Published:Updated:

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“அல்வாவுக்கு திருநெல்வேலி, மாம்பழத்துக்கு சேலம் மாதிரி, நட்புக்கு ஸ்கூல் டேஸ். எங்க நட்பில், அன்லிமிடெட் நெருக்கமும் குறும்பும் இருக்கும்” என்று பஞ்ச் அடிக்கிறார் லோகேஷ். சென்னை, ஆலந்தூர், ஏ.ஜே.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளியின் கில்லிகளில் ஒருவர்.

“சர்வதேச நண்பர்கள் தினம் வருது. நட்பு பற்றி உங்க கருத்துகள், கதைகள், கலாட்டாக்களைச் சொல்லுங்க” என்றதற்குத்தான் இந்த பஞ்ச்.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“நானும் லோகேஷும் செவன்த் ஸ்டாண்டர்டு படிக்கிறோம். மரம், சுவர்னு எதைப் பார்த்தாலும் குஷியா ஏறிடுறது என்னோட பழக்கம். போன வருஷம் ஒரு நாள், சாப்பிட்டு முடிச்சுட்டு கிரவுண்டு பக்கம் வந்தேன். பேஸ்பால் வலையைக் கட்டும் கம்பி மேலே ஒருத்தன் கிடுகிடுனு ஏறிட்டு இருந்தான். ‘அட யாருடா சேம் ப்ளட்?’னு பின்னாடியே ஏறி, ஹலோ சொன்னேன்.  அப்படித்தான் எங்க நட்பு ஆரம்பிச்சது’’ என்று ஃப்ரெண்ட்ஷிப் ஃப்ளாஷ்பேக் ஓட்டினார் சுந்தர். தங்களின் ‘உயர்ந்த’ நட்பை நிரூபிக்க, கம்பி மீது ஏறி சலாம் அடித்தார்கள்.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“நாங்க எவ்வளவு ஃபீலிங்கா நட்பு பற்றி சொல்லவந்தோம். கம்பி மேலே ஏறினாங்களாம்... நட்பு வந்துச்சாம். அடச்சே, இறங்குங்கடா” என்று கடுப்பாக அவர்களை இறக்கினார் காவ்யா.

“நட்புக்கு நான் ஒரு பஞ்ச் சொல்றேன். நட்புனா, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்துக்கணும். ஆனா, ஒருத்தரை ஒருத்தர் யார்கிட்டேயும் விட்டுக்கொடுக்கக் கூடாது. காவ்யாவும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். டீச்சர்ஸ்கூட, ‘ரெண்டு பேரும் வேற வேற இடத்துல உட்காருங்க’னு கடுப்பா சொல்ற அளவுக்கு ஒட்டிக்கிட்டு இருப்போம். எப்பவாவது சண்டை வந்துடும். அப்போ, காவ்யா பற்றி யாராவது ஏதாவது சொன்னா, ‘அவளை எனக்குத் தெரியும். பேசாமல் போ’னு சொல்லிடுவேன். அதே மாதிரிதான் காவ்யாவும்” என்று தோழியை அணைத்துக்கொள்கிறார் திலகவதி.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“இந்த கேர்ள்ஸ் இப்படித்தான் நல்லாக் கொஞ்சிக்குவாங்க. திடீர்னு பேசாம இருப்பாங்க. நாங்க அப்படி இல்லை. பயங்கரமா கலாய்ச்சுப்போம்,  திட்டிப்போம். ஆனாலும் பேசாம இருக்க மாட்டோம்” எனப் பெருமையோடு சொன்னார் சஞ்சய் கிருஷ்ணன்.

“அதெல்லாம் சும்மா. பாய்ஸ் சண்டை போட்டுக்கிட்டு கோஷ்டியாத் திரியிற கதைகள் தெரியும். நாங்க பேசாம இருக்கிறது ஒரு நாள், அதிகபட்சம் ஒரு வாரம் அவ்வளவுதான்” என்றார் பிரியதர்ஷினி.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“அந்த நேரத்துல சண்டைப் போட்ட ஃப்ரெண்ட்ஸ் நடுவுல, மாட்டிக்கிற ஆளுங்க அவ்ளோதான். இதோ, இந்த மெளனிகாவும் தஸ்லீமா பானுவும் அப்படித்தான். ‘பவுச் கேட்டேன் கொடுக்கலை, கூப்பிட்டப்ப பார்க்கலை’னு ஏதோ ஒரு காரணத்துக்கு  கோவிச்சுப்பாங்க. அந்த நேரத்தில், இவள் சொல்றதை அவள்கிட்டேயும், அவள் சொல்றதை இவள்கிட்டேயும் சொல்லியே நமக்கு தொண்டைத் தண்ணி வத்திடும்” என நொந்துகொண்டார் கிருத்திகா.

“சண்டை நேரத்தில், ஓலை எழுதுற மாதிரி துண்டுச் சீட்டில் எழுதி, பாஸ் பண்ணிக்கிறது நட்பின் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம். அந்தச் சீட்டுகளைப் பத்திரமா வெச்சிருந்து, சமாதானம் ஆனதும் எடுத்துப் பார்த்து,  ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சொல்லிக் கலாய்ச்சுப்போம்” என்றார் மெளனிகா.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!
நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“அந்தக் காலாய்ப்பு ஓவராகி, மறுபடியும் கோவிச்சுக்கிட்டது உண்டு. ஆனாலும், யாரால தப்பு எனப் புரிஞ்சுக்கிட்டு ‘ஸாரிடி செல்லக்குட்டி, மன்னிச்சுக்கடி புஜ்ஜிக்குட்டி’னு சிரிக்கவெச்சு மறுபடியும் சேர்ந்துடுவோம்” எனத்  தோழியின் மூக்கைத் திருகுகிறார் தஸ்லீமா பானு.

“பார்த்தீங்களா... பொண்ணுங்க சண்டையைப் பத்தி ஆரம்பிச்சதும், மெகா சீரியல் மாதிரி சொல்லிட்டே போறாங்க. நாங்க அப்படி இல்லை. ரெண்டு பேருக்குள்ளே பிரச்னை வந்தா, ஷார்ட் ஃபிலிம் மாதிரி சட்டுனு முடிப்போம். ‘தெரியாமப் பண்ணிட்டேன். ஏன்டா மூஞ்சியைத் தூக்கிவெச்சுட்டு இருக்கே. பேசுவியா மாட்டியா?’னு கேட்டு, காதைத் திருகி சேர்ந்துடுவோம். அப்படித்தானே ஸ்ரீராம்?” என நண்பன் காதைத் திருகினான் ரிக்கி பிரவீன்.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!
நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

“எங்களைக் கேட்டால், நட்புதான் இன்றைய வேகமான உலகில் சந்தோஷத்தை தக்கவெச்சுக்கிட்டு இருக்குனு சொல்வோம்” என்றார் எஸ்தர்.

அவரது தோழியான ரேஷ்மா, ‘‘இப்போ, கூட்டுக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைஞ்சுபோச்சு. சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன் என யாரும் நம்ம பக்கத்தில் இல்லை. ஒரு குழந்தை இருக்கிற வீட்டில் இன்னும் மோசம். விளையாடவும் மனம்விட்டுப் பேசவும் ஆள் இருக்காது. எப்படா ஸ்கூலுக்குப் போவோம். நண்பர்களைப் பார்ப்போம்னு இருக்கும். வீட்டில் பகிர்ந்துக்க முடியாத விஷயங்களைத் தோழிகளிடம் பகிர்ந்துக்க முடியுது” என்கிறார்.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

‘‘சம வயசுல இருக்கிறவங்களோடு மட்டும்தான் நட்பு வெச்சுக்கணும்னு கிடையாது. அப்பா, அம்மா, ஆசிரியர்களிடமும் நண்பர்கள் போல இருக்க முடியும். அந்த வகையில, எங்க ஸ்கூல் ஆசிரியர்களிடம் நாங்க நண்பர்களா இருக்கோம்” என்றவர்கள், அந்தப் பக்கமாக வந்த ஆசிரியர்களை அழைத்து, தங்கள் கலாட்டா மேளாவில் சேர்த்துக்கொண்டார்கள்.

நண்பர்கள் தினம்... அன்பின் திருவிழா!

‘‘இந்த மாதிரி அன்பான ஆசிரியர்களும், நம்மோட எல்லா விஷயங்களையும் பகிர்ந்துக்கும் நண்பர்களும் இருக்கிற வரை, ஒவ்வொரு நாளும் நண்பர்கள் தினம்தான், ஒவ்வோர் நிமிஷமும் கொண்டாட்டம்தான்” என்றார்கள் உற்சாகமாக.

கே.யுவராஜன்

ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு