Published:Updated:

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

பிரீமியம் ஸ்டோரி

வீரதீர சாகசங்கள் புரிந்த இந்தியக் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது,

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

நேஷனல் பிரேவரி அவார்டு எனப்படும் ‘ராஷ்ட்ரிய வீர்த புரஸ்கார் விருது’. அதைப் பெற்ற சுட்டி வீரர்/வீராங்கனைகளைப் பற்றி சொல்லும் பகுதி இது.

பிரியான்சு ஜோஷி

அன்புள்ள பிரியான்சு ஜோஷி...

உங்கள் வீரம், வியக்கவைக்கும் அற்புத சாகசம். உத்தரகாண்ட் மாநில மலையோரக் கிராமத்தின் வீரத் திருவிளக்கே, இந்தியச் சிறார்களின் வீரத்துக்கு சிறந்த உதாரணமாகிவிட்டீர்கள்.

ஊரில் எல்லோரும் பயந்துபோய் இருந்தார்கள். ஊருக்குள் ஒரு கருஞ்சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்துகொண்டிருந்தது. அடிக்கடி இப்படி நடப்பது வழக்கம். காடுகளின் அருகே, மனிதன் தனது குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டதால், வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் போராட்டம் இது.

யானைகள் ஊருக்குள் நுழைந்து, வயல்களை அழிக்கும். அதே போல ஊருக்குள் நுழையும் சிறுத்தைப்புலிகளை கூண்டுவைத்துப் பிடிப்பார்கள். ஆனால் உங்களுக்கு நடந்தது, ரொம்பவே கிலி ஏற்படுத்தும் சம்பவம்.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வருடம் 2009. அப்போது உங்களுக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் அடியெடுத்துவைத்திருந்தீர்கள். அரை மைல் தள்ளி இருந்த பள்ளிக்கூடத்துக்கு, உங்கள் சகோதரியுடன் தினமும் நடந்தே செல்வீர்கள். அது, மலையகப் பகுதியின் ஒரே பள்ளிக்கூடம். கடுங்குளிர் காலத்தில், இரண்டு மாதங்களுக்குப்   பள்ளியை மூடிவிடுவார்கள்.

ஆனால்,அப்போது மழைக்காலம். காடுகளில் சோவெனக் கொட்டித்தீர்த்த பேய் மழைதான், அந்தக் கருஞ்சிறுத்தையை ஊருக்குள் ஓடி வர வைத்திருக்க வேண்டும்.

தங்களுக்கு என ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு, காடுகளில் குடும்பமாக, கூட்டமாக வாழும் விலங்கு, சிறுத்தை. தனது இருப்பிடம்விட்டு தவறி வந்தால், பயத்தில் எல்லோர் மீதும் பாயும் இயல்புகொண்டது.

அப்படித்தான் உங்கள் கிராமத்து வீடுகளுக்குள் புகுந்து, உறங்கியவர்களைக் குதறியது. கடைகளுக்குள் புகுந்து, கிடைத்தவர்களைப் பதம்பார்த்தது. யாருடைய வேட்டைக்கும் அகப்படாமல், அந்தச் சிறுத்தை போக்குக் காட்டியது. மக்கள், தனியாக வெளியே வரப் பயந்தார்கள். எங்கும் கூட்டமாகவே சென்றார்கள்.

பள்ளிக்குச் செல்லும் கடமை, உங்களுக்கும் உங்களைப் போன்ற சிறார்களுக்கும் இருந்ததால், உங்கள் சகோதரியோடு மொத்தம் ஏழெட்டு சிறார்கள் கூட்டமாகச் சென்றீர்கள். ஒரு நாள்கூட சிறுத்தை உங்கள் கண்களில் படவில்லை.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

ஆனால் ஜோஷி, அன்று அந்தப் பாதையில் மூன்று செம்மறி ஆடுகள் கடித்துக் குதறப்பட்டுக் கிடந்ததைப் பார்த்ததும், சில நண்பர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். அப்போது, உங்கள் சகோதரிக்கு மிக அருகே புதரிலிருந்து ‘உர்... உர்...’ என உறுமலுடன் பாய்ந்தது, அந்தப் பிரமாண்டமான கருஞ்சிறுத்தை.

எல்லாம் நிமிடத்தில் நடந்து முடிந்துவிட்டது. எல்லோரும் ஓடியபோது, நீங்கள் மட்டும் சிறுத்தையை எதிர்கொள்ளத் தீர்மானித்தீர்கள் ஜோஷி. உங்களிடம் வித்தியாசமான ஒரு ஆயுதம் இருந்தது. அதுதான் பள்ளிக்கூட பை.

சட்டென பையைச் சுழற்றி, சிறுத்தையின் தலை மீது  ஓங்கி அடித்தீர்கள். மடார் என்றொரு சப்தம். பைக்குள் இரண்டு டப்பாக்கள் இருந்தன. ஒன்று, சாப்பாட்டு டப்பா. மற்றொன்று, ஜியோமெட்ரி பாக்ஸ். சிறுத்தையும் உங்களைத் தாக்க முற்பட்டது. வீரமும் வேகமும் சேர, திரும்பத்திரும்ப நான்கைந்து முறை சிறுத்தையின் தலையில் மடார்... மடார்... எனத் தாக்கினீர்கள். அவ்வளவுதான்!

சுருண்டு விழுந்தது அந்த பயங்கர உருவம். சற்று நேரத்தில், ஊரே கூடியது. உங்கள் சகோதரியின் முதுகில், சிறுத்தையின் பற்கள் பட்டதால் நீண்ட காயம். உங்களுக்கும் சில நகக்காயங்கள். அவற்றுக்கு மருந்திட, உங்களைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள்.

வீரத் திருமகனான உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ‘மோதி மிதித்துவிடு பாப்பா’ என எங்கள் பாரதி பாடியதை, நீங்கள் செயலில் காட்டினீர்கள். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல, புத்தகப் பையை ஆயுதமாக்கிய உங்கள் சாதுர்யம், எல்லோரையும் வியக்கவைத்தது.

2010-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், இந்திய ஜனாதிபதி உங்களுக்கு வீரதீரக் குழந்தைகளுக்கான ‘சஞ்சய் சோப்ரா விருது’ வழங்கினார்.

பிரியான்சு ஜோஷி... உங்கள் வீரத்துக்குத் தலை வணங்குகிறோம்!

இப்படிக்கு,

சுட்டி இந்தியா.

ஆயிஷா இரா.நடராசன்

கண்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு