாப்பா’ என்றும் சொன்ன பாரதியாக நாம் மாற வேண்டும்.

அதற்கு, கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் பாடங்கள் போதாது. கம்ப்யூட்டர் சயின்ஸ், ரோபோட்டிக்ஸ், ஸ்மார்ட் கிளாஸ் எனப் பளபளப்புடன் சொல்லப்படும் பாடங்கள், பணம் சம்பாதிக்க உதவுமே தவிர, நல்ல குணங்களை அளிக்காது.

குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!

சின்னத் தோல்விக்கும் தன்னையே அழித்துக்கொள்ளும் பிஞ்சுகள் அதிகமாகி இருப்பது தடுக்கப்பட வேண்டும். சுயமரியாதை, தன்னம்பிக்கையைப் புரியவைக்க ஒரு பாடம் தேவை. ஒரு மாணவரின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, பாடகராக, கவிஞராக, ஓவியராக மாற்றுவதற்கு ஒரு பாடம் தேவை. இன்றைய குழந்தைகளே, நாளைய தலைவர்கள். தலைமைப் பண்பு, காலம் தவறாமை, மனித உறவுகளின் மேன்மை, சக மனிதர்களை மதித்தல் இவை எல்லாம் இருந்தால்தான், தலைவர்களாக ஜொலிக்க முடியும். அதற்கு ஒரு பாடம் மிகமிக அவசியம்.

எல்லாவற்றையும்விட மிக மோசமான பிரச்னை என்ன தெரியுமா? வகுப்பறையில் உங்களின் மௌனம்.

‘இதுதான் பாடம்’ என ஆசிரியரே பேசும் வகுப்பறைகள், புதிய சிந்தனையை உருவாக்காது. நிறையக் கேள்விகளைக் கேட்க, மாணவர்களை அனுமதிக்க வேண்டும். ‘இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ எனக் கேட்பதை, ஆசிரியர் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் (Listening) வகுப்பறைகளை உருவாக்க வேண்டும்.

நீங்கள் பேச விரும்புகிறீர்கள்... பேச அனுமதிப்போம்.

குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!

ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய், மனம் திறந்து எழுதிட விரும்புகிறீர்கள்... எழுத அனுமதிப்போம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி, பார்த்த சினிமா, வாசித்த செய்தி, நேரில் கண்ட காட்சி பற்றியெல்லாம் விமர்சனம் செய்ய விரும்புகிறீர்கள்... விமர்சிக்க அனுமதிப்போம்.

பாடப் புத்தகத்துக்கும் வெளியே பறக்கத் துடிக்கிறீர்கள்... பறக்க அனுமதிப்போம்.

இன்றைய தேவை, ஆளுமைப்பண்பை வளர்த்துக்கொண்டு, மனதின் மேன்மையைப் பதப்படுத்தும் படைப்பாக்கச் சுயதேடல் எனும் சுதந்திரம்.

வகுப்பறை என்பது எல்லோரும் சேர்ந்து கலந்துரையாடும் உங்களுக்கான பொது மேடை. அதற்கான வாசலாக இந்த நீதி போதனை வகுப்பு இருக்கட்டும்.

வகுப்பறைக்கு வெளியே... முடிவற்ற வானத்தின் கீழே, உலகை முழுமையாக அறிய, கூண்டின் கதவுகள் திறக்கப்படுகின்றன.

குட்டிச் சிறுத்தைகளே... வெளியே வாருங்கள்!

ஆயிஷா இரா.நடராசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு