Published:Updated:

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

வீரதீர சாகசங்கள் புரிந்த இந்தியக் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது, நேஷனல் பிரேவரி அவார்டு எனப்படும் ‘ராஷ்ட்ரிய வீர்த புரஸ்கார் விருது’. அதைப் பெற்ற சுட்டி வீரர்/வீராங்கனைகளைப் பற்றி சொல்லும் பகுதி இது.

இப்பி பாஸர்

அன்புள்ள இப்பி பாஸர்...

உங்களுக்கு எங்களின் வீரவணக்கம்.

நவீன ஜான்சி ராணியாக வரலாற்றில் பதிந்தவரே... உலகப் புகழ்பெற்ற வீரமங்கை ‘ஜோன் ஆஃப் ஆர்க்’ எப்படிப்பட்டவர் என்பதை நேரில் காட்டியவரே... அருணாச்சலப் பிரதேசத்தின் ‘புர்காமத்’ என்ற உங்கள் கிராமத்தில், பெண் குழந்தைகளை அதிகம் படிக்கவைக்க மாட்டார்கள். பூப்பெய்திய சிறுமியை பள்ளியைவிட்டு நிறுத்திவிடுவதும், சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைப்பதும் சமூகப் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.

‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்’

என்று மகாகவி பாரதியார் என்றோ எழுதியது, இன்னும்  முழுவதுமாக நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. ஆனால், உங்கள் குடும்பம் வித்தியாசமானது இப்பி பாஸர். 10-ம் வகுப்பு முடித்த உங்களை, மேலும் படிக்க பெற்றோர் அனுமதிகொடுத்து, ஊரையே ஆச்சர்யப்பட வைத்தார்கள். உங்கள் பாட்டி மட்டும் அவ்வப்போது ஏதாவது சொல்வார். அவரைவிடவும் வயதான உங்கள் அப்பாவின் அத்தைக்கு 70 வயது. அவருக்கு, நீங்கள் படிப்பது பிடித்திருந்தது.

வீரவணக்கம் வெற்றிக் கடிதம்!

உங்கள் புர்காமத் கிராமத்தில், ஓலை வீடுகளே இருந்தன. ஊரின் தென்கோடியில்,  ஒரு தபால் நிலையம் உண்டு. மற்றபடி, மருத்துவ சிகிச்சை என்றால், கிட்டத்தட்ட 25 கிலோமீட்டர் நடக்க வேண்டும். சாலையே இல்லாத கடினப் பாதையில் ஒருமுறை மட்டுமே பேருந்து வந்துபோகும். கிராமத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதை விரிவாக்கப் பணிக்குப் போய்விடுவார்கள். உங்கள் அப்பா, அண்ணனும் அப்படியே. அம்மாவும் சித்தாளாக செல்வார்.

அன்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறை நாள். விடுமுறை என்றால், நீங்களும் ரயில்பாதை வேலைக்குச் செல்வீர்கள். ஆனால் அன்று, வீட்டுப் பாடங்கள் நிறைய இருந்ததால் செல்லவில்லை. பாட்டியும் அப்பாவின் அத்தையும் வீட்டைவிட்டு வெளியே போக முடியாதவர்கள். அத்தைப் பாட்டிக்கு வலிப்பு நோயும் இருந்தது.

காலை 11 மணி இருக்கும். திடீரென ஒரே இரைச்சல். கூப்பாட்டுச் சத்தம். நீங்கள் வெளியே ஓடிவந்து பார்த்தீர்கள். ஊரின் வடகோடியில் இருந்த குடிசைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. மனிதர்கள் இங்கும் அங்கும் ஓடினார்களே ஒழிய, என்ன செய்வது என்று தெரியவில்லை. சிலர், பதறியபடி அழிவை வேடிக்கை பார்த்தார்கள்.

இப்பி பாஸர், நீங்கள் சட்டென காரியத்தில் இறங்கினீர்கள். வேகமாக ஓடி, தபால்நிலையத் தொலைபேசியில், தீயணைப்புத் துறைக்கு தகவல் சொன்னீர்கள். பிறகு, ஒரு சணல் பையைத் தலையில் அணிந்து, உடலை மூடிக்கொண்டீர்கள். எரியும் வீடுகளுக்குள் நுழைந்து, தவித்த மனிதர்களை வெளியே இழுத்து வந்தீர்கள். அப்போதுதான், மற்றவர்களுக்கும் இப்படிச் செய்யும் யோசனை வந்தது. தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு, சாக்குப் பைகளைச் சுற்றிக் காப்பாற்றவும் சொல்லிக்கொடுத்தீர்கள்.

உங்கள் குடிசையிலும் தீ பரவியது. வாளி, மண் குடங்கள், அண்டா என எதில் எடுத்து நீர் ஊற்றினாலும், அடங்காத தீயைக் கிளப்பியது காற்று. எப்படித்தான் அப்படி ஒரு யானை பலம் உங்களுக்கு வந்ததோ... வீட்டுக்குள் ஓடினீர்கள். அசையவே முடியாத அத்தைப் பாட்டி, கழியைத் தாங்கி நடக்கும் பாட்டி, தூங்கிக்கொண்டிருந்த அக்கா மகள் என ஒவ்வொருவரையும் தோளில் தூக்கி வந்து, வெளியே தள்ளிக் காப்பாற்றினீர்கள்.

மாட்டுவண்டிகூட வரத் தயங்கும் உங்கள் புர்காமத் கிராமத்துக்கு, ராட்சச தீயணைப்பு வண்டிகள் வந்து, தீயை அணைத்தன. ஊரே அசந்துபோனது. பொருட்களை இழந்தாலும் உயிர்ச்சேதம் இல்லை. உங்களுக்கும் பெரிய தீக்காயங்கள். தீயால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார்கள்.

‘இப்பி பாஸர் படித்தவள். அவளது புத்திசாலித்தனம் ஊரையே காப்பாற்றிவிட்டது. நமது பெண் குழந்தைகளும் இப்படி புத்திசாலித்தனமாகவும், வீரமாகவும் இருக்க வேண்டும்’ எனப் பெரியவர்கள் பாராட்டினார்கள். 2010-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், உங்கள் வீரத்துக்கு மரியாதை செய்யும் விதமாக, ‘பாபு கெய்தானி விருது’ வழங்கப்பட்டது.

இப்பி பாஸர், உங்கள் வீரத்துக்கு எங்கள் சல்யூட்!

இப்படிக்கு,

சுட்டி இந்தியா.

ஆயிஷா இரா.நடராசன்

கண்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு