Published:Updated:

தேடிவந்த சேவை விருது!

-அசத்திய அரசுப் பள்ளி

‘‘நமக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை, நாம்  கற்றுக்கொண்ட ஒன்றை, நம்மைச் சுற்றி இருக்கும் நான்கு பேருக்குக் கற்றுத்தர வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இதைச் செய்தோம். விருது கிடைக்கும் என்றோ, டெல்லிக்குச் செல்வோம் என்றோ எதிர்பாக்கவில்லை” எனப் பூரிப்போடு சொல்கிறார் அருண்குமார்.

தேடிவந்த சேவை விருது!

காஞ்சிபுரம் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார்கள் அருண்குமார், பாலாஜி, பரத்குமார், அபுதாஹிர் மற்றும் ஆகாஷ். டெல்லியில் உள்ள DHFL Pramerica Life Insurance co. Ltd என்ற தனியார் நிறுவனம் நடத்திய, சிறந்த சமூகத் தொண்டுக்கான தேசியப் போட்டியில் விருது பெற்றிருக்கிறார்கள். அஸ்தினாபுரத்தைச் சுற்றி இருக்கும் கிராமத்து மாணவர்களுக்கு, கணினிப் பயிற்சியை சிறப்பாகச் சொல்லித்தந்ததற்காக இந்த விருது.

‘‘இந்தப் போட்டிக்கு, இந்தியா முழுவதும் இருந்து 5,000 விண்ணப்பங்கள் வந்திருந்தனவாம்.  ‘குளோபல், சி.பி.எஸ்.இ போன்ற பள்ளிகளின்  மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்த விருதை ஜெயிச்சிருக்கோம்’னு சொன்னபோது, ரொம்பப் பெருமையா இருந்தது” என்கிறார் பாலாஜி.

தேடிவந்த சேவை விருது!

இந்தக் குழுவின் தலைவரான அருண்குமார், சில வருடங்களுக்கு முன்பு ‘டாக்கிங் புக்’ என்ற புத்தகம் எழுதியதற்காக, முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாமிடம் பரிசு பெற்றிருக்கிறார்.

“நானும் பரத்தும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆரம்பிச்சோம். பாலாஜியும் அபுதாஹிரும் எங்க டீம்ல சேர்ந்தாங்க. எங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லித்தந்தோம். கடைசியா, எங்களோடு இணைந்தது ஆகாஷ். இப்படித்தான் எங்களின் ஐவர் குழு உருவானது” என்றார் அருண்குமார்.

தொடர்ந்த பரத்குமார், “நாங்க கற்றுக்கொண்ட கணிப்பொறியின் அடிப்படை விஷயங்களை, மற்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டோம். சித்ரா டீச்சர், சத்தியபாமா பல்கலைக்கழத்தில் உதவி கேட்டு, ஏற்பாடுசெய்தாங்க.  ஞாயிற்றுக்கிழமைகளில், அந்தக் கல்லூரியில் இருந்து எங்களை அழைச்சுட்டுப்போக பேருந்து வரும். எங்களுக்கு ஒரு கம்ப்யூட்டர் லேப் கொடுத்துட்டாங்க. நாங்க அஞ்சு பேரும் லீடர். மற்ற  மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தோம்’’ என்றார்.

தேடிவந்த சேவை விருது!

“இங்கே மட்டும் சொல்லிக்கொடுத்தால் போதாது. இங்கே வர முடியாத, மற்ற பசங்களுக்கும் சொல்லித்தரணும்னு நினைச்சோம். காலேஜ் படிக்கிற சில அண்ணா, அக்காகிட்டே இருக்கும் லேப்டாப்களைக் கேட்டு வாங்கினோம். ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில், சுற்றி இருக்கும் கிராமங்களுக்குப் போய், நிறையப் பேருக்கு சொல்லிக்கொடுத்தோம். ஆர்வமாகக் கற்றுக்கொண்டவர்களுக்கு, சர்டிஃபிகேட்ஸ் கொடுத்தோம். இது எல்லாமே எங்களின் தனிப்பட்ட ஆர்வத்தில் செய்ததுதான்” என்கிறார் அபுதாஹிர்.

‘‘அபுவுக்கு ஹிந்தி தெரியும் என்பதால், விருது வாங்க டெல்லிக்குத் தைரியமா கிளம்பினோம். அங்கே இருந்த வரைக்கும்,  இவர்தான் எங்களின் மொழிபெயர்ப்பாளர்” என்றபடி செல்லமாக அவர் தலைமுடியைக் கலைத்துக் கலாட்டா செய்தார் அருண்குமார்.

இந்தக் கூட்டணியின் செல்லமான ஆகாஷ், “இவங்க இப்படித்தான் இங்கே நடந்ததையே சொல்லிட்டு இருப்பாங்க. டெல்லியில் என்ன நடந்தது, எப்படி என்ஜாய் பண்ணினோம்னு நான் சொல்றேன். நேரு மியூசியம், இந்திரா காந்தி மியூசியம், இந்தியா கேட், காந்தி சமாதி என எல்லாத்தையும் சுற்றிப் பார்த்தோம். மெட்ரோ ரயிலில் போனது செம ஜாலியா இருந்துச்சு. கடைசியா நாங்க பார்த்த இடம் என்ன தெரியுமா?” எனச் சில நொடிகள் சஸ்பென்ஸாக நிறுத்தி, தாஜ்மஹால்’’ என்றார் கண்களில் உற்சாகம் மின்ன.

தேடிவந்த சேவை விருது!

இந்த மாணவர்களை ஒருங்கிணைத்த ஆசிரியை சித்ரா, “இவங்க ஐந்து பேருக்கும் கம்ப்யூட்டர் மேலே அவ்வளவு பிரியம். ஒரு லீவு நாள் கிடைச்சாலும்,   கம்ப்யூட்டர் கத்துக்க என்  வீட்டுக்கு வந்துடுவாங்க. ரொம்ப ஆர்வமாகவும் வேகமாகவும் கத்துக் கிட்டாங்க.

‘நாங்க தெரிஞ்சுக்கிட்டதை மத்தவங்களுக்கும் சொல்லிக்கொடுக்க நினைக்கிறோம் டீச்சர்’னு இவங்க சொன்னப்ப, ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். அப்புறம், ஊரில் அக்கம் பக்கம் இருக்கிற பசங்களுக்கும் சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. ஒரு நாள், எங்க டீச்சர்ஸ் வாட்ஸ்-அப் குரூப் மூலம் இந்த விருது பற்றிய அறிவிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். நம்ம பசங்க பண்றதும் ஒரு  தொண்டுதானே அப்படினு விண்ணப்பிச்சோம். எந்தவிதப் பலனையும் கருதாமல் இவங்க செய்த சேவைக்கு டெல்லியிலிருந்து தேடிவந்த விருது இது. அடுத்த மாதம், இவங்களைப் பார்க்க, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து வர்றதா சொல்லி இருக்காங்க” என்றார்.

‘‘எங்க சித்ரா டீச்சர், சத்தியபாமா பல்கலைக்கழகம்,  லேப்டாப் கொடுத்து உதவிய அண்ணா, அக்காக்கள் எல்லோருக்கும் சேர்த்து கிடைச்ச விருது இது” என்ற ஐந்து பேரின் முகங்களிலும் வெற்றிப் பெருமிதம்!

அ.பார்த்திபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு