Published:Updated:

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

Published:Updated:

15 ஆண்டுகள்... 150 பதக்கங்கள்...ஓர் ஆசிரியர்!

ரு பள்ளி... ஓர் ஆசிரியர்... 150-க்கும் மேற்பட்ட சாம்பியன்கள் எனப் பிரமிக்கவைக்கும் சாதனை, சத்தமின்றி நடந்திருக்கிறது.

பொள்ளாச்சி அருகே இருக்கும் காளியண்ணன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன். தனது அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் பணியால், கடந்த 15 வருடங்களில் 150-க்கும் மேற்பட்ட சாம்பியன்களை உருவாக்கியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவு ஆசிரியர்!

‘‘சிறு வயதிலேயே சிலம்பம், கத்திச் சண்டை, யோகா, மல்யுத்தம் போன்ற கலைகளைக்  கற்றுக்கொண்டேன். இவற்றை, முறையாக மற்றவர்களுக்கும் கற்றுத்தர வேண்டும் என்பதற்காக, உடற்கல்வி ஆசிரியராக 2000-ம் ஆண்டில், இந்தப் பள்ளிக்கு வந்தேன். இங்கே படிக்கும் மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவும், விளையாட்டுப் பயிற்சிக்கான வசதிகளும் முறையாகக் கிடைப்பது இல்லை. ஆனாலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன். ஆறாம் வகுப்பு முதலே விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பிடித்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன்” என்கிற கார்த்திகேயன், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து ஜூடோ பயிற்சியாளர்களில் ஒருவர்.

ஜூடோ, கராத்தே, டேக்வாண்டோ, வாள் சண்டை, மல்யுத்தம், கைப்பந்து, கோ-கோ, கபடி எனப் பள்ளி மைதானம், தேசியப் போட்டிகள் நடக்கும் விளையாட்டு மைதானம் போல காட்சி அளிக்கிறது.

கனவு ஆசிரியர்!

வாள் சண்டை மற்றும் ஜூடோ விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க அதிக செலவு பிடிக்கும் என்பதால், தனது சொந்தச் செலவிலேயே மாணவர்களுக்கு வாங்கிக் கொடுக்கிறார் கார்த்திகேயன். பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் யோகா கற்றுத்தருகிறார்.

‘‘இது, கிராமப் பகுதி என்பதால், பெண் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பவே மாட்டார்கள். ஆண்டுக்கணக்கில், பலமுறை பெற்றோர்களிடம் பேசி, சம்மதிக்கவைத்தேன். இப்போது, போட்டிப் பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடும் மாணவிகளைக் காண முடிகிறது. தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடக்கும் கத்திச் சண்டைப் போட்டியில் இங்கே பயிற்சி பெற்ற ஹேமா என்ற மாணவி, தங்கம் மற்றும் வெள்ளி வென்றிருக்கிறார். வருடந்தோறும் 40 முதல் 60 பதக்கங்கள் எங்கள் பள்ளிக்குக் கிடைத்துவிடும்’’ என்கிறார் கார்த்திகேயன் பெருமிதமாக.

இவரின் சிறப்பான பயிற்சியைப் பார்த்து,  கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்தும் அழைப்பு வருகிறது. ‘‘விடுமுறை நாட்களில், பகுதி நேரப் பயிற்சி கொடுக்கச் செல்கிறேன். ஆனாலும், பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதைத்தான் பெருமையாக நினைக்கிறேன்” என்று நெகிழ்கிறார் காத்திகேயன்.

இங்கே படிக்கும் சௌமியா மற்றும் கீர்த்தனா, வாள் சண்டைப் புலிகள். பெண்கள் பிரிவில், மாநில அளவில்  இடம் பிடித்து இருக்கிறார்கள்.

கனவு ஆசிரியர்!

“கத்திச் சண்டை என்றதும் ஆரம்பத்தில் ரொம்பப் பயந்தோம். ‘மற்ற விளையாட்டு களைவிட இது பாதுகாப்பான விளையாட்டு தான். தைரியமா கத்தியை கையில் எடுங்க’னு சார் ஊக்கப்படுத்தினார். கடந்த ஆண்டு, மாநில அளவில் நடந்த போட்டியில் வெண்கலம் வென்றோம். அடுத்த இலக்கு தங்கம்” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சௌமியா.

ஜூடோ நாயகி பவித்ரா, மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். கத்திச் சண்டையிலும் கலக்குகிறார். மல்யுத்தப் போட்டியில், தேசிய அளவில் மூன்று தங்கங்களை வென்ற விக்னேஷ்வரன், ஜூடோவிலும் கில்லி.

கனவு ஆசிரியர்!

“இங்கு இருக்கும் எல்லா மாணவர்களுமே, ஒரு விளையாட்டில் மட்டும் சாதிப்பவர்கள் அல்ல. ஒவ்வொருவருக்கும் இரண்டு விளையாட்டுகளாவது தெரிந்திருக்கும். விளையாட்டில் பதக்கம் வாங்கவைப்பது மட்டுமே என்னுடைய நோக்கம் கிடையாது. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் காரணமாக, முன்பு எப்போதும் இல்லாத வகையில், இந்தச் சமூகத்தால் பல்வேறு சவால்களை மாணவப் பருவம் சந்தித்து வருகிறது. இது, பெற்றோர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை அளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். தற்காப்பு, ஆரோக்கியம், ஒழுக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து இருந்தால்தான் ஒரு நல்ல மாணவராக ஒருவர் உயர முடியும். அதற்கான என்னுடைய சிறிய பங்களிப்புதான் இது” என அமைதியாகச் சொல்கிறார் கனவு ஆசிரியர் கார்த்திகேயன்.      

ஞா.சுதாகர்

த.ஸ்ரீநிவாசன்   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism