Published:Updated:

வெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்!

- கோவை கால்பந்து சாம்பியன்ஸ்

வெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்!

‘‘கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற சூழலில் இருந்து, அடுத்த தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக மாறிட்டு இருக்கு என்பதற்கு அடையாளம்தான் இந்த வெற்றி” என்கிற சரவணனின் குரலில் பூரிப்பு.

கோயம்புத்தூர், ‘ஃபர்ஸ்ட் கிக் ஃபுட்பால் கிளப்’ பயிற்சியாளர் சரவணன். இங்கே பயிற்சி பெற்ற 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள், மலேசியாவில் ‘செலாங்குர் இந்தியன் ஸ்போர்ட்ஸ் கிளப்’ நடத்திய கால்பந்துப் போட்டிகளில், சாம்பியன் பட்டம் வென்று திரும்பியுள்ளனர்.

‘‘மாவட்ட அளவில், நடக்கும் ஃபுட்பால் போட்டிகளில் 10, 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நாங்கதான்  சாம்பியன். மாவட்டத்தை மட்டுமே கலக்கிக்கிட்டு இருந்த எங்க பட்டாளம், முதல் முறையாக, கடல் தாண்டிப்போய், இந்தியாவின் திறமையை நிரூபிச்சது பெருமையா இருக்கு” என உற்சாகமாகிறார், அணியின் கேப்டன் அஸ்வின்.

சாம்பியன் பட்டத்தை வென்றதோடு, சிறந்த கோல் கீப்பர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த ஸ்டிரைக்கர் உள்ளிட்ட விருதுகளையும் அள்ளி வந்திருக்கிறது, கோவைப் பட்டாளம்.

‘மலேசியாவுல நடக்கும் டோர்னமென்ட்டுக்கு அழைப்பு வந்திருக்கு. உங்க திறமையை நிரூபிக்க சரியான வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க’னு சரவணன் சார் சொன்ன நிமிடத்தில் இருந்தே, போட்டிக்குத் தயாராகிட்டோம். போட்டியில் கலந்துக்கும் மலேசியா, கொரியா டீம் ரொம்ப டஃப்பா இருப்பாங்கனு தெரியும். முதல் பயிற்சி ஆட்டத்தில், தோத்துட்டோம். ஆனால், அந்தப் போட்டியில் இருந்து நிறையக் கத்துக்கிட்டோம். டெக்னிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கிற நம்மால் நிச்சயம் ஜெயிக்க முடியும்னு, முழு நம்பிக்கையோடு தொடர்ந்து விளையாடினோம். அப்புறம் நடந்த எல்லாப் போட்டிகளிலும் ஜெயிச்சு, சாம்பியன் பட்டத்தைத் தட்டினோம்” என்கிறார் அஸ்வின்.

வெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்!

இந்தப் போட்டிகளில் அதிக கோல் அடித்து, ‘பெஸ்ட் ஸ்டிரைக்கர்’ விருதைப் பெற்றவர், நிஷித். “நான், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். நான்கு வருஷங்களாக இந்தக் கிளப்பில் விளையாடிட்டு வர்றேன். இதுதான் என்னுடைய முதல் வெளிநாட்டுப் போட்டி. இதில், ‘பெஸ்ட் ஸ்டிரைக்கர்’ விருது வாங்கியது தன்னம்பிக்கையை அதிகரிச்சு இருக்கு. ‘இந்தியன் சூப்பர் லீக்’ போட்டிகளில் விளையாடணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அது சீக்கிரம் நிறைவேறும்” என்கிறார் நம்பிக்கையோடு.

வெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்!

‘பெஸ்ட் பிளேயர்’ விருதைப் பெற்றவர், 10-ம் வகுப்பு மாணவன் சஞ்சு சேவியர். ‘‘உண்மையான சவால் என்றால், என்ன அர்த்தம்னு இந்தப் போட்டிகள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். மற்ற நாட்டு டீம் பிளேயர்ஸ், உடல் அளவில் பயங்கர ஸ்ட்ராங். இவங்களை ஜெயிக்கணும்னா, நாம மனதளவில் 10 மடங்கு ஸ்ட்ராங்கா போராடணும் என்கிற நினைப்போடுதான் விளையாடினோம்” என்று சிரிக்கிறார். 

மலேசியப் போட்டியில், ‘பெஸ்ட் கோல் கீப்பர்’ விருதைப் பெற்றவர், லோகேஷ் கண்ணா. 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பல்வேறு தேசியப் போட்டிகளில் கலக்கிவருகிறார்.

வெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்!

‘‘இந்தப் போட்டிகளில் ‘பெனாலிட்டி சேவ்’ மூலமாகத்தான் வெற்றி பெற்றோம். நான், இரண்டு  பெனாலிட்டி ஷூட்களை சேவ் செய்து, பெஸ்ட் கோல் கீப்பர் விருதை ஜெயிச்சேன். ஏற்கெனவே, மாநில அளவிலான போட்டிகளிலும் சிறந்த கோல் கீப்பராகத் தேர்வாகி இருக்கேன். தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிட்டு இருக்கேன். 2017-ம் ஆண்டு நடக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில், இந்தியா சார்பில் விளையாடுறதுதான் என்னுடைய இலக்கு. நிச்சயம் விளையாடுவேன்” என்கிறார் நம்பிக்கை ஒளிரும் குரலில்.

வெற்றிக்கு வித்திட்ட 10 மடங்கு மனபலம்!

‘‘அடுத்த வருடம் இலங்கையில் நடக்கும் டோர்னமென்ட்டுக்கு அழைப்பு வந்திருக்கு. அதுக்குத் தயாராக ஆரம்பிச்சுட்டோம்” என்றபடி, மைதானத்தில் புயலாக இறங்கினார்கள்.

ச.ஜெ.ரவி

தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு