Published:Updated:

டார்கெட் 2020

-சைக்கிள் வீரனின் ஒலிம்பிக் கனவு!

“இந்த வாரம் டெல்லிக்குக் கிளம்பறேன் அங்கிள். இதோடு, ஐந்து வருடங்கள் கழித்துதான் தமிழ் மண்ணையும் நண்பர்களையும் பார்ப்பேன். மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. மிகப் பெரிய இலக்கை நோக்கிப் பறக்கும்போது, இந்த மாதிரி பிரிவுகளைச் சந்திச்சுதானே ஆகணும்” எனப்  புன்னகைக்கிறார் அஸ்வின். சைக்கிள் ரேஸில், தமிழக சப்-ஜூனியர் பிரிவில், நம்பர் ஒன் வீரர்.

டார்கெட் 2020

கோவை, ஆசிரமம் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறார் அஸ்வின்.  சைக்கிள் ரேஸில், மாவட்ட அளவில் 12 தங்கம், மாநில அளவில் 12 தங்கம் என முன்னேறி, தேசிய அளவில் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றவர். இந்தியாவின் ஒலிம்பிக் கனவுக்காக, மத்திய அரசால் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நம்பிக்கை நாயகன்.

‘‘என்னுடைய தாத்தா ஜெயராமன், அப்பா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேசிய அளவிலான சைக்கிள் பந்தய வீரர்கள். நான் மூன்றாவது படிக்கும்போதே, சைக்கிள் பந்தயங்களில்  கலந்துக்க ஆரம்பித்தேன். 2012-ம் ஆண்டு, தேசிய அளவில் சிறந்த குழந்தை சாதனையாளர் விருதை, ஜனாதிபதியிடம் வாங்கி இருக்கிறேன்.தினமும் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலையில்தான் பயிற்சிக்குப் போவேன். நம்ம தமிழ்நாட்டில், சைக்கிள் ரேஸுக்கு என்று தனியாக ஒரு மைதானமே கிடையாது. பொதுச் சாலையில்தான் பிராக்டிஸ் எடுக்க வேண்டிய நிலை. ஆனாலும்,  தொடர்ந்து 50 கிலோமீட்டர் வரை இறங்காமல் சைக்கிள் ஓட்டுவேன்” எனப் பிரமிக்கவைக்கிறார் அஸ்வின்.

சைக்கிள் ரேஸ் விளையாட்டில், டிராக் சைக்கிளிங் (Track cycling), ரோடு சைக்கிளிங் (Road cycling), மவுன்ட்டெய்ன் பைக் (Mountain bike) என மூன்று வகைகள் உள்ளன.

டார்கெட் 2020

‘‘இதில், ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் இருக்கு. நான் டிராக் மற்றும் மவுன்ட்டெய்ன் வகையில் விளையாடிட்டு இருக்கேன்.  மவுன்ட்டெய்ன் வகையில், சைக்கிளின் எடை அளவு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். டிராக் வகையில் பயன்படுத்தும் சைக்கிள், 6.4 கிலோவுக்கு குறையாமல் இருக்கணும். இந்த டிராக் வகையில்... 200 மீட்டர் தனிநபர், 500 மீட்டர் தனிநபர் பந்தயங்களில் மாநில அளவில் தங்கங்களைத் தட்டியிருக்கேன். இதில், நம்ம கால்களை பெடலில் லாக் செய்துடுவாங்க. இந்த வகை சைக்கிளில் பிரேக் கிடையாது. பந்தயத்தின்போது பிரேக்  போட்டு நிறுத்த முடியாது. அப்படிச் செய்தால், கீழே விழவேண்டியதுதான். இலக்கை அடையும் வரை நிறுத்தாமல் ஓட்டும் இந்தச் சவால், எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சிரிக்கிறார் அஸ்வின்.

கரடு முரடான மலையில், சைக்கிளை ஓட்டிச் செல்லும் மவுன்ட்டெய்ன் வகைப் பந்தயத்திலும் அசத்துகிறார் அஸ்வின். இதில், தேசிய அளவிலான  6 கிலோமீட்டர் தூரப்போட்டியில், 14.56 நிமிடங்களில் அடைந்திருக்கிறார்.

எல்லாம் சரி, இந்த டெல்லிப் பயணம் எதற்காக?

‘‘சைக்கிள் ரேஸில் இது வரை இந்தியர் யாருமே ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டது  இல்லை. அதனால், இந்திய விளையாட்டு ஆணையகத்தின் சார்பாக, மத்திய அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. சைக்கிள் ரேஸில் சிறந்த முறையில் விளையாடிவரும் வீரர்களுக்கு, வருகிற 2020 ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் நோக்கத்தோடு பயிற்சி அளிக்கிறது. மே மாதம் தொடங்கிய இந்தப் பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கு நடைபெறும். எல்லா செலவுகளும் அரசே ஏற்கிறது. பயிற்சிக் காலம் முடியும் வரை, டெல்லியில்தான் இருக்க வேண்டும்” என்கிறார் அஸ்வின்.

டார்கெட் 2020

இந்தத் திட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் இரண்டு பேர் மட்டுமே பயிற்சிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். அதில், சப்-ஜூனியர் பிரிவில் தேர்வான ஒரே நபர் அஸ்வின்.

‘‘என் மீது நம்பிக்கைவைத்து அரசு கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன். ஐந்து ஆண்டுகளுக்கு எல்லோரையும் பிரிஞ்சு இருக்கணும். பயிற்சிக் காலம் முடியும் வரை, ஜாலி அரட்டை, உணவுக் கட்டுப்பாடு உள்பட பல கட்டுபாடுகள் இருக்கும்.  இந்திய நாட்டுக்காக, 2020 ஒலிம்பிக்கில் பதக்கத்தோடு திரும்பும்போது, அது எல்லாம் மறந்துடும்” என்கிற அஸ்வினின் குரலில் பதக்கம் வெல்லும் நம்பிக்கை இறக்கை கட்டுகிறது.

கு.ஆனந்தராஜ்

த.ஸ்ரீநிவாசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு