Published:Updated:

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

கனவு ஆசிரியர்!

Published:Updated:

சவால்களால் சந்தோஷம்!

‘‘நாம் செய்யும் வேலையில் உண்மையாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வேலையை எவ்வளவு சிறப்பாகச் செய்தோம், எந்த அளவுக்கு முன்னேற்றினோம் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காகப் பல சவால்களைச் சந்தித்து, வெற்றிபெறும்போது கிடைக்கும் சந்தோஷத்தை அளவிட முடியாது” என்கிறார், நாமக்கல் மாவட்டம், பரளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி.

கனவு ஆசிரியர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர் முகத்தில் சவால்களைச் சந்தித்து, சாதித்த சந்தோஷம் ஜொலித்தது. ‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பரளி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கடக்கால்புதூர், கங்காணிப்பட்டி, கம்பத்தூர்பட்டி, மேல்பரளி என நான்கு கிராமங்களில் உள்ள மாணவர்களில் பெரும்பாலானோர், 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் சென்றுக்கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவர்களின் பெற்றோர்கள், வசதிக் குறைவானவர்களே. மிகவும் சிரமப்பட்டுதான் பள்ளிக் கட்டணம் கட்டினார்கள். விடுமுறை நாட்களில் நான்கு கிராமங்களில் உள்ள 350-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களுடன் பேசினேன்.  ‘பணக் கஷ்டம் இருந்தாலும், தனியார் பள்ளிகளில் படிக்கவைத்தால் ஆங்கிலம் நன்றாக வரும் என்ற காரணத்துக்காகவே, எங்கள் பிள்ளைகளை அங்கே சேர்க்கிறோம்’ என்றார்கள். நீங்கள் என்னை நம்பி, பிள்ளைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள். அதே அளவுக்கு நான் கற்றுத்தருகிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தேன்” என்கிறார் சாந்தி.

 சொன்னது போல செயலிலும் இறங்கினார். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் நிதி உதவி பெற்று, பள்ளியின் உள்கட்டுமானப் பணிகளைச் செய்திருக்கிறார்.தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். மாணவர்களை களப்பணியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, வில்லுப்பாட்டு மூலம் பாடம் நடத்துவது என மாணவர்களுக்கு பாடங்கள் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கிறார்.

கனவு ஆசிரியர்!

 ‘‘ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, மே மாத விடுமுறையில், மாணவர்களோடு கிராமங்களுக்குச் செல்வேன். அரசுப் பள்ளியில் கிடைக்கும் சலுகைகள், நன்மைகளை வில்லுப்பாட்டு மற்றும் வீதி நாடகமாக நடத்துவேன். மூன்று ஆண்டுகள் தொடர் பிரச்சாரம் காரணமாக, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.  இது வரை தனியார் பள்ளியில் படித்துவந்த 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை, எனது பள்ளியில் சேர்த்திருக்கிறேன். முன்பு, இந்த நான்கு கிராமங்களுக்கும் வந்துகொண்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து, இப்போது வருவது இல்லை. காரணம், மூன்று குழந்தைகளைத் தவிர, மீதி 137 பேர் எங்கள் பள்ளியில் சேர்ந்துவிட்டார்கள். அடுத்த  கல்வி ஆண்டில், அந்த மூன்று குழந்தைகளும்  அரசுப் பள்ளிக்கு வந்துவிடுவார்கள் என நம்புகிறேன்” எனச் சிரிக்கிறார் சாந்தி.

 தனது சிறப்பான பணியின் மற்றொரு அம்சமாக, பள்ளிக்குள் ஐந்து துறைகளை ஏற்படுத்தி இருக்கிறார் சாந்தி.

 ‘‘நிர்வாகத் துறை, சீரமைப்புத் துறை, பராமரிப்புத் துறை, சுகாதாரத் துறை, கட்டுப்பாட்டுத் துறை என்பதுதான் அவை. இதற்காக, மாணவர் குழுவை அமைத்து,  சில பொறுப்புகளை அளித்திருக்கிறேன். மாதம் ஒரு முறை அரசு மருத்துவர்களை  பள்ளிக்கு வரவழைத்து, மருத்துவப் பரிசோதனை செய்வோம். அப்போது, மாணவர்களை ஒருங்கிணைப்பது, சுகாதாரத் துறை. தினமும் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று, வகுப்பைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா  எனக் கண்காணிப்பது பராமரிப்புத் துறை. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பொறுப்பு. கடந்த ஆண்டு எங்கள் பள்ளி, மாவட்ட அளவில் சுகாதாரமான பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 10,000  ரூபாய் பரிசு வென்றது” என்கிறார் சாந்தி.

கனவு ஆசிரியர்!

 பள்ளியில், இயற்கை விவசாய முறையில், காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, பங்கேற்ற குழந்தைகளுக்கு காய்கறிகளைப் பரிசாக வழங்குகிறார்.

‘‘மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய மாதிரியும் ஆச்சு; அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்குப் பரிசு கொடுத்த மாதிரியும் ஆச்சு” எனப் புன்னகைக்கிறார், இந்தப் புதுமையான கனவு ஆசிரியை.

கு.ஆனந்தராஜ்

அ.நவீன்ராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism