Published:Updated:

நீரைக் காக்க ஒரு நடைப் பயணம்!

நீரைக் காக்க ஒரு நடைப் பயணம்!

‘நீரின்றி அமையாது உலகு’ என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னார் வள்ளுவர். இன்று, உலகம் முழுவதுமே தண்ணீர்ப் பிரச்னை பயமுறுத்துகிறது. மனிதனின் சுயநலம் மற்றும் அலட்சியத்தால், நீர் வளங்களை வேகமாக இழந்துவருகிறோம். அதைத் தடுக்கும் முயற்சியில் சமூக அக்கறையுடன் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படியான ஒரு நிகழ்வாக, ‘தண்ணீருக்கான பொதுமேடை அமைப்பு’ என்ற அமைப்பு, சென்னைப் போரூர் ஏரியைக் காக்க, விழிப்புஉணர்வு நடைப் பயணம் சென்றது. அந்த நடைப் பயணத்தில், நம் சுட்டி ஸ்டார்ஸ், ஜெ.சந்தோஷ்ராம் மற்றும் வெ.க.தாரிணி பங்கேற்றார்கள். நடைப் பயணம் முடிந்ததும் தம் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

நீரைக் காக்க ஒரு நடைப் பயணம்!

சந்தோஷ்ராம்: ‘‘தாரிணி, கொஞ்ச நேரம் இங்கே உட்கார்ந்துட்டுப் போவோம் வா. நான் இப்பதான் முதன்முதலா இந்த ஏரியைப் பார்க்கிறேன். சென்னையில் இருந்துக்கிட்டே, போரூர் ஏரியை இவ்வளவு நாட்களாகப் பார்க்காமல் போயிட்டோமேனு ரொம்ப வருத்தமா இருக்கு.’’

தாரிணி: ‘‘எவ்வளவு பெரிய ஏரி? அங்கே பாரு, தூண்டில் போட்டு மீன் பிடிச்சுட்டு இருக்காங்க.’’

சந்தோஷ்ராம்: ‘‘இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குனு தெரியலையே. நம்முடைய நீர் வளங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பறிபோயிக்கிட்டு இருக்கு.’’

தாரிணி: ‘‘உண்மைதான். அதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்தத்தான் இந்தத் தண்ணீர் நடைப் பயணமே.’’

சந்தோஷ்ராம்: ‘‘நேற்று இந்த நிகழ்ச்சி பற்றி என் அப்பா சொன்னதும், ‘தண்ணீர் நடைப் பயணம்னா, தண்ணீர் மேல் நடப்பாங்களா?’னு கிண்டலா கேட்டேன். இங்கே வந்ததும், அதிர்ச்சியான பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.’’

தாரிணி: ‘‘ரமேஷ் கருப்பையா என்பவர் பேசியதைக் கவனிச்சியா?’’

நீரைக் காக்க ஒரு நடைப் பயணம்!

சந்தோஷ்ராம்: ‘‘நல்லாக் கவனிச்சேன். முன்னாடி இந்தப் போரூர் ஏரி, 800 ஏக்கருக்கும் மேல இருந்திருக்கு. இப்போ, 300 ஏக்கருக்குள்தான் இருக்காம். ஏரியின் பரப்பு குறைஞ்சதால, சுற்றிலும் நடைபெற்ற விவசாயமும் குறைஞ்சுபோச்சாம். சென்னையில் உள்ள பல ஏரிகளும் காணாமப் போய்டுச்சாம்.’’

தாரிணி: “ஆமாம் சந்தோஷ். நுங்கம்பாக்கம், மாம்பலம் ஏரிகளும் அப்படித்தான் காணாமப் போயிருக்கு. லேக் வியூ ரோடு, லேக் வியூ காலனி எனப் படிக்கிறப்போ, ‘இங்கே ஏரியே இல்லையே. எதுக்கு இப்படி ஒரு பேரு?’னு யோசிப்பேன். அதுக்கான விடை, இந்த நடைப் பயணத்தில்தான் தெரிஞ்சுது.”

சந்தோஷ்ராம்: ‘‘புவனேஷ் என்பவர் சொன்னது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. செம்பரம்பாக்கம் ஏரியும் புழல் ஏரியும் விவசாயப் பயன்பாட்டுல இருந்ததாம். இன்னிக்கு, சென்னையின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுகிறது. அப்படின்னா, அந்த ஏரியை நம்பி விவசாயம் செய்தவங்க  நிலை என்ன ஆச்சுனே தெரியல.”

தாரிணி: “வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படுது. விவசாயத்துக்குப் பயன்படுத்துற அந்த ஏரி நீரை, குடிநீருக்கு எடுக்கிறது கவலையா இருக்கு.”

சந்தோஷ்ராம்: ‘‘ஆனா, நமக்கு குடிக்கத் தண்ணீர் வேணுமே, அதுக்கு என்ன செய்றது?’’

தாரிணி: ‘‘அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகளை ஒழுங்காகப் பராமரிச்சாலே வேற பகுதியிலிருந்து நீரைக் கொண்டுவர வேண்டாம். இந்தப் போரூர் ஏரியின் ஒரு பகுதியை மணல் கொட்டி, வேறு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப் போறாங்களாம். அதைத் தவிர்க்கணும்னுதானே இந்தத் தண்ணீர் நடைப் பயணமே. ‘இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போயிடுச்சுனா, சுற்றுப் பகுதி முழுக்க நீர்மட்டம் கீழே போய்டும்’னு நடராஜன் என்பவர் சொன்னாரே கவனிச்சியா?’’

நீரைக் காக்க ஒரு நடைப் பயணம்!

சந்தோஷ்ராம்: “அதுவும் சரிதான். தண்ணீரை விலைக்கு விற்கத் தொடங்கி,  அதைச் சுத்திகரிக்கக் கருவிகள் அது, இதுனு எல்லாமே வியாபாரம் ஆகிடுச்சு.’’

தாரிணி: “குடும்பத்துடன் வந்திருந்த சுசீலா ஆனந்த், ‘பிரச்னை வரும்போது விழிப்புஉணர்வு பற்றிப் பேசுவதும், பேரணி போவதும் போதாது. எல்லாரும் தங்கள் பிள்ளைகளிடம், நீர் வளத்தையும் நில வளத்தையும் காப்பாற்றும் முறைகளைச் சொல்லணும். இதுபோன்ற  நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துக்கிட்டு, பிள்ளைகளுக்கும் பொறுப்புஉணர்வை உண்டாக்கணும்’னு அருமையா சொன்னாங்க.’’

சந்தோஷ்ராம்: ‘‘ஆமாம். நான் வீட்டுக்குப் போனதும், தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் இந்த அட்டையை வீட்டில் ஒட்டுவேன். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும் நண்பர்களுக்கும் நீர் வளத்தைக் காக்கவேண்டிய அவசியத்தை விளக்குவேன்.’’

வி.எஸ்.சரவணன்

தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு