Published:Updated:

ஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்!

ஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்!

“அட! படிக்காத மேதை காமராஜர், ஆங்கிலத்தில் பொளந்து கட்டுறாரே” என்ற சந்தோஷமான குரல் கூட்டத்தில் ஒலித்தது.

ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாமல், எல்லாக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் திறந்தவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர். அவருடைய பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி, மாநிலம் முழுவதும், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

ஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்!

அன்றைய தினம், திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பளீர் வேட்டி சட்டையில் காமராஜர் முகமூடி அணிந்து, மகிழ்ச்சியுடன், வந்தனர். சின்னமுத்தூர் கிராமத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முத்தூர் பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர். காமராஜர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப்  பேசி, அனைவரையும் ஈர்த்தனர்.

ஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்!

நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த பள்ளியின் தலைமை  ஆசிரியை கிருஷ்ணவேணி, “கல்வியால் மட்டுமே மக்களின் நிலையை உயர்த்த முடியும் என காமராஜர் நம்பினார். எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு வரவழைக்க நினைத்தார். அதற்குத் தடையாக இருப்பது பசி என்பதை அறிந்து, சத்துணவுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தும்போது, தமிழக அரசிடம் போதிய நிதி இல்லை. அதற்காக, சோர்ந்து பின்வாங்கிவிடவில்லை. தனது  கடுமையான முயற்சியால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார். காமராஜர், பிறந்த நாளில் மட்டுமே நினைக்கப்படவேண்டியவர் அல்ல. நமது, வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் அவரது பங்களிப்பு இருக்கிறது” எனப் பெருமிதத்தோடு பேசினார்.

ஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்!

‘‘அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் தமிழர்களுக்கு ஒரு பெரிய இடம் இருக்கிறது. அதற்கான விதையை விதைத்தவர், படிக்காத மேதை  காமராஜர்தான். உலக நாடுகள் பலவும் இந்தியர்களைப் பாம்பாட்டிகள் என்று நினைத்துக்கொண்டிருந்தன. இந்தியர்கள் பாம்பை மட்டும் அல்ல, கணினியின் எலிகளையும் பிடித்துக் கலக்குவார்கள் என்பதை உலகுக்கு நிரூபித்தோம். குறிப்பாக, தமிழர்களின் அறிவுத்திறனும் உழைப்பும் உலக நாடுகளை வியக்கவைக்கிறது. இதற்கெல்லாம் காரணமான காமராஜரை மறக்கக் கூடாது” என கணீர் குரலில் பேசினார், கிருஷ்ணன் என்ற மாணவர்.

அமெரிக்கப் பத்திரிகை ஒன்று காமராஜரை ‘கிங் மேக்கர்’ என்று புகழ்ந்து எழுதியது, சத்தியமூர்த்தி அய்யா அவர்களுடனான நட்பு, மக்கள் நலப்பணித் திட்டங்கள் ஆகியவற்றை அழகான ஆங்கிலத்தில் பேசி அசரவைத்தார், நான்காம் வகுப்பு படிக்கும் நிஷ்யா.
பேரணி, பேச்சு முடிந்ததும் பள்ளியை நோக்கி கம்பீர நடைபோட்டார்கள்.

ஆங்கிலம் பேசிய அழகு காமராஜர்!

‘‘எங்கள் பள்ளி, 2011-2012-ம் ஆண்டுக்கான சிறந்த பள்ளி விருதைப் பெற்றுள்ளது. பள்ளியில் ஒவ்வொரு வாரமும் பேச்சு வாரம், கட்டுரை வாரம், கவிதை வாரம், அறிவியல் வாரம் என அறிவித்து, பல்வேறு போட்டிகள் நடத்துவாங்க. இந்த வாரம் காமராஜர் விழா நடத்துறதா சொன்னதும், ரொம்ப சந்தோஷப்பட்டோம். அவரைப் பற்றி நாங்க ஏற்கெனவே நிறையப் படிச்சிருக்கிறதால, உடனடியாக கதைகள், கவிதைகளைத் தயார் செய்தோம்” என்கிறார்  இலக்கியா என்ற மாணவி.

“அதெல்லாம் சுலபமா செய்துட்டோம். இந்த வேட்டி கட்டுறதுதான் கஷ்டமா இருந்தது. இடுப்பிலேயே நிற்கலை. ‘நம்முடைய கல்விக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அவர் பட்ட கஷ்டத்தைவிடவா இது பெரிய கஷ்டமா இருக்கப்போகுதுனு நினைச்சுக்கிட்டேன். அவ்வளவுதான்... வேட்டி தானாக இடுப்பில் நின்னுடுச்சு” என்று கிருஷ்ணன் சொல்ல, எல்லா மாணவர்களும் கலகலவெனச் சிரித்தார்கள்.

பா.குமரேசன்

ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு